இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், தமிழகத்தில் இப்போதுவரை 234 பேருக்கு இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

பினராயி விஜயன்

கேரள சுகாதாரத்துறையோ, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் மிஞ்சும் வகையில் தங்களுடைய மாநில மக்களுக்குத் தீவிர சோதனைகளை நடத்திவருவது, புள்ளியியல் விவரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

இதுவரை 7,000 பேருக்கு, கொரோனா சோதனை நடத்தியிருப்பதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. வீடு மற்றும் மருத்துவமனை கண்காணிப்பு வளையத்தின்கீழ் 1,51,370 பேரைக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. அதோடு, இந்த லாக் டவுண் காலத்திலும், அம்மாநில மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் சுய வேலை வாய்ப்புகள், தொழில்கள் போன்றவற்றை வழங்க புதிய உத்திகளை வகுத்து செயல்படுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், கேரளாவோடு ஒப்பிடுகையில், நோய்த்தொற்று மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்… செய்யத் தவறியது என்ன… என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளோடு சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினோம்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பேசுகையில், “தமிழக சுகாதாரத் துறையைவிட கேரள மாநில சுகாதாரத்துறை, அங்குள்ள அதிகமான மக்களுக்கு நோய்த்தொற்றுப் பரிசோதனைகளைச் செய்துவருகிறது. அதோடு, தொடர்ந்து ஆய்வகங்களை அதிகப்படுத்தியும்வருகிறது. மேலும், இரண்டு மணி நேரத்திற்குள் நோய்த்தொற்றைக் கண்டறியும் கருவிகளை உருவாக்கி, படுதீவிரமாக கேரள அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியான பரிசோதனைகள் நடைபெறவில்லை என்பதே கவலைக்குரிய விஷயம். வெளிநாடு சென்று வந்தவர்கள், அவர்களுடன் பழகியவர்கள் என்று குறுகிய வட்டத்தில் மட்டும் பரிசோதனை செய்யாமல், அறிகுறிகள் இருக்கின்ற அனைவரையும் பரிசோதித்தால் மட்டுமே இதிலிருந்து மீளமுடியும்.

டாக்டர் ரவீந்திரநாத்

அதோடு, இந்த நோய்த் தொற்றைக் கண்டறிவதிலும் அதனைத் தடுக்கவேண்டிய நடவடிக்கைகளிலும், கேரள அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வாறு வெளிப்படைத் தன்மையுடன் இருந்தால் மட்டுமே பல வழிகளிலும் ஆதரவு கிடைக்கும். உண்மையான சூழலை மூடி மறைப்பதால் மேலும் மேலும் சிக்கல்கள்தான் உருவாகும். அதனால், தமிழக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

அதேபோன்று, நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால், தமிழகத்தில் மக்கள் தங்களைத் தனிமைப் படுத்துக்கொள்வதில் தீவிரம் காட்ட மறுக்கிறார்கள். மக்கள் நடமாட்டம் தொடர்ந்து நீடிப்பதால், இது எப்படியான சூழலை உருவாக்கும் என்று கணிக்கவே முடியாது. கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு, கேரளாவில் வழங்கப்பட்ட பாதுகாப்பு உடைகளைப் போன்றே இங்குள்ள மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும்” என்றார் .

இதுகுறித்துப் பேசிய அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், “நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு ஓரளவிற்கு நன்றாகச் செய்துவருகிறது. அதில் நாம் குறை சொல்லத் தேவையில்லை. குறிப்பாக, நிவாரண உதவியாக 1,000 ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியுதவி சில நாள்களுக்கு மட்டுமே இருக்கும். வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் நீண்ட நாள்களுக்கான அத்தியாவசிய செலவுக்கு இது போதாது. இந்த நிதியை மேலும் அதிகப்படுத்தி, கூடுதல் நிதியை ஒதுக்க அரசு முன் வர வேண்டும். அதேபோன்று, கடைகளில் விற்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் தேவையையும் அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுமந்த் சி ராமன்,அரசியல் விமர்சகர்

அதேநேரத்தில், இதில் மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்று, கொரோனா தொற்று குறித்து எடுக்கப்படும் சோதனைகள் மிகக் குறைவாக எடுக்கப்படுவதாகப் புகார்கள் உள்ளன. இதை அவ்வளவு எளிதில் சாதாரணமாகக் கடந்து போகமுடியாது. தீவிர பரிசோதனை நடத்தினால் மட்டுமே, தமிழகத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, வெளிநாடு சென்றவர்கள், வந்தவர்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டிருக்காமல், யாருக்கெல்லாம் அறிகுறிகள் இருக்கிறதோ அவர்களைப் பரிசோதிக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்” என்றார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்தடை உத்தரவையும், அதன்பிறகு நீண்ட காலத் தடை உத்தரவையும் மத்திய அரசு அறிவித்தது. இந்த இரண்டு தடை உத்தரவுகளுமே, திடீரென்று அறிவிக்கப்பட்ட தடை உத்தரவுகள் இல்லை. திட்டமிட்ட பிறகே தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அப்படியிருக்கும்போது, ஏன் தமிழக அரசு மக்களை அதற்கு தயார்படுத்தவில்லை. மத்திய அரசின் இந்த யோசனை தமிழக அரசுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

பிரின்ஸ் கஜேந்திரபாபு,கல்வியாளர்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதச் சென்ற மாணவர்கள் இந்தத் தடை உத்தரவால் ஆங்காங்கே நின்றுகொண்டு, வீட்டிற்கே வர முடியாத நிலை ஏற்பட்டதே. தேர்வு முடிந்து விடுதிக்கு வந்த மாணவர்கள், அவர்களுடைய சொந்த மாவட்டத்திற்குச் செல்ல முடியாமல் தவித்தார்களே? இப்படிப் பல வகையிலும், மக்கள் பாதிப்பு உள்ளாயினர். அண்டை மாநிலமான கேரளா, சமீபத்தில்தான், வெள்ளத்தில் மூழ்கி மீண்டெழுந்தது. அந்த மாநிலத்தில் மக்கள் நல்வாழ்வு நடவடிக்கைகள் சிறப்பாகச் செயல்படும்போது, தமிழக அரசால் மட்டும் ஏன் செய்ய முடியவில்லை. அதற்காக, ஒட்டுமொத்தமாக தமிழக அரசைக் குறை கூறவில்லை. திட்டமிடல் மற்றும் வேகமின்மை குறித்த விமர்சனங்களே அதிகம் உள்ளன.

மத்திய அரசு லாக்-டவுண் என்று அறிவித்தவுடன், கேரள அரசு உடனடியாக 20,000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்தது. அதன்பிறகு, ரேஷன் அல்லது ஆதார் அட்டை தாரர்களுக்கு இலவச உணவுப் பொருள்கள் விநியோகம் என்று அறிவித்தது; செயல்முறைப்படுத்திவருகிறது.

கேரளா

அட்டைகள் இல்லாத ஏழைத் தொழிலாளர்களுக்கு, குறைந்த விலையில் உணவு வழங்கவும் ஏற்பாடுசெய்துள்ளது. சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களின் வீட்டிற்கே சென்று உணவுப் பொருள்களை வழங்கிவருகிறது. இப்படி எண்ணற்ற செயல்திட்டங்களைச் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் கேரள அரசின் நடவடிக்கைகளை, தமிழக அரசும் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை” என்றார்.

கேரளா

கேரள, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியிடம் பேசினோம். “எங்களுடைய மாநிலத்தில், அயல்நாடுகளில் பணிபுரிவோர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், கொரோனா தொற்றுப் பிரச்னையை ஜனவரி மாதத்திலேயே உணரத் தொடங்கி விட்டோம். அதனால், தடுப்பு நடவடிக்கையை விரைந்து தீவிரப்படுத்தினோம். மேலும், உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டமைப்பு இங்கு தரமாக இருப்பதால், மக்களுக்கான நலத்திட்டங்களை எங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடிகிறது. இந்த லாக்-டவுண் காலத்தில், வீட்டில் முடங்கி இருக்கும் பெண்களுக்கு, சூழலுக்கு ஏற்ற சுய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறோம். இளைஞர்களை நிவாரண நடவடிக்கைகளில் பங்கெடுக்க வைக்கிறோம். உணவில்லாமல் இருப்பவர்களுக்கு, சமுதாய உணவுக்கூடங்களைத் திறந்துள்ளோம்.

மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு முகாம் அமைத்தும் அவர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் சுகாதாரத்தையும் உறுதி செய்திருக்கிறோம். இப்படிப் பல வகைகளில் புதிய உத்திகளை வகுத்து, அரசு செயல்பட்டுவருகிறது. அதேநேரத்தில், தமிழக அரசையும் குறைத்து மதிப்பிட முடியாது. அங்கும் சுகாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அங்குள்ள அதிகாரிகள் நல்ல முறையில் செய்துவருகின்றனர்” என்றார்.

Also Read: `குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வுப் படக்கதை!’ – மத்திய அரசு வெளியீட்டின் தமிழ் வடிவம்

வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்ளிட்டோர் என 2,354 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி

இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி பேசுகையில், “மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே தமிழக சுகாதாரத்துறை நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களுக்குப் பரிசோதனை நடத்திவருகிறது. அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் உட்பட, 15 பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. ஆரம்பத்தில், வெளிநாடு சென்று வந்தவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்ளிட்டோர் என 2,354 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது. சாதாரண அறிகுறி உள்ளவர்களுக்கும் சோதனை நடத்த முடியாது. குறிப்பாக, 200 -க்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளால் சளி, காய்ச்சல் வருகிறது. அதனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்கிறது என்று சோதனை நடத்த முடியாது. உண்மையிலேயே கொரோனா தொற்று உள்ளவர்களை தமிழக சுகாதாரத்துறை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பரிசோதனை நடத்தி வருகிறது. இதுவரை கொரோனா தொற்றில் சமூகப்பரவல் இல்லை. அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக, தமிழக சுகாதாரத்துறை தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது” என்றார்.

தமிழ்நாட்டில் பெரிய ஆபத்துகள் நிகழும்முன் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.