அழகிரி கொடுத்த அசைன்மென்ட்!

கே.பி.ராமலிங்கம் அழகிரி ஆதரவாளர் என்பது ஊரறிந்த சேதிதான். ஆனாலும், அவருடைய பதவியைப் பறிப்பதற்கு ஸ்டாலின் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தார். பதவி பறிக்கப்பட்ட பின், கே.பி.ஆரிடம் பேசிய அழகிரி, `கொஞ்சம் பொறுமையா இருய்யா… சீக்கிரமே ஒரு நல்ல முடிவு எடுப்போம்!’ என்று சொன்னாராம். அதற்கு முன் அவருக்கு அசைன்மென்ட் ஒன்றைத் தந்திருக்கிறாராம் அழகிரி.

மு.க.அழகிரி

தமிழகம் முழுவதும் தி.மு.க-வில் அதிருப்தியாகவுள்ள தலைவர்கள் மற்றும் பிற முக்கிய நிர்வாகிகளின் பட்டியல் தயார் செய்து அவர்களிடம் பேசச் சொல்லியிருக்கிறாராம். சேலத்தில் வீரபாண்டி ராஜா, கரூரில் கே.சி.பழனிசாமி, கோவையில் வீரகோபால் என கொங்கு மண்டல நிர்வாகிகள்தான் அந்தப் பட்டியலில் அதிகமாக இருக்கிறார்களாம். ஆனால், இதைப்பற்றி அந்தப் பிரமுகர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிகிறது.

முதல்கட்டமாக தென் மாவட்டங்களில் தன் வாரிசை களம் இறக்கப் போகிறாராம் அழகிரி. ஏற்கெனவே மதுரையில் முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் உள்ளிட்ட சிலர், வெளிப்படையாகவே தி.மு.க தலைமைக்கு எதிராகப் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அதேபோல இன்னும் பலரும் தலைமைக்கெதிராக வாய்ஸ் கொடுப்பார்களாம். கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதியன்று புதிய கட்சி தொடக்கம் அல்லது முக்கிய அறிவிப்பு இருக்குமாம்.

தடை போடும் தமிழருவி!

தமிழருவி மணியன், ரஜினிகாந்த்

ரஜினி அறிவித்த மூன்று திட்டங்களுக்கு ஒத்துப்போய் அவருடைய கட்சியில் யார் சேர்வார்கள் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும், முக்கியக் கட்சிகளில் உள்ள முக்கியப் பொறுப்பிலுள்ள பலரும் எப்படியாவது ரஜினி கட்சியில் இணைய வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ரஜினியுடன் மு.க.அழகிரி சந்திப்பு நடந்தபின், ரஜினியின் பின்னால் அழகிரியும் அணிவகுப்பார் என்றும் ஒரு பேச்சு கிளம்பியது. அதேபோல டி.டி.வி தினகரனும் அவரோடு கூட்டணி வைப்பார் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், ரஜினியிடம் மிகவும் நெருக்கமாகவுள்ள தமிழருவி மணியன், “மு.க.அழகிரி, டி.டி.வி தினகரன் போன்றவர்களை எல்லாம் ரஜினி தன் கட்சியில் சேர்க்கக் கூடாது!’’ என்றதுடன் அவர்களைப் பற்றி கடுமையான விமர்சனங்களைக் முன்வைத்ததில் மு.க.அழகிரி அப்செட் ஆகியிருக்கிறார்.

ஆளுநருடன் சந்திப்பு… அமைச்சர் ஆப்சென்ட்!

எடப்பாடியுடன் விஜயபாஸ்கர்

தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்திருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிலிருந்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பற்றித்தான் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது. கொரோனா குறித்த சந்திப்பு என்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தச் சந்திப்பில் அவர் இடம்பெறவில்லை. தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர்தான் முதல்வருடன் சென்றிருந்தனர். கடந்த 27-ம் தேதியன்று முதல்வரை அழைத்து பிரதமர் மோடி கடுமையாகப் பேசியதன் தொடர்ச்சிதான் இந்தச் சந்திப்பு என்கின்றனர்.

மலை போல வசூல்… மனைகளுக்கு ஓகே!

கொரோனா அச்சத்தில் நாடே முடங்கிக்கிடக்கும் நிலையில் கடந்த 30-ம் தேதியன்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர ஊரமைப்புத்துறை சார்பில் ஓர் அரசாணையை (எண்:66 தேதி:30–03–2020) வெளியிட்டிருக்கின்றனர். 2017-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற மனையிடங்களை வரன்முறைப்படுத்த அரசாணை வெளியிட்டபோது, மலையிடப் பாதுகாப்புக் குழுமத்துக்கு (HACA-Hill Area Conservation Authority) உட்பட்ட பகுதிகளில் உள்ள மனையிடங்கள் வரன்முறைப்படுத்தப்படவில்லை. மலையடிவாரப்பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் ரியல் எஸ்டேட் செய்யும் பலரும் சேர்ந்து, அந்தப் பகுதிகளில் உள்ள மனையிடங்களை வரன்முறைப்படுத்தவும் அரசாணை வெளியிட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், நீதிமன்ற உத்தரவுகளைக் காரணம் காட்டி மறுத்து வந்தனர்.

இந்த நிலையில்தான் கொரோனா பரபரப்புக்கிடையே சத்தமில்லாமல் இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அரசாணைக்காக ஒரு பெரும்தொகை கைமாறி இருப்பதாக துறை வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. இந்த வசூலை நடத்தித் தந்தது பா.ஜ.க பிரமுகர் ஒருவராம்.

பா.ஜ.க-வின் அன்புக் கட்டளை!

கொரோனா பாதிப்பால் ஊரே முடங்கியிருக்கும் நிலையில், உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுக்கச் சொல்லி பா.ஜ.க பிரமுகர்களுக்குத் தலைமையிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. `ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் தலா 200 பேருக்காவது சாப்பாடு போட வேண்டும்’ என்பதுதான் தாமரைத் தலைவர்களின் அன்புக் கட்டளையாம்.

பொன்னார்

இதையேற்று கன்னியாகுமரியில் பொன்னாரும், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவும் தங்கள் பங்கிற்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதேபோல மற்ற மாவட்டங்களிலும் இந்த அன்றாட அன்னதானத்தை மேற்கொள்ளச் சொல்லி இருப்பதால், `யாரைப் பிடித்து தினமும் சாப்பாடு போடுவது’ என்று மண்டையை உடைத்துக்கொண்டிருக்கின்றனர் பா.ஜ.க-வினர்.

தன்னார்வலர் அடையாள அட்டை… சிபாரிசு செய்த எம்.எல்.ஏ-க்கள்!

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதற்காக 132 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஒருசிலர் மட்டுமே அந்த அட்டையைச் சரியாகப் பயன்படுத்தினர். மற்றவர்கள் ஏதோ தங்களுக்கு தேசிய விருது கிடைத்துவிட்டதைப் போல, வெறுமனே நகரை வலம்வந்து விளம்பரம் தேடிக்கொண்டனர்.

இந்த நிலையில், “என் தொகுதிக்கு 10 அடையாள அட்டை வேண்டும்” என்று எம்.எல்.ஏ-க்களும் கட்சிக்காரகளும் வரிசைகட்டி கலெக்டர் அருணுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து தன்னார்வலர்கள் அனைவரையும் அழைத்த அருண், “ஆதரவற்றவர்களுக்கு இனி அரசே உணவு வழங்கும்” எனப் பெரிய கும்பிடு போட்டு வழங்கிய அடையாள அட்டைகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

சுடுகாட்டின் மீது கவனம் ஏன்?

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி

சில தினங்களுக்கு முன் கோவையிலிருந்து தஞ்சைக்கு அதிகாரிகள் குழு வந்திருக்கிறது. அவர்களுடன் ஆணையர் ஜானகி ரவீந்திரன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார். அதன் பிறகு ராஜகோரி மற்றும் ரெட்டிப்பாளையம் வனதுர்கா மயானங்களில் இந்த அதிகாரிகள் குழுவும் சேர்ந்து ஆய்வு நடத்தி இருக்கின்றனர். இதில் பல ஆண்டுகளாக இயங்காமல் இருந்த மின் தகன மேடையை உடனே சரி செய்ய உத்தரவிட்டிருக்கின்றனர். மக்கும் குப்பைகளைக்கொண்டு காஸ் தயாரித்து பயோ மெட்ரிக் முறையில் உடல்களைத் தகனம் செய்யவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், இதைப் பார்த்து தஞ்சை மக்கள் நெஞ்சம் பதறிக்கிடக்கின்றனர்.

அதிகாரியால் கதிகலங்கும் அரசியல் புள்ளிகள்!

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சவுதி அரேபியா போய்விட்டுக் கடந்த 10-ம் தேதிதான் இந்தியா திரும்பியிருக்கிறார். அதன்பின் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது பலருடன் கை குலுக்கியிருக்கிறார். “வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துக் கொண்டிருந்தபோது, அந்த அதிகாரி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாதது சர்ச்சையாக வெடித்தது. இந்தத் தகவலை சிலர் கலெக்டர் கவனத்துக்குச் கொண்டு சென்ற பிறகு, அந்த அதிகாரியை வீட்டிலே இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார் கலெக்டர். இப்போது அந்த அதிகாரியுடன் தொடர்பில் இருந்த அனைவருமே கதிகலங்கிப் போயிருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.