உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் தாக்கம் மிகக் கொடூரமானது. இந்தியாவில், தற்போது நாடு முழுவதும் 21 நாள்கள் லாக்-டவுண் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்புப் பணிகள் தவிர்த்து மற்ற பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி, இன்று கட்சியின் செயற்குழு கூட்டத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்தினார். இதிலும் கொரோனா குறித்த பேச்சுதான் இருந்தது. கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “காங்கிரஸ் கட்சி, கொரோனாவை இந்த தேசம் வெல்ல துணை நிற்கும்” என்றார்.

மன்மோகன் சிங்

கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், “மத்திய அரசு இன்னும் நெருக்கடியின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி, மத்திய அரசை தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும், மத்திய அரசுக்கு உதவ வேண்டும். அதேநேரத்தில், அது செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்” என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “கொரோனா வைரஸ் மூத்தவர்களையும், நீரழிவு நோய் உள்ளவர்களையும், இதய நோய் உள்ளவர்களையும், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களையும் அதிகம் பாதிக்கிறது. அனைத்து மாநிலங்களும் மூத்த குடிமகன்களுக்கான ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, “கொரோனா குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் கடந்த இரண்டு மாதங்களாகப் பார்க்கிறோம். பிப்ரவரி மாதம் தொட்டே வல்லுநர்களிடமும் பேசிவருகிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை ஏற்பாடும் செய்யாமல், மத்திய அரசு லாக்-டவுண் உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

ராகுல் காந்தி

இறுதியாகப் பேசிய சோனியா காந்தி, “நாடு தற்போது பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வரும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. கொரோனா வைரஸ், சொல்லமுடியாத துயரத்தை நமக்குக் கொடுத்திருக்கிறது. இதனால் இந்த நாட்டில் உள்ள ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் அவர்களுடன் நிற்க வேண்டும்.

21 நாள்கள் லாக்-டவுண் உத்தரவு தேவையான ஒன்றுதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் அதை முறையான திட்டமிடுதல் இல்லாமல் செயல்படுத்தியதால் குழப்பமும் வலியும் ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உண்ண உணவும், படுக்க இடமும் இன்றி நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சோனியா – ராகுல்

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. தொடர் பரிசோதனைகள் மூலமே கண்காணிக்கப்படுகிறது. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற சுகாதாரப் பணியாளர்கள் என அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். மாஸ்க்குகள், மற்ற பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் போதுமான அளவில் இருக்கிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தும் கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.

நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அரசு, அவர்களின் வாழ்வை மனத்தில் கொண்டு சிறப்பு திட்டத்துடன் வர வேண்டும். கொரோனா காரணமாக நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

Also Read: `இது கொரோனாவைவிடக் கொடியது; பெண் மருத்துவர்களை கற்களை வீசி விரட்டிய மக்கள்!’ – தொடரும் சோகம்#Video

இறுதியாக, “கொரோனா வைரஸ், அரசியல் கொள்கை, மதம், ஜாதி, வயது உள்ளிட்ட எந்த பிரிவும் பார்க்கவில்லை. இன்று நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சவாலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.