இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாட்டில் நோய் பரவலைத் தடுக்க, மத்திய அரசு 14 -ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கொரோனா நோய்த் தொற்றால் சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியப் பொருளாதாரமும் வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளது. ஏற்கெனவே இந்தியா பல்வேறு பட்ட பொருளாதாரச் சிக்கல்களில் இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது.

IKEA

நோய்த் தொற்றின் பாதிப்புகள் அதிகரித்த வண்ணமாகவே இருக்கும் நிலையில், நாட்டை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க உதவும் பொருட்டு, பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு நாட்டின் பல்வேறு நிறுவனத் தொழிலதிபர்களும் தங்கள் பங்கு நிதியை அளித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

Also Read: `தண்ணீர், உணவு எதுவும் இல்லை!’ -கொரோனா சிகிச்சையில் உள்ளோரை, மரத்தடியில் அமர வைத்த தேனி மருத்துவமனை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சார்பில் 100 கோடி அரசுக்கு அளித்திருந்த நிலையில், தற்போது அந்தக் குழுமத்தின் சார்பில் அதன் மற்றோர் அமைப்பான நாராயணா ஹெல்த் கேர் நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக 100 தனிமைப்படுத்தப்பட்ட பிரத்தியேக சிகிச்சை அறைகளை ஏழை மக்களுக்கென வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், அங்கு நாராயணா ஹெல்த் கேரின் மருத்துவக் குழுவினரைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை அளிக்கவும் முடிவுசெய்துள்ளது, இன்ஃபோஸிஸ் நிறுவனம்.

தெலங்கானா மாநிலத்தில் இயங்கிவரும் IKEA இந்தியா நிறுவனம், கொரோனா நோய் சிகிச்சைக்கு ஹைதராபாத், கச்சிபௌலி பகுதியில் விளையாட்டு விடுதி (sports hostel) ஒன்றினை 200 பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகளாக மாற்றி அமைத்துள்ளது.

Infosys

முன்னதாக அந்த நிறுவனம், நோய்த் தொற்றின் பரவலைத் தடுக்கும் நோக்கில், மாநிலத்தில் அமைந்துள்ள தங்கள் நிறுவனக் கிளைகள் அனைத்தையும் அரசின் அறிவிப்புக்கு முன்னரே தற்காலிகமாக மூடியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் அறைகளின் தட்டுப்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகளாக மாற்றப்பட்ட நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களின் இவ்வகைப் பங்களிப்பு, பொதுமக்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.