கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. ரப்பர் மரங்களில் பால்வெட்டும் தொழிலாளியான இவர் பிளாஸ்டி தடை செய்யப்பட்டதால் செய்தித்தாளில் இறைச்சி உள்ளிட்ட பொருள்கள் வாங்கும் கேரிபேக் தயாரித்திருந்தார். செய்தித்தாளின் உட்பகுதியில் கிழங்கு மாவு உள்ளிட்டவை பயன்படுத்த செய்த அந்த கேரிபேக் மக்கள் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில் கைகள் படாமல் சானிடைசர் எடுத்து, கைகள் படாமலே தண்ணீர் திறந்து கைகழுவும் உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அடிக்கடி கை கழுவ வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பொது இடங்கள், அலுவலகங்களில் கைகழுவ சானிடைசர் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளன. சானிடைசர் மற்றும் தண்ணீர் பைப்புகளில் அனைவரது கைகளும் படும் என்பதால் அதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படலாம். எனவே, கைகளைப் பயன்படுத்தாமல் ஒரு புறம் காலால் மிதித்து சானிடைசரையும் மறுபுறம் மிதித்தால் தண்ணீர் வரும் விதமாக வாஷ் பேசினுடன் கூடிய உபகரணம் ஒன்றை பாபு தயாரித்துள்ளார்.

இந்த உபகரணத்தில் தண்ணீர் பைப்புகளை நேரடியாக இணைக்க முடியும். அதன் மூலம் எப்போதும் தண்ணீர் வரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பைப் இணைக்க முடியாத பகுதிகளில் பக்கெட் மூலம் குறிப்பிட்ட நேரம் தண்ணீர் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாபு கூறுகையில், “கொரோனா தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரே பைப்புகளை அனைத்து மக்களும் கைகளால் தொடும்போது அதன் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பு ஏற்படும் என்பதால் கைகளால் தொடாமல் கைகழுவும் உபகரணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.

அதற்கு தேவையான பொருள்களை லிஸ்ட் போட்டேன். ஆனால் 144 தடை காரணமாக பொருள்கள் வாங்க இயலவில்லை. எனவே, எனது வீட்டில் உபயோகமின்றி ஒதுக்கிப்போட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் டிஸ் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி இதைச் செய்தேன். இப்போது இதை எனது பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக தெரு முனையில் வைத்துள்ளேன்.
Also Read: `நோ வாட்டர்.. நோ செல்போன்..!’ – தமிழகத்தில் கொரோனா வார்டுகள் எப்படிச் செயல்படுகின்றன?
எங்கள் பகுதி மக்கள் வெளியே சென்றுவிட்டு ஊருக்குள் வரும்போது கை கழுவப் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இந்த உபகரணத்தைப் பார்க்கும்போது அடிக்கடி கை கழுவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என நம்புகிறேன். இந்த உபகரணத்தை தயாரிக்க 500 ரூபாய் மட்டுமே செலவாகும். குறைந்த அளவு தண்ணீர் பயன்படும் விதமாக உள்ளதால் தண்ணீரையும் சேமிக்க முடியும்” என்றார்.