திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு கே.என்.நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். யு.கே.ஜி படிக்கும் இவருடைய மூத்த மகன் ஜீவானந்தத்தோடு நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். `கொரோனா பரவிக்கிட்டு இருக்கிற சூழல்ல குழந்தையை எதுக்காக கலெக்டர் ஆபீஸூக்கு கூட்டிக்கிட்டு வந்துருக்கீங்க’ என கலெக்டர் அலுவலக வரவேற்பரையில் காத்திருந்தவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர்.

கொரோனா

`பையன் சேர்த்து வச்ச உண்டியல் பணத்தை கலெக்டர்கிட்ட கொரோனாவுக்கு நிதியா கொடுக்கலாம்னுதான் சார்’ என சந்திரசேகர் கூறியிருக்கிறார். `கலெக்டர்கிட்ட பணம் கொடுக்கக் கூடாது. முதலமைச்சரின் வங்கிக் கணக்குக்கு டி.டி மூலமாகப் பணத்தைக் கட்டிவிட்டு வேண்டுமானால் கலெக்டரை வந்து பாருங்கள்’ என அங்கிருந்த அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

உடனே கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வங்கிக்குச் சென்று, உண்டியலை உடைத்து அதிலிருந்து 3,798 ரூபாயை எடுத்து முதலமைச்சரின் வங்கிக் கணக்கில் கட்டியிருக்கின்றனர். பணத்தைக் கட்டிவிட்டு ரசீதோடு கலெக்டரை சந்திக்கப் போனபோது, `கலெக்டர் மீட்டிங்கில் இருக்கிறார். சந்திக்க வாய்ப்பில்லை’ என அதிகாரிகள் கூறுயிருக்கின்றனர். கலெக்டரைச் சந்திக்க முடியாமல் கடைசியில் வருத்தத்தோடு வீடு திரும்பியிருக்கின்றனர்.

சிறுவன் ஜீவானந்தம்

இதுகுறித்து தகவலறிந்ததும் சந்திரசேகரைத் தொடர்புகொண்டு பேசினோம். “சேமிப்புங்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியம்னு என் பசங்ககிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். அதைப்போலவே பிறந்தநாள், விஷேச நாள்களில் நான் கொடுக்கிற பணத்தை செலவு பண்ணாம, பையன் உண்டியல்ல போட்டு சேமிச்சிகிட்டு வந்தான். இந்தக் கொரோனாவுக்காக எல்லாரும் நிதி கொடுத்துக்கிட்டு இருக்கிறதை டிவியில பார்த்த என் பையன், `அப்பா நாமளும் பணம் கொடுக்கலாமா… நான்தான் உண்டியல்ல சேர்த்து வச்சிருக்கேனே’ன்னு சொன்னான். இந்த வயசுல நம்ம பையனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குதேன்னு `சரிப்பா உண்டியலை எடுத்துக் கொடு, நான் போய் கலெக்டர் ஆபீஸ்ல கட்டிட்டு வர்றேன்னு’ சொன்னேன். `நான் சேர்த்து வச்ச பணத்தை என் கையாலத்தான் கொடுப்பேன்’னு அவனும் என்கூட வந்து கொரோனாவுக்கு நிதி கொடுத்திருக்கான். கலெக்டரை சந்திக்கலாம்னு நினைச்சோம். அவர் மீட்டிங்ல இருந்ததால முடியலை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.