கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது. பல நாள்களாக இரட்டை இலக்கத்தில் இருந்துவந்த கோரேனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டே நாள்களில் 300-ஐத் தாண்டி, தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவர்கள்

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்காகத் தங்கள் உயிரைப் பணயம்வைத்து சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மீது தமிழக ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருக்கிறார்கள். மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு, மக்கள் அனைவரும் கைதட்டுங்கள் என்றார் பிரதமர் மோடி. தட்டும் கரண்டியும் சங்குமாக வீதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வந்து மருத்துவர்களின் சேவையை மக்கள் ‘பாராட்டி’விட்டார்கள்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவர்கள் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியபோதிலும், இதுவரை ஒருவர் மட்டுமே மரணமடைந்துள்ளார். இது மிகப்பெரிய ஆறுதல். அதற்குக் காரணம், அரசு மருத்துவர்களின் மகத்தான சேவைதான். இவர்களுக்குத் தேவை வெறும் கைதட்டல் மட்டுமல்ல…

அரசு மருத்துவர்கள்

மருத்துவர்கள், கடவுளுக்கு சமமானவர்கள் என்று நம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை குறிப்பிட்டார். அந்தக் கடவுள்களின் நியாயமான கோரிக்கைகளை மட்டும் இன்னும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார் முதல்வர். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சிலர் நம்மிடம் வேதனையுடன் பேசினார்கள்.

“பொதுமருத்துவத்தில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப சுகாதார மையங்கள் உட்பட, இங்கு சிறப்பான சுகாதாரக் கட்டமைப்பு இருக்கிறது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதற்காக சில கோரிக்கைகளை முன்வைத்து, அரசு மருத்துவர்களாகிய நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதற்கு முன்பு எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு பல முறை கொண்டுசென்றோம். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாததால், போராட்டத்தில் இறங்கவேண்டியதாயிற்று.

காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு முறை மீண்டும் கொண்டுவர வேண்டும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு, கலந்தாய்வு மூலம் மீண்டும் பணியிடம் வழங்கப்பட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கைகள். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்று கேட்கிறோம். 2019-ல் அரசாணை மூலமாக 950 மருத்துவர் பணியிடங்களைக் குறைத்துவிட்டனர். எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் மருத்துவப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அந்த எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார்கள். அதனால், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் குறைந்துவிட்டது.

போராடிய அரசு மருத்துவர்களைச் சந்தித்த ஸ்டாலின்

இதனால் தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளது என்பதை அரசிடம் எடுத்துச்சொன்னோம். ஆனால், அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது, கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை வேலைக்கு எடுத்துள்ளார்கள். 950 மருத்துவர் பணியிடங்களைக் குறைக்காமல் இருந்திருந்தால், இப்போது அவசரகதியில் புதிதாக 500 மருத்துவர்களை எடுத்திருக்கத் தேவை ஏற்பட்டிருக்காது. நாங்கள் சொன்னபோதே மருத்துவர்கள் நியமனங்களைச் செய்திருந்தால், இன்றைய சூழலை சமாளிக்க இன்னும் வசதியாக இருந்திருக்கும். இந்நேரம் அவர்கள் நன்கு பயிற்சி பெற்றிருப்பார்கள். ஆனால், புதியவர்கள் என்பதால் இப்போதுள்ள சிஸ்டம் குறித்து அவர்களுக்கு சொல்லித்தர வேண்டியிருக்கிறது. அதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.

எங்களின் இன்னொரு முக்கியக் கோரிக்கை, பதவிக்கேற்ற ஊதியம். இது வெறும் ஊதியம் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. ஒரு மருத்துவ மாணவர் படித்துமுடித்து ஸ்பெஷலிஸ்ட் ஆவதற்கு 14 ஆண்டுகள் ஆகின்றன. அதன் பிறகு அவர் பணியில் சேர்கிறார் என்றால், விரைவாக அவர் பதவி உயர்வு பெற வேண்டும். அதற்கான ஏற்பாடு இல்லையென்றால், அடுத்த தலைமுறையினருக்கு மருத்துவம் படிப்பதற்கு ஆர்வமே இல்லாமல் போய்விடும். அப்படியே மருத்துவர் ஆகிவிட்டாலும், தமிழ்நாட்டில் அரசுப் பணியில் இருக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். எங்கு அதிக வருமானம் கிடைக்கிறதோ, அங்கு போய்விட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதை அரசிடம் எடுத்துச்சொன்னோம். ஆனால், அரசு கேட்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு முதுகலைப் பட்டப்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு மீண்டும் வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். இந்த இடஒதுக்கீடு இருந்ததால்தான், நம்முடைய ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திலும் மருத்துவர் பணியில் காலியிடம் இல்லாமல் பார்த்துக்கொண்டோம். நீட் வந்ததால் அந்த இடஒதுக்கீடு போய்விட்டது. அதை மீண்டும் கேட்கிறோம். நாங்கள் போராட்டம் நடத்தியபோதுகூட, அவசர அறுவைசிகிச்சை போன்ற முக்கிய சேவைகள் எதுவும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொண்டோம். புறநோயாளிகள் பிரிவு மட்டும்தான் பாதிக்கப்பட்டது. அதையும்கூட, எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் நோக்கத்திற்காக மட்டும்தான் செய்தோம். ஆனால், எங்களுடன் பேச்சுவார்த்தையே அரசு நடத்த முன்வரவில்லை. நாங்கள் போராட்டம் நடத்தியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களை சந்திக்கக்கூட இல்லை. கடைசியில், முதல்வர் கேட்டுக்கொண்டதால் போராட்டத்தை முடித்தோம்.

எங்கள் கோரிக்கைகைளில் ஒன்றைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. அதுமட்டுமல்ல, போராட்டம் நடத்தியதற்காக அரசு எங்களைப் பழிவாங்குகிறது. 118 மருத்துவர்களை தொலைதூரத்துக்கு இடமாற்றம் செய்தது அரசு. குடும்பம் ஓர் இடத்தில் நாங்கள் வேறோர் இடத்தில் என இன்றுவரை மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த மனஉளைச்சலால், எங்கள் போராட்டத்தில் முன்னின்ற மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

மருத்துவர் லட்சுமி நரசிம்மன்

பல சிரமங்களுக்கு மத்தியிலும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகிறோம். கொரோனா வைரஸ் மிக எளிதாக தொற்றிக்கொள்ளக்கூடியது. எனவே, கொரோனா பாதிப்புக்கு ஆளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அதற்கான பிரத்யேக ஆடையை அணிய வேண்டும். தலை முதல் பாதம் வரையிலான அந்த ஆடையை அணிந்துவிட்டால், அடுத்த ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர்கூட குடிக்க முடியாது. சிறுநீர்கூட கழிக்க முடியாது. காரணம், ஒருமுறை அதைக் கழற்றிவிட்டால் பிறகு புதிதாக வேறோர் ஆடையைத்தான் அணிய வேண்டும். தற்போது அந்த ஆடை குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், மிகவும் கவனமாக அதைப் பயன்படுத்துகிறோம்.

ஸ்பெயின், இத்தாலி போன்ற மருத்துவத்தில் ஜாம்பவான்கள் இருக்கும் நாடுகளில் கொரோனாவால் கொத்துக்கொத்தாக மரணங்கள் நிகழும்போது, தமிழக அரசு மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிகச்சிறப்பாக சிகிச்சை அளித்துவருகிறோம். இதைத் தமிழக மக்கள் அனைவரும் பார்த்துவருகிறார்கள். இந்த நேரத்தில், முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். நாங்கள் ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவர் ஆனவர்கள் அல்ல. நீட் இல்லாமல் மருத்துவர்கள் ஆகி, இவ்வளவு சிறப்பாகவும் திறமையாகவும் பணியாற்றிவருகிறோம். தமிழகத்தில் இத்தனை உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

அரசு மருத்துவர்கள்

மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று வாய்வார்த்தையில் சொன்னால் மட்டும் போதுமா? அதைவிட அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுதானே முக்கியமானது. மருத்துவர்களைப் பழிவாங்குவது மிகமோசமான அணுகுமுறை. அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், கைதட்டினால் மட்டும் போதுமா? டிரான்ஸ்ஃபர் என்ற பழிவாங்கல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள், தங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து, 300 கி.மீ, 400 கி.மீ தொலைவுக்கு அப்பால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவருகிறார்கள். இந்த நேரத்தில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும், பழிவாங்கல் நடவடிக்கையைக் கைவிடுமாறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுத அரசு மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளார்கள். கடவுள்கள் மீது முதல்வர் கருணைகாட்டுவாரா?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.