மனிதக் குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா அரக்கனின் பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது வரை உலகம் முழுவதும் ஒரு மில்லியன் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 50,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,45,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இத்தாலியில் மட்டும் அதிகபட்சமாக 13,000 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நாடுகளிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளது தனிக் கதை.

வைரஸ் என்ற ஒற்றைப் பெயரை முன்வைத்து மொத்த உலகமும் தன் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இப்படி இக்கட்டான சூழலில் இந்த மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை அமோகமாக இருந்துள்ளது. இதனால் அங்கு சிறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் மக்கள் அமைதியிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
Also Read: #FlattenTheCurve: கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!
அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படாது. அதனால் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் பாதுகாப்புகளுக்காகக் கைத்துப்பாக்கிகளை வைத்திருப்பர். அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும் அந்நாட்டு மக்கள் 2 மில்லியன் துப்பாக்கிகள் அதாவது 20 லட்சம் துப்பாக்கிகளை வாங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அதே ஆண்டு நியூ டவுனில் உள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும் 2013-ம் ஆண்டு துப்பாக்கி விற்பனை உச்சத்தைத் தொட்டது.

அதன் பிறகு தற்போது, தொற்று நோய் உள்நாட்டு அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சியுள்ள நிலையில் மீண்டும் 2-வது முறையாகத் துப்பாக்கி விற்பனை உயர்ந்துள்ளது. 2015-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்குவதற்கு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். ஆனால், இந்த நிலை கடந்த மாதம் முதல் மாறத்தொடங்கியது. வைரஸ் பரவலால் நிச்சயமற்ற எதிர்காலத்துக்குத் தயாரான மக்கள் தங்களின் அத்தியாவசியப் பொருள்களான உணவு, டாய்லெட் பேப்பர் ஆகியவற்றை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். அதேபோல் துப்பாக்கிகளையும் அதிகளவில் வாங்கியுள்ளனர்.
“ஏராளமான மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர் மற்றும் ஏராளமான நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனால் குறிப்பிட்ட அளவு சிவில் கோளாறு ஏற்படக்கூடும் என்று மக்கள் பதற்றமாக உள்ளனர். அரசின் நிலை மோசமாகத் தொடங்கினால் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு கவலை இருக்கும். அதன் விளைவாகவே துப்பாக்கிகளை வாங்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்” என ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் திமோலி லிட்டர் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையில் இந்த அதிகளவிலான துப்பாக்கி விற்பனை அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.