பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாடு முழுவதும் இல்லையென்றாலும் மாநில அளவிலாவது அடிக்கடி ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அரசியல் தலைவர்களின் மரணங்கள், போராட்டங்கள், அரசின் நிலைப்பாடு போன்ற காரணங்களுக்கு 144 சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படும் ஊரடங்கின் அனுபவ நினைவுகளைச் சுமக்காத இந்தியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

உள்கட்டமைப்பு மற்றும் தனிமனிதப் போக்குவரத்து வசதிகள் பரவலாய் இல்லாதிருந்த ஒரு முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஓரிரு நாள்களாவது ஊரடங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. புயல் மற்றும் வெள்ள அபாயங்களின்போது பலநாள்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல்கள் ஏற்பட்டதுண்டு.

Representational image

வானில் சூழ்ந்த மேகங்களில் கருமை அடர்ந்து காற்று வீசத்தொடங்கும் வேலையில், “வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தெலங்கானா, ராயலசீமா உள்ளிட்ட கடலோர ஆந்திரப் பகுதிகள், தெற்கு கர்நாடகப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அடுத்த சில நாள்களுக்குத் தமிழகம், புதுச்சேரி…” எனத் தொடங்கும் சென்னை வானொலியின் வானிலை அறிக்கை, மீனவர்களைக் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவிக்கும்போதே ஆயத்தமாகிவிடுவாள் பாட்டி.

“அடியே !… அந்த முட்ட விளக்கை தொடச்சி வைய்யின்னு ரெண்டு நாளா தொண்ட தண்ணி வரள கத்தறன்ல…! “

” அடேய்… அந்தத் துனியா சுருட்டி பதுக்கறதுக்குள்ள மண்ணெண்னையை வாங்கிட்டு வாடா. எந்த நேரத்துலயும் கரண்டை அடக்கிடுவான்! “

அதிகாலையில் எழுந்து தண்ணீர் தொட்டியை நிரப்புவதிலிருந்து பெரிய கூட்டுக்குடும்பத்துக்கான அன்றாடச் சமையல்வரை அனைத்தையும் ஒருத்தியாய் கட்டியிழுக்கும் சூழலில், பாட்டியின் கூச்சலுக்கும் புலம்பலுக்கும் காரணமில்லாமல் இருக்காது.

Representational image

வீட்டிலுள்ள சிம்னி விளக்குகள் மற்றும் நாடா விளக்குகளைத் துடைத்து, திரிகள் மாற்றி, மண்ணெண்ணை நிரப்பித் தயாராவதற்கும், அந்திமாலையின் மஞ்சள் சூரியனை கருமேகங்கள் மறைத்து, விரைவாக மழைக்கால இருள் கவிழ்வதற்கும் சரியாக இருக்கும். காற்றின் உலுக்கலுக்கு மரங்கள் தலைவிரித்தாடி சலசலக்க, ஒளி சர்ப்பமாய் நெளிந்து ஓடி ஒளிர்ந்து மறையும் மின்னலைத் தொடர்ந்து அதிர்ந்து முழங்கும் இடியின் முன்னறிவிப்புக்காகவே காத்திருந்தது போலச் சடசடவெனப் பொழியத்தொடங்கும் மற்றுமொரு பெருமழையின் முதல் நீர்க்கம்பிகள் பூமியில் இறங்கும் நொடியில் மின்சாரம் தடைப்பட்டுப் பாட்டியின் பயத்தை உண்மையாக்கும்.

சிறிது நேர அடைமழையிலேயே தெருக்களில் நீர் கரைபுரளத் தொடங்கி, வீட்டு முற்றங்கள் நிறைந்து சாளரங்களின் வழியே அருவியாய் தெருவோரங்களில் கொட்டும் நீரின் சப்தம் சோவென்ற மழையின் ராகத்துக்குப் பக்கவாத்தியமாய்ச் சேர்ந்து எழும்பும். நன்றாகப் பராமரிக்கப்படும் ஓட்டுவீடுகளிலும் கூட நீர் ஊடுருவி ஆங்காங்கே சொட்டும். சிம்னி விளக்கின் மணமும் மழை ஈரநப்பின் வாசமும் கலந்த இரவில் அவ்வப்போது தணிந்து பெய்யும் மழை ஏற்படுத்தும் நிசப்தத்தில் ஒரேசீராய் பாத்திரங்களில் சொட்டும் நீரின் சப்தம் கூட ஒருவித தாலாட்டாய் கேட்கும்.

Representational image

விடுமுறை போன்ற தகவல்கள் வானொலியின் மூலம் அறிவிக்கப்பட்டால்தான் உண்டு. ஒட்டகத்தின் கூனைப்போல மழைக்கோட்டினுள் மறைந்த புத்தகப்பை முதுகில் குலுங்க, தெருக்களையும் சாக்கடைகளையும் மறைத்து, முழங்கால் உயரத்துக்குத் தேங்கிய மழைநீரில் தட்டுத்தடுமாறியும், சாக்குப்பைகளை மறைப்பாகக் கட்டியதையும் மீறி மழைநீர் ஒழுகும் ரிக்சாக்களில் அடைந்தும் பள்ளிக்கூடம் போகும்போது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்குமா என்ற ஒற்றைக் கேள்வியின் ஆர்வம் மட்டும்தான் மனதில் நிறைந்திருக்கும். நமக்கு முன்னர் பள்ளிக்கூடம் சென்ற கூட்டம் ஏதாவது திரும்பிவருகிறதா எனக் கண்கள் மழைத்தாரை பார்வை மறைக்கும் பாதையை அலசும்.

கண்ணுக்கெட்டிய பள்ளிக்கூட வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகையைச் சுற்றி நிற்கும் கூட்டம் பார்வையில் பட்டுவிட்டாலே ஓரளவுக்கு உறுதியாகிவிடும். புயல் அறிவிப்பின் காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை என்பதான அறிவிப்பை கரும்பலகையில் படிக்கும்போது மனதின் ரகசிய குதூகலம் உச்சம் தொடும்.

வீட்டிலிருக்கும் பழைய நோட்டுப் புத்தகங்களின் தாள்களெல்லாம் முற்றத்து நீரில் கப்பல்களாகி மிதக்கும். அதிகமான ஆர்வக்கோளாறினால் புதிய புத்தகங்களின் பக்கங்களையும் கிழித்துவிட்டு பின்னர் வீட்டிலோ பள்ளிக்கூடத்திலோ வாங்கிக்கட்டிக்கொள்வதும் நிகழும்.

ஆக்ரோஷமாக, ஆரவாரமாக, முணுமுணுப்பாகப் பல்வேறு தாள லயங்களில் மாறி மாறி பெய்யும் மழையை வேடிக்கை பார்ப்பதும், கப்பல்கள் விடுவதும் அலுக்கும் பொழுதுகளைப் பல்லாங்குழி விளையாட்டும், பரமபதமும் நகர்த்தும். பூந்தளிர், கோகுலம், ராணி காமிக்ஸ் வகையறா சிறுவர் இதழ்களில் படித்தவைகளில் பிடித்தவைகளின் மறுவாசிப்பும் நிகழும். நெட்பிளிக்ஸும் அமேசான் பிரைமும் இல்லாத குறையை விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனைத்தின் பொங்கும் பூம்புனலும் தீர்த்தன.

Representational image

போக்குவரத்துகள் தடைபட்ட மழைக்காலத்தில் ஈரம்பூக்கத் தொடங்கும் வீட்டின் கூடத்திலோ தாழ்வாரத்திலோ சாக்குகளுக்கு மேலாக விரிக்கப்பட்ட பாயில் குளிருடன் அமர்ந்து ஆவிபறக்க சாப்பிடும்போது தனிச்சுவை பெறும் ரசம் சாதம், உருளைக்கிழங்கு பொரியல் சாதாரண நாள்களில் தொண்டைக்குள் இறங்க மறுத்ததின் ரகசியம் இன்றளவும் புரியவில்லை.

மீன், காய்கறி வரத்துகள் தடைப்பட்டாலும் எளிமையான சுயசார்பு உணவு முறை பரவலாகப் புழக்கத்திலிருந்த காலத்தில் பெரிதான சிரமங்கள் இருந்ததில்லை. கொல்லைகளிலிருந்த முருங்கை, வாழை, தென்னை போன்ற பலவருடப் பயிர்களே அன்றாட உணவுத்தேவைக்குப் போதுமானவையாக இருந்தன. உத்தரத்தில் தொங்கவிடப்பட்ட தூக்குகளிலும், அடுக்குப் பானைகளிலும் பத்திரப்படுத்தப்பட்டிருந்த வடாம் வத்தல்களும், கருவாடுகளும் மெல்லமெல்ல வெளியே வரும்.

” குப்பை கூளமா ஆக்காம சுத்தபத்தமா வச்சிக்கணும்… “

உயர வீட்டுக் கெளஸ் மரைக்காயர், பெரிய வீட்டு தங்கசாமி செட்டியார், பங்களா வீட்டு தண்ணீர்மலையார் எனத் தெருவின் தனவந்தர்கள் அனைவரின் எச்சரிக்கையும் ஒரேவிதமாக இருக்கும்.

சாக்கு படுதாவும் பழைய ஜமுக்காளமும் கட்டிய திண்ணைகளில், தட்டுமுட்டுச் சாமான்களுடன் உருவாகும் தற்காலிக குடித்தனங்கள் மழை நின்று, நீர் வடிந்து, புயல் சிதைத்த குடிசைகள் சரிசெய்யப்படும்வரை தொடரும். அனுமதியில் கண்டிப்பிருந்தாலும் திண்ணை குடும்பங்களுக்கும் சேர்த்தே பெரிய வீடுகளின் உலை பொங்கும்.

Representational image

இரண்டு மூன்று நாள் பெய்த மழை ஓய்ந்து, மிச்சம் மீதி நீர் சுமந்த மேகங்களையும் சிறுதூறலாய் சிலுப்பிச் சிதறவிட்ட வானம் முற்றிலும் வெளுக்கும்போது ஒரு கூட்டம் கடற்கரை நோக்கி கிளம்பும். வீழ்ந்த பெருமரங்கள், காற்று சாய்த்த மின்கம்பத்தின் கம்பிகள் மிதித்து இறந்த கால்நடைகள் பற்றிய செய்திகள் பரவும். அரசலாற்றின் கரையை ஒட்டிய பகுதிகளிலும், கடற்கரையின் முகத்துவாரத்தைச் சுற்றிய பகுதிகளிலும் வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர் குட்டைகளில் சிறுமீன்களுடன் நீர்ப்பாம்புகளும் நீந்தும்.

மழைக்காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலத்தின் வேர்ப்பிடியை இழந்து சாய்ந்த வாழை, முருங்கைகள் பங்குவைக்கப்பட்டுத் தெருமுழுவதும் பகிரப்படும். கவுச்சி வாசம் இல்லாமல் சோறு இறங்காத கடற்கரை நகரத்துவாசிகளின் கண்கள் எங்கேனும் மீன்கூடை தென்படாதா என்ற ஏக்கத்துடன் அலையும்.

பெருமழை, புயலினால் சகஜவாழ்க்கை தடைப்பட்டு வீடு அடங்கியதில் இருந்த நிம்மதியும் லயிப்பும் கலவரங்கள், அரசியல் போராட்டங்களின்போது அமல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவுகளில் இருந்ததில்லை. ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் வலுக்கும்போதே எங்கள் தெருவைச் சுற்றிய பெட்டிக்கடைகளில் கூட்டம் அப்பத்தொடங்கிவிடும்.

முட்டைக்கு என் தந்தை வைத்த பெயர் `பஞ்சம் தாங்கி’. குளிர்சாதனப் பெட்டிகளெல்லாம் காண்பதற்கே அரிதான ஒன்று. பலநாள்கள் வைத்து சமைக்க வசதியான ஒரே அசைவ புரதம் முட்டை மட்டும்தான். ஊரடங்கு என்ற செய்தி வந்தாலே முட்டையின் விலைதான் முதலில் உயர்த்தப்படும் !

Representational image

முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தின்போது எங்கள் வீட்டுக்கு எதிரிலிருந்த ரவியண்ணன் கடையில் முட்டை வாங்கிவர என்னை அனுப்பினார் என் தந்தை. கடைக்கதவை பாதித் திறந்து வைத்து, அண்ணன் தம்பிகள் அனைவரையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு கடை முழுவதையும் காசாக்கி கொண்டிருந்த ரவியண்ணன் பதினைந்து பைசா, கால் ரூபாய் முட்டையை அன்று ஒரு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்.

கோழிக்குஞ்சின் விலைக்கு நான் கோழி முட்டைகள் வாங்கி வந்ததைக் கண்டு பொங்கி எழுந்த என் தந்தை முட்டைகளோடு என்னையும் கடைக்கு அழைத்துச்சென்றார். பள்ளிவிட்டுத் திரும்பும்போதெல்லாம் ஹனீஸ் நானா கடையில் டீ கேட்கும் என்னை, அன்றைய செலக்டிவ் அம்னீஷியாவினால் மறந்துவிட்டிருந்தார் ரவியண்ணன்.

“அடட… இது யாரு? நம்ம புள்ளையா? சொல்லவே இல்ல…” என வடிவேலுவைப்போல வழிந்துக்கொண்டே அதிகம் எடுத்திருந்த விலையை அப்பாவிடம் திருப்பிக்கொடுத்தார்.

லகமயமாக்கலும் நுகர்வு கலாசாரமும் பங்குச்சந்தை பலாபலன்களும் எங்கள் தெருக்கோடியைத் தொட்டிராத அன்றைய ஊரடங்கல்களில் பொருளாதாரப் பயம் பெரிதாகத் தெரியவில்லை. பெருவணிகமாக்கலுக்கு ஈடாக மக்களின் தேவைகளும் இடப்பெயர்வுகளும் அதிகமாகிவிட்ட இன்றைய சூழலில் பாதிப்புகளும் பூதாகரமாக உருவெடுக்கின்றன.

Representational image

எந்தக்காலமானாலும் சரி, அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிக்கும்போதெல்லாம் பாதிப்புக்குள்ளாவது ஒன்றும் சேர்த்துவைக்க வழியில்லாத அன்றாடங்காய்ச்சிகள்தான்…

ஒரு பெருமழையின்போது நள்ளிரவில் எங்கள் வீட்டின் கதவு பலமாகத் தட்டப்பட்டது. தலைவாசலில் ஈரம் சொட்ட நடுங்கி நின்றிருந்தான் செவிட்டு சித்தன். தேங்காய் பறிப்பதிலிருந்து வீடு கழுவுவது வரை யார் என்ன வேலைக்குக் கூப்பிட்டாலும் செய்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் உணவை உண்டு நாளுக்கு ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கி காலத்தை ஓட்டிய மனிதன். காதும் கேட்காதவனின் சடைத்தலையையும், உதட்டோரம் எந்நேரமும் சுழித்து நிற்கும் ஏகாந்த சிரிப்பையும் கண்டு அவனுக்கு யாரோ வைத்த பெயர் செவிட்டு சித்தன்.

அவன் கண்களில் பசியின் வேண்டுதலைக் கண்ட என் பாட்டி பானையில் மிச்சமிருந்த சோறு முழுவதையும் தட்டில் கொட்டி, மிச்சமிருந்த குழம்பையும் கொதிக்க வைத்து அதில் ஊற்றினாள்.

வேட்டைக்குச் செல்லும் வழக்கம்கொண்ட என் தந்தை கொண்டுவந்த கொக்குகளையும் மடையான்களையும் சமைத்துச் சூடு பண்ணி, சூடு பண்ணி இரண்டு நாள்கள் ஒப்பேற்றியது போக மிச்சமிருந்த குழம்பு. சதை கழன்ற எலும்புகள் மட்டுமே மிச்சம் கிடந்தன.

குனிந்த தலை நிமிராமல் எலும்புகளையும் நரநரவெனக் கடித்து மென்று மொத்தத்தையும் உண்டு முடித்தான் செவிட்டு சித்தன்.

Representational image

கொரோனா கிருமியினால் உலகமே வீட்டில் அடங்கிக் கிடக்கும் சூழலில், புதுடெல்லியிலிருந்து கால்நடையாகவே ஊர் திரும்பக் கிளம்பியவர்களின் செய்தியை அறிந்ததிலிருந்து எனக்கு ஏனோ செவிட்டு சித்தன் ஞாபகமாகவே இருக்கிறது..!

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.