உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கிக் கிடக்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் வீரியம், இன்னும் மருந்து கண்டுபிடிக்காதது எனக் கொரோனா மீதான அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் தற்போது வரை 10,15,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,12,035 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

கொரோனாவால் தற்போது வரை உலகம் முழுவதும் 53,167 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் 7,49,857 பேரில் 7,12,161 பேரின் உடல்நிலை சீராக இருக்கிறது. 37,696 பேரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. நாடுகளின் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 29,874 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,169 பேர் அமெரிக்கவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி 2,069 ஆக இருக்கிறது. இதில் 155 பேர் குணமாகி உள்ளனர். 53 பேர் பலியாகியுள்ளனர்.

மீதம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்ட்ரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப்புக்கு கொரோனா நெகட்டிவ்!
கொரோனா பரிசோதனைகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா முதற்கட்ட பரிசோதனை முடிவுகளில் நெகட்டிவ் என்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதிலும் ட்ரம்ப்புக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக வெள்ளை மாளிகையில் பணியாற்றிய பலருக்கும் வெள்ளை மாளிகை வந்து சென்ற பல உலக நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், ட்ரம்ப்புக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவாங்கா ட்ரம்ப் பிப்ரவரி மாதம் முதலே வொர்க் ஃப்ரம் ஹோம் மோடில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.