கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஷாப்பிங் மாலில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்த பெண் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண், அரியலூர் மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிரோன் மூலம் எச்சரிக்கை

இதையடுத்து, அவரின் டிராவல் ஹிஸ்ட்ரி அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் எடுத்துவருகின்றனர். மேலும், அந்த மாலில் வேலைபார்த்த மற்ற இருவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் சென்னை மாநகராட்சி ஒர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அந்த மாலுக்குச் சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு கொரோனா தொற்று தொடர்பாக ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

சீல் வைக்கப்பட்ட தெரு

சென்னையில் கொரோனா பாதித்த 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக காவல்துறை அறிவித்துள்ளது. புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 8 இடங்களிலும் கூடுதல் கண்காணிப்பில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த 8 பகுதிகளிலும் கொரோனா தொற்று உறுதியானவர்களின் வீட்டின் அருகில் உள்ளவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். அந்தப்பகுதி மக்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தால் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பிவருகின்றனர்.

இந்த நிலையில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா புதுப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ட்ரோன் மூலம் அந்தப்பகுதியை போலீஸார் கண்காணித்தனர். ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் மூலம் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. ரோந்து வாகனங்கள் செல்ல முடியாத தெருக்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

டிரோன் மூலம் எச்சரிக்கை

இதுகுறித்து பிரேமானந்த் சின்ஹா கூறுகையில், “மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். 144 தடை உத்தரவை மீறி வெளியில் தேவையில்லாமல் சுற்றுபவர்களை எச்சரித்துவருகிறோம். தென்சென்னையில் 4 இடங்கள் உள்ளன. அதை மாநகராட்சி, சுகாதாரத்துறையுடன் இணைந்து தனிமைப்படுத்தியுள்ளோம். ட்ரோன் மூலம் கண்காணிப்பதோடு எச்சரிக்கையை விடுக்கவுள்ளோம்” என்றார்.

சென்னை புதுப்பேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை ஆகிய பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. புதுப்பேட்டையில் உள்ள நாராயணன் நாயக்கர் தெரு, அதைச் சுற்றியுள்ள 16 சந்துகள், லெப்பை தெரு, வேலாயுதம் தெரு, அய்யாசாமி தெரு என 35-க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. மக்கள் அந்த தெருக்களை விட்டு வெளியில் செல்லாமலிருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய சாலை

புதுப்பேட்டை, புரசைவாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை உட்பட சீல் வைக்கப்பட்ட 8 இடங்களை சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் மதுசூதனன் மண்டல துணை கமிஷனர் ஆகாஷ் ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் முடங்கியுள்ளனர். புதுப்பேட்டையில் உதவி இன்ஜினீயர் முத்துராமன் தலைமையில் மாநகராட்சியின் ஊழியர்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தனர். அப்போது `உங்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று உதவி பொறியாளர் முத்துராமன் மக்களிடம் கூறினார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை புதுப்பேட்டைக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களின் வீடுகள், அவர்கள் குடியிருந்த தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதியைச் சேர்ந்த 4 பேர் டில்லி மாநாட்டுக்குச் சென்று வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகள், அந்தப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட தெரு

டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு சென்னையில் திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த 50,000 பேரை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அறிகுறிகள் இருக்கிறதா என்றும் கணக்கெடுத்துள்ளோம். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளோம். அதனால் இந்தப்பகுதியில் சுகாதாரப்பணியாளர்கள் முகாமிட்டுள்ளனர்” என்றார்.

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடியிருந்த பகுதிகளை தனிமைப்படுத்தி சமூகப் பரவலைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.