டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களை போலீஸார் தீவிரமாக தேடிப்பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தும், தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், 5 ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்தவர்களின் பட்டியலை ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இதில் டெல்லி, ஆந்திரா, தமிழகம், குண்டூர், மலேசியா எனப் பல மாநிலங்களில் தீவிரமான தேடுதலைத் தொடங்கியிருக்கிறார்கள்.

டெல்லியில், கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லீக் ஜமாத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் கலந்துகொண்டனர். இதில் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 250 பேர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலம் கொரோனா பரவியது தற்போது தெரியவந்துள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், கூட்டம் முடிந்த பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு, துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னைக்கு கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், புதுதில்லி-ராஞ்சி ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் ஏபி சம்பா்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகிய 5 ரயில்கள் சென்றுள்ளன. நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை போ் என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லாத போதிலும், ஒவ்வொரு ரயிலிலும் 2,000 போ் வரை பயணித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த 5 ரயில்களிலும் பயணித்தவர்கள் விவரங்களை ரயில்வே நிர்வாகம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரிடம் அளித்துள்ளது.

அவர்களில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் யார் யார் என்பதை அதிகாரிகள் தங்களிடம் உள்ள பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்துவருகின்றனர். இந்த நிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 போ், கடந்த மார்ச் 13-ம் தேதி, ஏபி சம்பா்க் கிராந்தி ரயில் மூலம் கரீம் நகா் மாவட்டத்துக்குச் சென்றுள்ளதும், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல, டெல்லி டு ராஞ்சி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரானோ தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் பி-1 பெட்டியில் பயணம் செய்த 60 பயணிகள் விவரங்களைப் பெற்றுள்ள மாவட்ட நிர்வாகம், அவர்களின் இருப்பிடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி, 23 பேருடன் பயணித்த பெண் ஒருவருக்கு கொரானோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவா், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட இருவா், வேறு சிலருடன் கடந்த மார்ச் 18-ம் தேதி, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-8 பெட்டியில் பயணித்திருப்பதும், வேறு இரண்டு போ் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸிலும், மேலும் இருவர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பயணம்செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்டு வந்த டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அரசின் உத்தரவை மீறியதால்தான் தமிழகத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்றுகுறித்து கடுமையாக விசாரித்துவருகிறார்கள்.