கொரோனா என்ற வார்த்தை உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனாவால் நாடே லாக்டவுனில் உள்ளது. சமீப நாட்களாக
கொரோனா, லாக்டவுன் என வார்த்தைகள் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. எப்போதுதான் இந்த வார்த்தைகள் நம்மை விட்டு
விலகும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த பெயரை காலத்திற்கும் அழைப்பதுபோல பிறந்த
குழந்தைகளுக்கு கொரோனா, லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர் இரு வேறு குடும்பத்தினர்.
உத்தரப்பிரதேசத்தின் குகுண்டு கிராமத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு லாக்டவுன் எனப் பெயரிட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள
லாக்டவுனின் தந்தை, எனது மகன் லாக்டவுன் நேரத்தில் பிறந்துள்ளான். கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரதமரின்
அறிவுறுத்தலின் படி நாடே லாக்டவுனில் உள்ளது.
இந்த நாடே எடுத்த ஒரு முடிவை பெயராக வைக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை பிறந்தது தொடர்பான சுபநிகழ்ச்சியை தற்போது ஒத்திவைத்துள்ளோம். லாக்டவுன் முடிந்தவுடன் குழந்தைக்கான பெயர்சூட்டும் விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த வாரம் கொரோக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா எனப் பெயரிட்டனர். இது குறித்து பேசிய குழந்தையின் மாமா, குழந்தைக்கு பெயரிடுவது குறித்து குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்கினேன். இந்த வைரஸ் கொடூரமானது தான். பலரையும் கொல்வது உண்மைதான். ஆனாலும் இது மக்களை ஒன்றிணைத்துள்ளது. பல நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுத்துள்ளது.இந்த குழந்தையும் மக்கள் ஒற்றுமையின் அடையாளமாகவே இருக்கும். என தெரிவித்துள்ளார்.