கொரோனாவின் கோர முகம் நாளுக்குநாள் பதைபதைப்பை அதிகரிக்க வைக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, இப்போது மூன்று இலக்கத்தைத் தொட்டுவிட்டது. கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.

கொரோனா

அதில், ஒன்று ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி கூட்டம். காரணம், இதில் வெளிநாட்டினர், வெளி மாநிலத்தினர், உள்ளூர்க்காரர்கள் என்று பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள்.

இந்தமுறை சிவராத்திரி கூட்டம் பிப்ரவரி 21-ம் தேதி மாலை தொடங்கி, பிப்ரவரி 22-ம் தேதி காலை வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, தமிழக அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்குமார், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சிவராத்திரி கூட்டம்

அந்தக் கூட்டம் நடந்து ஒரு மாதம் முடிந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது.

“சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதமே இந்தியாவில் கொரோனா வைரஸ் கால் பதித்துவிட்டது. கொரோனா பாதிப்புக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் முக்கியக் காரணமாக இருக்கும் நிலையில், ஈஷா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள் எங்கே?

சிவராத்திரி கூட்டம்

அதில், ஒருவருக்கு கொரோனா இருந்திருந்தால் கூட பாதிப்பு அதிகமாக இருக்குமே? இவ்வளவு பெரிய கூட்டத்தை அரசு எப்படி அனுமதித்தது?” என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா யோகா மைய சிவராத்திரி கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சோதனை நடத்துவோம்” என்று கூறியிருந்தார். “பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு வந்த வெளிநாட்டினர், நடத்தப்பட்ட கூட்டங்கள் குறித்து கண்காணித்து வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி

அந்த வகையில் ஈஷா யோகா மையம் நடத்திய கூட்டம் குறித்தும் தகவல்களைச் சேகரித்து, சோதனை நடத்தியுள்ளோம்” என்று சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கூறியிருந்தார்.

இது குறித்து ஈஷா யோகா மையம் நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறது. அதில், “உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை ஒரு நோய்த் தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணத் தடைகளை விதிப்பதற்கு பல நாள்கள் முன்பாகவே ஈஷாவுக்கு வந்த வெளிநாட்டினருக்கு சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து அதை தீவிரமாகச் செயல்படுத்தினோம்.

ஈஷா ஜக்கி வாசுதேவ்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தாக்கிய நாடுகளைச் சேர்ந்தோர் ஈஷா யோக மையத்துக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தோம். மேலும், அந்த நாடுகளுக்குச் சென்றவர்கள், அந்த நாடுகளின் விமானநிலையங்கள் வழியாக வந்தவர்களும் ஈஷாவுக்கு வர வேண்டாம் என்று தெரிவித்திருந்தோம்.

அதேபோல, ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர் கட்டாயம் 28 நாள்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல்ரீதியான இடைவெளி நெறிமுறைகளை தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.

சிவராத்திரி நிகழ்ச்சியில் வெங்கைய நாயுடு

அவர்கள் அனைவருக்கும் 2 நாள்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாக்கியுள்ளோம். ஈஷா மையத்தில் தங்கி பாதுகாப்புப் பணி, தூய்மைப் பணி மற்றும் பிற களப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த நெறிமுறை பொருந்தும்.

மேலும், ஈஷா வளாகத்தின் பல இடங்களில் கையை சுத்தமாக வைத்துக்கொள்ள சானிட்டைஸர் வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா யோகா மையத்துக்குத் தொடர்ந்து வருகை தந்து மருத்துவப் பரிசோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர்.

ஈஷா யோகா மையம்

இதுவரை இங்கு தங்கியுள்ள ஒருவருக்கு கூட கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை கோவை மாவட்ட துணை இயக்குநர் ரமேஷ், “ஈஷாவில் சுமார் 150 வெளிநாட்டினர் இருந்துள்ளனர். பலர் ஜனவரி மாதமே சென்றுவிட்டனர். அவர்களில் சிலர் தங்களது நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். மீதம் இருந்த 119 பேருக்கு சோதனை செய்துவிட்டோம். எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.

ஜக்கி வாசுதேவ்

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை 28 நாள்கள் தனிமையில் வைத்து கண்காணித்தால் போதும். ஆனால், ஈஷா யோகா மையத்தில் உள்ள வெளிநாட்டினரை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.