Also Read: “படிச்சவங்களே, கொரோனா வராதுனு வெளியில் போவது கொடுமை!” -கரூர் சமூக ஆர்வலர் ஆதங்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுக்க பரவி, மனிதக்குலத்துக்கு சவால்விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அது பரவ, இங்கே கடந்த 24-ம் தேதியிலிருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திருவிழாவில் மக்கள்

இந்த நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள தெலுங்குப்பட்டியில் உள்ள அம்மன் கோயிலில் 144 தடை உத்தரவையும் மீறி இரவு நேரத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திருவிழா நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தடையை மீறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தக் கோயில் திருவிழாவில் கூடியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிலர், “இந்தப் பகுதி மக்களுக்கு கொரோனோ வைரஸைப் பற்றியோ, அதன் பரவும் வேகத்தைப் பற்றியோ எந்த பயமும் இல்லை. கொரோனோ வைரஸை ஏதோ கொசு ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவுதான், இப்படி அங்குள்ள கோயிலில் இரவு நேரத்தில் திருவிழா நடத்தியிருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே கூடியதோடு, மேள தாளம், சாமி ஊர்வலம் என்று நடத்தியிருக்கிறார்கள். அதோடு, திருவிழாக்களில் போடப்படும் வளையல், தின்பண்டக் கடைகள், பலூன் கடைகள் என்று பல கடைகளைப் போட்டிருக்கிறார்கள். மக்களும் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இரவு நேரம் என்பதால், வருவாய்த்துறை அதிகாரிகளோ, காவல்துறையினரோ அங்கே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் திருவிழாவை நடத்திவிட்டதாக சொல்கிறார்கள்.

ஊரடங்கை மீறி திருவிழா

சமூக ஆர்வலர்கள் சிலர் அந்தக் கிராமத்து முக்கியஸ்தர்களிடம் கேட்டபோது, `கொரோனா வைரஸைக்கூட சமாளிச்சுடலாம். ஆனால், ஏழேழு லோகத்தையும் கைப்பிடிக்குள் வச்சுருக்கும் அம்மனுக்கு திருவிழா நடத்தாம போனா, அவ கோவமாயிடுவா. அவ கோபத்தை சந்திக்கிற சக்தி எங்களுக்கு இல்லை’ என்று கூறி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் இதுவரை 2 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் குளித்தலை ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், இந்தப் பகுதி மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் திருவிழா நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.