இந்தியாவில் இன்று (ஏப்ரல் 3) முதல் டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங்க் சேவையைத் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளின் தொடக்க நாளான மார்ச் 29 அன்று டிஸ்னி ப்ளஸ் சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு முக்கிய காரணம் அதிக மக்கள் ஐ.பி.எல் போட்டிகளை ஹாட்ஸ்டாரில் பார்க்கும் போது டிஸ்னி ப்ளஸ் பற்றி அறிய முடியும் என்பதே ஆகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது அமலில் இருக்கும் 21 நாள் ஊரடங்கைப் பயன்படுத்தி அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்ற முனைப்பில் டிஸ்னி நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது முழுவீச்சில் தொடங்கப்படும் முன்பே சோதனை ஓட்டமாக மார்ச் 11 அன்று சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தனது ஹாட்ஸ்டார் செயலி மூலம் டிஸ்னி ஸ்டீரிமிங்க் சேவையை வழங்கியது. இந்நிலையில் இந்தியாவில் டிஸ்னி முழு சேவையையும் தொடங்கிய பின்னர் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலும் தனது சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது டிஸ்னி நிறுவனம்.

இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஹாடஸ்டாரின் சேவை இந்தி, தமிழ், தெலுங்கு என எட்டுப் பிராந்திய மொழிகளில் வரவுள்ளது. இதோடு எல்லா மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களையும் இதில் காணமுடியும். தற்போதுள்ள ஹாட்ஸ்டாரின் எல்லா சந்தாதாரர்களுக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான தொகையை இனிமேல் செலுத்த வேண்டி வரும். டிஸ்னி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவையில் டிஸ்னி, பிக்ஸார், மார்வெல், லுகாஸ் ஃபிலிம் மற்றும் நேஷனல் ஜியோக்ராஃபி ஆகிய நிறுவனங்களின் படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஸ்டீரிமிங்க் சேவைக்காக இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இரண்டு சந்தா திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் திட்டமான டிஸ்னி ப்ளஸ்-ஹாட்ஸ்டார் விஐபி, ஒரு வருடத்திற்கு ₹ 399க்குக் கிடைக்கிறது. இதில் மார்வெல் சினிமாடிக் யூனிவர்சின் அனைத்துப் படங்கள், லயன் கிங்க், ஃப்ரோஸன் 2, அலாதின் மற்றும் டாய் ஸ்டோரி 4 ஆகியவை இடம்பெறும் . இவற்றோடு மிக்கி மவுஸ், டொரேமான், டம்போ, பிக் சிட்டி க்ரீன்ஸ் போன்ற இதர கார்ட்டூன் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இதற்கு முன் இந்தத் திட்டத்தின் விலை வருடத்திற்கு ₹ 365-ஆக இருந்தது.

இதன் அடுத்த சந்தா திட்டமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் ஒரு வருடத்திற்கு ₹ 1,499க்குக் கிடைக்கிறது. இதில் மேலே கூறப்பட்ட விஐபி திட்டத்தின் பயன்களும் கிடைக்கும். இவற்றுடன் கூடுதலாக டிஸ்னி ப்ளஸ்ஸின் ஒரிஜினல் தொடர்கள் அனைத்தும் கிடைக்கும். இதனுடன் பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்களான HBO, ஃபாக்ஸ் மற்றும் ஷோடைம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளையும் காண முடியும். ப்ரீமியம் திட்டத்தின் விலை இதற்கு முன் வருடத்திற்கு ₹999-ஆக இருந்தது .
மேலும் விளம்பரங்களுடன் இலவசமாகக் காண விரும்புபவர்கள், எப்போதும் போல மேட்ச் அனாலசிஸ், ஹைலைட்ஸ், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி சேனல்கள் ஆகியவற்றைக் காண முடியும்.

இந்த குவாரன்டைன் சமயத்தில் இந்தியச் சந்தைக்குள் நுழைவது டிஸ்னி நிறுவனத்திற்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தினசரி பேப்பர் மற்றும் வார இதழ்கள் வெளிவராத காரணத்தால் மக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாம்டு அதிகரித்துள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி கண்காணிப்பு நிறுவனமான பார்க்(BARC), தகவல் மற்றும் அளவீட்டு நிறுவனமான நீல்சன் (Nielsen) “குவாரன்டைன் தினங்களுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்பவர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் மட்டுமே 6 சதவிகிதமாக உயர்ந்ததுள்ளது” எனத் தனது ஆய்வு முடிவுகளில் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்தியாவில் ஸ்ட்ரீமிங் சேவையில் திடமாகக் காலூன்றி நிற்கும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, ஜீ5 போன்றவற்றுடன் போட்டியிட்டு டிஸ்னி ப்ளஸ் தரமான சேவையை வழங்குமா என்பதை இனி வரும் காலங்களில்தான் பார்க்க முடியும். ஆனால், டிஸ்னி இல்லாமலேயே ஹாட்ஸ்டார்க்குதான் அதிக சந்தாதாரர்கள் உண்டென்பது குறிப்பிடத்தக்கது.