கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் பொருள்களை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள 995 கூட்டுறவு அங்காடிகள் மற்றும் மூன்று இலங்கை அகதிகள் கூட்டுறவு அங்காடி, 4 மகளிர் அங்காடி என 1002 கூட்டுறவு அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி பல கட்டங்களாக இந்தப் பொருள்கள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் ஒவ்வொரு அங்காடியிலும் குடும்ப அட்டைதாரர்கள் இடைவெளி விட்டு வரிசையில் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு நபராக வரவழைத்து நிவாரணப் பொருள்களை வழங்குகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை நகர்ப் பகுதிக்குட்பட்ட திருக்கோகர்ணம், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், அங்காடிப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களை இடைவெளிவிட்டு நாற்காலி போட்டு அமர வைத்து ஒவ்வொரு நபராக வரவழைத்து இலவசப் பொருள்களைக் கொடுத்துள்ளனர். இதில், சிறப்பம்சமாக கோவில்பட்டி கூட்டுறவு அங்காடி பகுதியில் வெயிலில் பொதுமக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, பந்தல், தோரணம் போட்டு நாற்காலியில் அமரவைத்து பொருள்களை வழங்கி அசத்தியுள்ளனர்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள்

அங்காடிப் பணியாளர்களிடம் பேசினோம். “இந்த நேரத்தில் ரொம்ப கவனமாகவே ரேஷன் பொருள்களைக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். இப்போ, கொஞ்ச நாளாகவே பொதுமக்கள் இடைவெளிவிட்டு நின்னுதான் பொருள்களை வாங்கிக்கிட்டுப் போறாங்க. ஆனா, முன்பைவிட இப்போ கொஞ்சம் கூடுதலான நேரம் நிற்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் எல்லாரையும் நாற்காலி போட்டு அமர வச்சு இந்தப் பொருள்களைக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். திருக்கோகர்ணம் பகுதி ரேஷன் கடை சாலையில் இருப்பதால், பந்தல் போட முடியலை. அதே நேரத்தில அவங்கள ரொம்ப நேரம் வெயிலில் உட்கார வைக்காமல் உடனே அனுப்பிவிட்டோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.