தமிழகத்தில் இருந்து சென்று டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், தாங்களாகவே முன்வந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். அதில், தேனி மாவட்டத்திலிருந்து டெல்லி சென்ற 24 நபர்களை பரிசோதனை செய்ததில், 20 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், மருத்துவமனை தங்களுக்குப் போதிய உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கவில்லை என சிகிச்சையில் உள்ளவர்கள் குற்றம்சாட்டினர்.

மரத்தடியில் அமர்ந்திருக்கும் கொரோனா சிகிச்சையில் உள்ளோர்

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்களை, உத்தமபாளையம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் வைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று 20 பேரும், உத்தமபாளையம் அழைத்துச் செல்ல காலையில் தயார்படுத்திய தேனி அரசு மருத்துவமனை, அனைவரையும் மரத்தடியில் அமரவைத்து, மதிய உணவு, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்காமல், இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Also Read: `வைட்டமின்-இ; கற்றாழைச்சாறு…!’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு

இது தொடர்பாக சிகிச்சையில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் நம்மிடையே பேசியபோது, “உத்தமபாளையம் கல்லூரி உங்களுக்கு வசதியாக இருக்கும் கிளம்புங்கள் என காலையில் சொன்னார்கள். உடனே, அனைவரும் கிளம்பினோம். ஆம்புலன்ஸ் வந்தது. அதிலும் ஏறி அமர்ந்துவிட்டோம். ஆம்புலன்ஸ் கிளம்பியது. ஆனால், மருத்துவமனையை விட்டு வெளியே செல்லவில்லை. மருத்துவமனைக்கு உள்ளே இருக்கும் மரத்தடிக்கு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. என்ன ஆச்சு என கேட்டோம்.

மரத்தடியில் அமர்ந்திருக்கும் கொரோனா சிகிச்சையில் உள்ளோர்

`உத்தமபாளையம் கொண்டு செல்லவில்லை. மேலிடத்தில் இருந்து சொன்னதும்தான் கொண்டு செல்வோம்’ என கூறினார்கள். `அப்படியென்றால், நாங்கள் வார்டில் இருந்திருப்போமே… எதுக்கு இப்படி ஆம்புலன்ஸில் ஏற்றி கஷ்டப்படுத்துகிறீர்கள்?’ எனக் கேட்டோம். பதில் ஏதும் இல்லை. காலையில் புறப்பட்டோம். இப்போ மணி மதியம் 3-ஐ கடந்துவிட்டது. தண்ணீர், உணவு எதுவும் இல்லை. வெட்ட வெளியில் அமர்ந்திருக்கிறோம்” என்றார் வேதனையோடு.!

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களை உத்தமபாளையம் கொண்டு வரக் கூடாது என அங்குள்ள உள்ளூர் வாசிகள் பிரச்னை செய்கின்றனர். அதனால்தான் தாமதம்.!” என்றார்.

எந்தவித முன் ஏற்பாடும் இல்லாமல், உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று உள்ளோர்களை, மிகவும் எளிதாக அணுகியது மட்டுமல்லாமல், பல ஆயிரம் பேர் வந்து செல்லக் கூடிய அரசு மருத்துவமனையில் வெட்ட வெளியில் அமர வைத்து வேடிக்கை பார்ப்பது அலட்சியத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.!

Also Read: “எங்க ஏரியாவில் கொரோனா சிகிச்சை வார்டா?” -அச்சத்தால் போராட்டம் நடத்திய தேனி கிராம மக்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.