பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் மீது பெங்களூரைச் சேர்ந்த ஹெச்.ரவீந்திரா என்பவர் சார்பில் பெங்களூர் விஜயநகர காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பான செய்தி கர்நாடகத்திலிருந்து ஒளிபரப்பாகும் சேனல்களில் வெளியானது.

இந்தச் சம்பவம் குறித்து ஹரி, தன்னிலை விளக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,“ கடந்த சில தினங்களாக என்னைப்பற்றி தவறான ஒரு வதந்தியை பரப்பும் வகையில் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிவருகிறது.

ஹரி நாடார்

பெங்களூரைச் சேர்ந்த ஹெச்.ரவீந்திரா என்பவர், தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தும் வகையில் லோன் கேட்டார். அவர் பா.ஜ.க சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அவர், ரியல் எஸ்டேட் தொழிலை விரிவுபடுத்த வெளிநாட்டுக் கம்பெனியிடம் 150 கோடி ரூபாய் கடனை வாங்கித் தரும்படி என்னிடம் கேட்டார். அவர் அளித்த ஆவணங்களைச் சமர்ப்பித்து எனக்குத் தெரிந்த வெளிநாட்டுக் கம்பெனியிடம் கடன் வாங்க முயன்றேன். ஆனால், அவர் போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.

வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கான கிரெடிட் கார்டு வாங்க வேண்டும் என்றால் அதற்கென சில வழிமுறைகள் உண்டு. அதற்குரிய ஆவணங்களை வங்கிகளில் செலுத்த வேண்டும். 150 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய்க்கான சொத்து மதிப்பு ஆவணங்களைத் தந்திருக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் சரியான வருமான வரி சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரங்களைத் தந்திருக்க வேண்டும். இதுபோன்ற அத்தியாவசிய கணக்கு வழக்குகளை சமர்ப்பித்திருக்க வேண்டும். அவர் இதுபோன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. கடைசி நேரத்தில் வெளிநாட்டு நிறுவனம் கடன் கொடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டது.

அதனால் அவருக்கு கடன் வழங்க இயலாமல் போய்விட்டது. அவருடைய அரசியல் சுய லாபத்துக்காக பொய்யான புகாரளித்து பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் முறையாக எங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லியுள்ளோம். வங்கிக் கணக்கு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இது ஒரு நீதிமன்ற வழக்கு.

ஹரி நாடார்

என் வளர்ச்சியைப் பிடிக்காமல் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வீடியோக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து நியாயமான முறையில் இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சரியான ஆவணங்களைத் தந்தால் ஹெச்.ரவீந்திரா மட்டுமல்லாமல் யாராக இருந்தாலும் கடன் உதவி பெற்றுத் தருவேன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேச ஹரிநாடாரிடம் பல தடவை முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.