எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸின் தாக்கம். சமூக வலைதளம் முதல் சந்து முனைகள்வரை அதைப் பற்றிய பேச்சுதான். கொரோன கிளப்பியுள்ள பீதியில், மற்ற உடல் உபாதைகள் எல்லாம் காணாமல் போய்விடுமா என்ன? மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகங்களும் நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச்சொல்கிறார்கள்.

அறுவைசிகிச்சைகளைத் தள்ளிப்போடச் சொல்கிறார்கள். தொலைபேசி மூலமாகவே ஆலோசனை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் பல மருத்துவர்கள். இதெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமில்லையே… பல்வேறு உடல்நல பாதிப்புகளோடு அவதிப்படுகிற மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா… மருத்துவர்களின் மனநிலை என்ன? பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களிடம் பேசினோம்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணியிடம் பேசியபோது…
‘அவசர சிகிச்சை என்று வருபவர்களுக்கு எந்தத் தடையுமின்றி உடனடி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சைகளைப் பொறுத்தவரை, அவசர சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுகின்றன; அவசரமில்லாத அறுவைசிகிச்சைகள் நடப்பதில்லை..
வெளிநோயாளிகள் பிரிவில், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மருந்து வாங்க வருவார்கள். இப்போது, அவர்களின் பாதுகாப்பு கருதி ஒரு மாதத்துக்கான மருந்துகளைக் கொடுத்து அனுப்புகிறோம். இது, அவர்களின் அலைச்சலையும், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.

உயர் சிகிச்சைப் பிரிவில் பிரச்னைகளுடன் வருபவர்களுக்குப் பொதுமருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் வெளி நோயாளிகள் பிரிவும் செயல்படுகிறது. ஒரு நாளைக்கு 4,000 வெளிநோயாளிகள் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 750 ஆகக் குறைந்துள்ளது. உள்நோயாளிகள் 1,100 லிருந்து 400 ஆகக் குறைந்துள்ளனர். அதாவது, வெளிநோயாளிகள் வருகை 40 சதவிகிதமும் உள்நோயாளிகள் வருகை 50 சதவிகிதமும் குறைந்துள்ளது” என்றார் முதல்வர் வசந்தாமணி.
தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர் பி.கண்ணனிடம் பேசினோம்.
“தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் மருத்துவமனையில் கூடுவதைத் தவிர்க்க வீடியோ கான்ஃபரன்சிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை சமூக வலைதளம் மற்றும் ஊடகங்கள் மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்திற்கென இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்ணைப் பயன்படுத்தி, எங்களின் பழைய நோயாளிகள் எங்களின் உதவியை டெலிகாலிங் மூலம் பெற முடியும். அந்த நோயாளிகளின் டிஸ்சார்ஜ் தகவல்களைப் பார்த்துவிட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறோம். புதிதாக வருகிறவர்கள் மற்றும் டாக்டரை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இரண்டாம் எண்ணில் தொடர்புகொண்டு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விளக்கங்கள் பெறலாம்.

அவர்கள் பார்க்க நினைக்கும் மருத்துவத் துறைக்கேற்ப அந்தந்த மருத்துவரை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் குறித்த நேரத்தில் பார்க்கலாம். இதில் அவர்களுக்கான ஆலோசனையையும் , மருத்துவச் சீட்டையும்கூட வழங்குகிறோம். இப்போது சளி, காய்ச்சல் வந்தாலே மக்களிடையே பீதி ஏற்படுகிறது. இப்படி வரும் மக்களை, நாங்கள் முதலில் மருத்துவமனைக்கு வெளியில் இருக்கும் அறையிலேயே முழுப் பரிசோதனை செய்துவிடுகிறோம். இதற்கென மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்துள்ளோம். பின்னர், குளிரால் ஏற்பட்ட காய்ச்சலாக இருந்தால், அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு வருமாறு அறிவுறுத்துகிறோம். பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மேலும் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம்.

ஒருவேளை, கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், அரசே அவர்களை வீட்டு குவாரன்டீனில் இருக்குமாறு அறிவுறுத்துகிறது. அவசர கால உதவிக்கு வரும் நோயாளிகளை எப்போதும்போல மருத்துவமனையில் அனுமதித்து, அந்தந்த மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். உடனடியாக அறுவைசிகிச்சை தேவைப்படும் விபத்து நோயாளிகளுக்கு அதையும் செய்கிறோம். முன்னரே அறுவைசிகிச்சைக்கு தேதி கொடுத்தவர்களுக்கு, அது அவசர சிகிச்சையா, சில நாள்கள் தள்ளிப்போடக்கூடியதா எனப் பார்த்து ,அதற்கேற்ப முடிவு செய்கிறோம். கேன்சர் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை”என்றார்.
மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பாரதி செல்வன் கூறியதிலிருந்து…
“நோயாளிகள், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மருத்துவரை நேரில் சந்திக்கலாம். அப்படி அல்லாமல், சாதாரண சந்தேகங்களுக்கு மருத்துவரை செல்போனில் அழைத்து, அறிகுறிகளைச் சொல்லி விளக்கம் பெறலாம், வாட்ஸ்அப்பில் அந்த நோயாளியின் முந்தைய மருத்துவ ரிப்போர்ட்களை மருத்துவருக்கு அனுப்பியும் ஆலோசனைகள் பெறலாம்.

மக்கள், சுயமருத்துவத்தைத் தவிர்ப்பது நல்லது. எந்தப் பிரச்னைக்கும் மருத்துவரின் ஆலோசனை கேட்டு மருந்துகள் உபயோகிக்கலாம். மாரடைப்பு போன்ற தீவிர பிரச்னைகள் ஏற்பட்டால், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் செய்து, அந்த ரிப்போர்ட்டை பெற்றுக்கொண்டு, மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்” என்றார்.
Also Read: இரானுக்கு அமெரிக்கா விதித்த தடையை மீறி பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மருத்துவ உதவி!