இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வார காலமாகிவிட்டது. வேலை வேலை வேலையென்று பரபரப்பு வாழ்க்கையிலிருந்தவர்களும், பள்ளிக்கூடத்துக்குள் அடைந்துகிடந்த மாணவர்களும் தற்போது வீட்டுக்குள் அடங்கியிருக்கும் சூழல். அனைவருக்குமே வீட்டுச்சிறைதான்! குடும்பத் தலைவிகளாக, குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண்களுக்கு மொத்த குடும்பமும் வீட்டுக்குள் இருப்பது புதிய அனுபவமாகவே இருக்கிறது. இந்த ஒரு வாரம் எப்படியிருந்தது என்று சில பெண்களிடம் கேட்டோம்.

ரோஸ்லின் குடும்பத்துடன்

ரோஸ்லின் (தொழில்முனைவு ஆலோசகர்)

எப்போதும் பணிநிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்றுவந்துகொண்டு இருப்பேன். வீட்டிலிருக்கும் டென்சன், பரபரப்பெல்லாம் வெளியே செல்லும்போது குறைந்துவிடும். புத்துணர்ச்சி வந்துவிடும். தற்போது வீட்டினுள்ளேயே இருப்பது சற்று மனஅழுத்தமாகத்தான் உள்ளது. அதேவேளை, வீட்டிலிருப்பவர்களோடு முழுநேரத்தையும் செலவிட முடிவது மகிழ்ச்சியான விஷயம். மூன்று வேளையும் சுடச்சுட சமையல் செய்து பரிமாறுகிறேன். நிறைய மனம்விட்டுப் பேசுகிறேன். வீட்டிலிருப்பவர்களும் எனது வேலைகளுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். என் தோழிகளுடன் செல்பேசியில் உரையாடுவதற்கும் தற்போது நேரம் கிடைப்பதால் அதுவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

குடும்பத்தினருடன் லஷ்மி விசாகன்

லஷ்மி விசாகன் (ஆசிரியை)

24 மணி நேரமும் ஓய்வாக இருந்தாலும், அத்தனை நேரமும் சமையலறையிலேயே இருப்பதுபோல உள்ளது. வேலைக்குச் செல்லும்போது காலையில் அவசர அவசரமாகச் சமையலை முடித்துவிட்டு பள்ளிக்குக் கிளம்பிவிடுவேன். அது கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதாகப்பட்டது. ஆனால், தற்போது மூன்று வேளையும் சமையல் செய்யும்போது வேலை தொடர்ச்சியாக இருப்பது போன்றே தெரிகிறது. இடையிடையே நேரம் வாய்க்கையில் நூல்கள் வாசிக்கிறேன். எங்கள் குழந்தைகள் ஓவியங்கள் வரைவது, தொலைக்காட்சி பார்ப்பது எனப் பொழுதுபோக்குகிறார்கள். மகனுக்கு 10 வது முழு ஆண்டுத்தேர்வு தள்ளிப்போனது அவனுக்குச் சற்று வருத்தமாக உள்ளது. அவனால் முழு ஈடுபாட்டோடு இந்த விடுமுறையை அனுபவிக்க முடியவில்லை. நிதிச்சிக்கலும் இருக்கிறது. ஆனால், இப்போது உலகம் உள்ள சூழலை நினைக்கும்போது இதைத் தாங்கித்தான் ஆக வேண்டியுள்ளது.

அலுவலகப் பணியில் ராதா முருகன்

ராதா முருகன் (ஐ.டி நிறுவன ஊழியர்)

நான் பல ஆண்டுகளாக நைட் ஷிஃப்ட்லதான் பணியாற்றி வருகிறேன். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடி அதே அலுவலக நேரத்தில் பணியாற்றுகிறேன். இதனால் என் பிள்ளைகளோடு கூடுதல் நேரத்தைச் செலவிட முடிகிறது. என் போன்றவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, மற்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்குக் கிடைப்பது கடினம். தற்போது அலுவலகத்துக்குப் பயணம் செய்யும் நேரம் மிச்சப்படுகிறது. நானாகவே தனித்து பணியாற்றும்போது எனது பணித்திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக இதை நினைக்கிறேன். வொர்க்-லைஃப் பேலன்ஸ் பண்ண முடியுது. விரைவாகவும் வேலையை முடிக்க முடிகிறது. என்னவொன்று, அலுவலக நண்பர்களைச் சந்திப்பது மிஸ்ஸாகிறது. எனது குழுவின் பணியைக் கண்காணிப்பதும் ஒருங்கிணைப்பதும் மிஸ்ஸாகிறது. வீட்டிலேயே முழுநேரமும் இருப்பதால் சில நேரம் போரடிப்பதாகத் தோணுகிறது.

பிள்ளைகளுடன் சுதா ராஜ்மோகன் …

சுதா ராஜ்மோகன் (குடும்பத்தலைவி)

கட்டாயத் தேவைக்காக இருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ளேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நாம பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை நினைத்து நிம்மதி. எனினும், மற்றவர்களின் துயரத்தைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. போக்குவரத்து, ஹோட்டல் செலவுகள்னு நிறைய குறைஞ்சிருக்கு. என்னோட கணவர் அரசு நிர்வாகப்பணியில் இருப்பதால் இப்போதும் பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது. எங்க பொண்ணு ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு வந்து எங்களோடு தங்கியிருப்பது மகிழ்ச்சி. பிள்ளைகளோடு நிறைய பேசிக்கொள்ள முடியுது. வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் நிம்மதியாகத்தான் உணர்கிறேன்.

பணியில் சத்யவீணா

சத்யவீணா (ஊராட்சி மன்றத் தலைவி)

நான் ஊராட்சி மன்றத்தலைவியாக இருப்பதால் தற்போதும் பணிநிமித்தமாக வெளியே சென்று வந்துகொண்டுதான் இருக்கிறேன். என் கணவர், விவசாயத்தில் ஈடுபட்டு வருவதால் ஓய்வில்லாமல் உழைப்பார். ஊரடங்கு காரணமாகத் தற்போது அவருக்கு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது. எங்கள் மகன் எப்போதும் நண்பர்களோடுதான் வெளியே சென்றுவருவான். ஆனால், கொரோனா பயம் காரணமாக அவனும் தற்போது வீட்டிலேயே இருக்கிறான். அந்த வகையில் மகிழ்ச்சிதான். தற்போது எங்களுடைய ஊரில் கொரோனா பரவாமல் தடுக்க, பிளீச்சிங் பவுடர் தெளித்தல், லைசால் கரைசல் தெளித்தல் போன்ற பணிகளைக் கவனித்து வருகிறேன். ரேஷன் கடைக்கு வரும் மக்கள், போதிய இடைவெளிவிட்டு நிற்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன். காலையில் வீட்டில் சமையல் முடித்துவிட்டு இந்தப் பணிகளைப் பார்க்கக் கிளம்பிவிடுவேன். எனவே, எனக்கு வாழ்க்கை எப்போதும்போல்தான் இருக்கிறது.

ஆக, இந்தியா முழுமைக்குமான ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் பெண்களின் தினசரி வாழ்க்கையில் பெரிதும் மாற்றமில்லை. குடும்பத்தோடு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புதான் அவர்களுக்கான சந்தோஷமாக உள்ளது. ஆனால், வேலைப்பளு சற்று அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. குடும்பத்திலுள்ள அனைவரும் வேலைகளைப் பகிர்ந்துகொண்டால் அடுத்து வரும் இரண்டு வாரங்களும் குடும்பத்தலைவிகளும் சந்தோஷமாக அனுபவிப்பார்கள் அல்லவா?

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.