திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 1,16,393 வீடுகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் செல்வதற்கான அனுமதி அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி வீடு, வீடாகச் சென்று வழங்கினார். இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமி, “திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144-ன் கீழ் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!
கொரோனா வைரஸ் தாக்கமானது இரண்டாம் நிலையிலிருந்து, மூன்றாம் நிலையான சமூக பரவலுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில் முழுக்க முழுக்க பொது மக்கள் நலன்களை மட்டுமே கருத்தில்கொண்டு, இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பொது மக்கள் இதை உணராமல், தங்கள் வழக்கமான நடைமுறையை மாற்றிக்கொள்ளாமல் அடிக்கடி எவ்வித அத்தியாவசிய தேவையுமின்றி வெளியே சுற்றித்திரிகிறார்கள்.
மிக முக்கியமாகச் சில இளைஞர்கள் ஊரடங்கை அலட்சியப்படுத்துகின்றனர். நோயின் தீவிரத்தை உணராமல் பைக்கில் சுற்றித்திரிகின்றனர். பெற்றோர்கள் இதைக் கண்டிக்க வேண்டும். மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவது மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களின் நலனைக் காக்கவே நாங்கள் கடமையைச் செய்கிறோம். காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இரவுபகல் பாராமல் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு வேலை பார்க்கிறோம். இது எல்லாமே உங்களின் நலனுக்காகத்தான். இதைப் புரிந்துகொள்ளாமல் அநாவசியமாக வெளியே சுற்றுகிறீர்கள்.
இதைச் சரி செய்யும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள வரை அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல அனுமதி அட்டை அளிக்கப்படவுள்ளது. இந்த அனுமதி அட்டையானது வார்டு வாரியாக இரண்டு நிறங்களில் சிவப்பு மற்றும் ஊதா ஆகிய இரண்டு நிறங்களில் வழங்கப்படும்.
சிவப்பு நிற அனுமதி அட்டை பெற்றவர்கள் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களிலும், ஊதா நிற அனுமதி அட்டை பெற்றவர்கள் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர். இந்த அனுமதி அட்டையைப் பயன்படுத்தி காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவர். எனினும், மேற்கண்ட நாள் மற்றும் நேரம் ஆகியவை மருத்துவ அவசரத்துக்காக விலக்கு அளிக்கப்படும். இந்த அனுமதி அட்டையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து 15 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவர். இந்த அனுமதி அட்டையைப் பயன்படுத்தி நடக்கும்போதும், வாகனத்தில் செல்லும்போதும், பொருள்களை வாங்கும்போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், வெளியே வரும்போது கண்டிப்பாகக் குடும்ப அட்டையை உடன் எடுத்து வர வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு 66,200 அட்டைகளும் 10 பேரூராட்சிகளுக்கு 40,193 அட்டைகளும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு 10,000 அட்டைகளும் என மொத்தம் 1,16,393 அனுமதி அட்டைகள் அளிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பை அளித்து உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதைப் பின்பற்றாமல் வெளியே சுற்றித்திரிகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்” என்றார் ஆட்சித் தலைவர் கந்தசாமி.