`இந்தியா முழுக்கப் பரப்பிட்டேன், ஆனால், தமிழகத்துக்குள் மட்டும் நுழைய முடியல’ என்று கொரோனா சொல்வது போலவும், `அங்கே போகாதே, அது விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சரா இருக்கிற மாநிலம்’ என்று கொரோனாவை அனுப்பிய சைனாவை எச்சரிப்பதுபோல் `ஏழாம் அறிவு’ படத்தை வைத்து மீம்ஸ் உருவாக்கி அமைச்சர் விஜயபாஸ்கரை புகழ்ந்து தள்ளிய அந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எடப்பாடியும் பார்த்திருக்கிறார்.

விஜயபாஸ்கர்

கொரோனா பீதி தமிழகத்தில் ஏற்பட்ட பின்பு காணும் ஊடகமெங்கும் விஜயபாஸ்கரே தெரிந்தார். ஏகப்பட்ட ப்ரமோஷன் மீம்ஸ்களையும், அவர் நின்றுகொண்டே சாப்பிடுவது, நோயாளிகளைக் கருணையுடன் விசாரிப்பது, வியர்வை வழிய ஊடகங்களில் பேசுவது என தேவதூதன் போல சித்திரித்து அவருடைய ஐ.டி. டீம் ஆபீஸர்கள் பரப்பிக்கொண்டே இருந்தார்கள்.

Also Read: றெக்கை கட்டிய விஜயபாஸ்கர் மீம்ஸ்… ஓரங்கட்டிய எடப்பாடி பழனிசாமி!

அது எந்த அளவுக்கு என்றால், பிற மாநில மீடியாக்கள் தமிழகத்தின் போதிதர்மராகவே புகழ்ந்து தள்ளும் அளவுக்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் எடப்பாடி முதலமைச்சராக இருப்பதை மறக்கும்படி செய்துவிட்டார்கள். இதே டெக்னிக்கைத்தான் கடந்த ஆண்டு, குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோதும் செய்தார்.

அதிமுக ஐடி விங்

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையிலும் தன்னை அதிகமாக முன்னிறுத்துகிறார் என்று கடுப்பான எடப்பாடி, கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று பற்றிய அப்டேட்டுகளை அவரே அறிவித்தார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துக்கொண்டிருக்கிறார். விஜயபாஸ்கர் தற்காலிகமாக ஓரங்கட்டப்பட்டார்.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “கட்சிக்கென்று ஐ.டி.விங் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை ராஜ்சத்யன் நிர்வகித்துக்கொண்டிருக்கிறார். இது அரசின் சாதனைகள், முதல்வர் எடப்பாடியின் புகழ், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்குப் பதில் என்று அப்டேட்டாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், எங்கள் அமைச்சர்களில் சிலர் தங்களை ப்ரமோஷன் செய்துகொள்ள, செலவு செய்து ஐ.டி.டீமை சொந்தமாக வைத்துள்ளனர். இதற்காக மாதத்துக்கு பல லட்சங்கள் செலவு செய்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி

துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கரூர் விஜயபாஸ்கர், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சொந்த ஐ.டி டீம் வைத்திருக்கிறார்கள். எம்.பி.ரவீந்திரநாத்குமாரும் தனி டீம் வைத்திருக்கிறார். இதில் சிலர் அவரவர் மாவட்டத்தில் தங்கள் புகழ்பாட நாளிதழ், வார இதழ், லோக்கல் சேனலும் வைத்திருக்கிறார்கள்.

பல அமைச்சர்கள், தங்கள் அட்மின்களிடமே பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அதனால்தான் சமூக ஊடகங்களில் அவர்கள் பெயர்களில் வெளியாகும் கருத்துகள் சர்ச்சையாகி விடுகின்றன. சமீபத்தில் கொரோனா பாதிப்பு பற்றி ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் தகவல்தான் அவரின் மாவட்டச்செயலாளர் பதவி காலியாகக் காரணமாக இருந்தது.

இப்போது விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் இவ்வளவு கோபமாவதற்கு, அவரைப்பற்றி அவருடைய ஐ.டி டீம் வெளியிடும் தகவல்கள்தான் காரணமாக உள்ளன. இப்படி அமைச்சர்களே சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்க முடியுமா… எடப்பாடியும் தன்னால் முடிந்த அளவு கடுமை காட்டித்தான் வருகிறார்” என்றார்.

அதிமுக ஐ.டி.விங்

இப்போது முதலமைச்சர் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதில் அ.தி.மு.க ஐ.டி.விங் தீவிரம் காட்டி வருகிறது. அது எந்தளவுக்கு என்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.டி பணியாளர்களுக்கு உதவி செய்ததை அப்படியே உல்டாவாக்கி எடப்பாடி செய்ததுபோல் பரப்பும் அளவுக்கு வேகம் காட்டி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுபோல எத்தனையோ விளம்பரங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், உண்மையாகவும் உளப்பூர்வமாகவும் மக்களுக்கு யார் உதவுகிறார்கள் என்று… தங்கள் வாய்ப்பு வரும்போது அதை அவர்கள் வெளிப்படுத்தத்தான் போகிறார்கள். அதனால் இத்தகைய வெட்டி விளம்பரங்களுக்கு அமைச்சர்கள் தாறுமாறாகச் செலவிடுவது சொந்தக்காசில் சூனியம் வைப்பதுதான்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.