‘கொரோனா’ தடுப்புப் பணிகளுக்காக, துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியை அறிவித்துள்ளார். அதற்கான கடிதத்தை, மார்ச் 28-ம் தேதி வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் நேரில் வழங்கினார். ‘மிக அவசரம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், `முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

வேலூர் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட கடிதம்

அதற்குத் தேவையான மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் தேவையான மருந்துப் பொருள்களை அரசு மருத்துவ மனைகளுக்கு வாங்குவதற்காக ரூ.1 கோடியை ஒதுக்கிப் பரிந்துரைக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ‘‘வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியிருக்கும் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும், புதியதாக உதயமான திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிறது.

ரூ.1 கோடியை மொத்தமாக வேலூர் கலெக்டரிடம் கொடுத்தது தவறு. அதில், கால் பங்கை பிரித்து திருப்பத்தூர் கலெக்டரிடம் கொடுத்திருந்தால் ஆம்பூர், வாணியம்பாடி மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும். கதிர் ஆனந்த் ஓரவஞ்சனை செய்கிறார்’’ என்று சிலர் வேண்டுமென்றே விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், மீண்டும் ‘மிக அவசரம்’ என்று குறிப்பிட்டு மற்றொரு கடிதத்தை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருளுக்கு அனுப்பியிருக்கிறார், கதிர் ஆனந்த்.

திருப்பத்தூர் கலெக்டருக்கு அனுப்பப்பட்ட கடிதம்

அதில், `ஆம்பூர், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் உள்ள ‘கொரோனா’ வார்டுக்குத் தேவையான மருந்துப் பொருள்களை வாங்குவதற்காக என்னுடைய தொகுதி நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கிப் பரிந்துரைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய எம்.பி கதிர் ஆனந்த், “ரூ.1 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த அன்றே தெளிவாக பேட்டி கொடுத்திருந்தேன். நிறையப் பேருக்கு அது தெரியவில்லை.

ஆம்பூர், வாணியம்பாடியிலும் ‘கொரோனா’ வார்டு திறக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதியையும் இதிலிருந்து பிரித்துத் தர வேண்டுமென்று ‘லிஸ்ட்’ கொடுத்திருந்தேன். ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகே, திருப்பத்தூர் கலெக்டரிடம் நிதியைப் பிரித்து நானே கொடுப்பதற்கான அனுமதி கிடைக்கும். அதற்கு முன் அனைத்து தேவைகளுக்காகவும் வேலூர் கலெக்டரைத்தான் அணுக முடியும். இது, என்னை விமர்சிப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது’’ என்றார் கொதிப்புடன்.

Also Read: ’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு!’ – இன்று மட்டும் 75 பேருக்கு பாதிப்பு உறுதி #NowAtVikatan

இதனிடையே, எம்.வி.குப்பம் அருகே உள்ள சொக்கரிஷி குப்பத்தைச் சேர்ந்த குமரேசன் என்ற ஓட்டுநர் ‘டயாலிசிஸ்’ செய்துகொள்வதற்காக ஆட்டோவில் தன் மனைவியுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். போலீஸ் கெடுபிடியால், அவர்களை மருத்துவமனை முன் இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோ சென்றுவிட்டது. ‘டயாலிசிஸ்’ முடிந்து திரும்பிய குமரேசன், தன் வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்தார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் நிஜாமுதீன், ஒன்றியத் தலைவர் ஜான் பாஷா ஆகியோர் தகவலறிந்து, கட்சிக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் குமரேசனையும் அவர் மனைவியையும் மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல், ஏராளமான டயாலிசிஸ் நோயாளிகளும் மருத்துவமனைக்கு வந்துசெல்ல முடியாமல் தவித்துவருகிறார்கள். `அவர்களுக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை விரைவாகக் கிடைத்திட வேண்டும்’ என்று வேலூர், திருப்பத்தூர் கலெக்டர்களிடம் எம்.பி கதிர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.