தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சென்னையில் மட்டும் 81 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் அதைவிட வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்திருக்கிறது. முன்னதாக, நேற்று 75 பேருக்கும், நேற்று முன் தினம் 110 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த வேகத்தில் போனால், தமிழகம் விரைவில் 1000-ஐ தொட்டு விடும் போல் தெரிகிறது.
மக்கள் எந்த அளவிற்கு ஊரடங்கை கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து கொரோனா வேகம் குறையும் அல்லது கூடும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுதி வாரியாக சென்னையின் கொரோனா பாதிப்பை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, ராயபுரம் (பிராட்வே, ராயபுரம், புதுப்பேட்டை) – 10, அண்ணாநகர் (அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம்) – 7, கோடம்பாக்கம் (சைதாப்பேட்டை, மாம்பலம்) – 6, தண்டையார்பேட்டை (வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை) – 5, தேனாம்பேட்டை (சாந்தோம், கோடம்பாக்கம்) – 4, பெருங்குடி (மடிப்பாக்கம்) – 3, அடையார் (கோட்டூர்புரம், திருவான்மியூர்) – 2, வளசரவாக்கம் (போரூர்) – 2, திருவொற்றியூர் (எண்ணூர்) – 2, திரு.வி.க நகர் (பெரம்பூர்) – 1, ஆலந்தூர் – 1, சோழிங்கநல்லூர் (பனையூர்) – 1.