தமிழகத்தில் கோவிட் – 19 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகும் சூழலில், இரண்டு நாள்களுக்கு முன் கோவையில் பிறந்து 10 மாதங்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைக்கு, தொற்று அதன் தாயிடமிருந்து வந்துள்ளதென அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தாய், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அவர் ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வந்திருந்திருக்கிறார். கடந்த மார்ச் 20-ம் தேதிதான் அவர் கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணியில் சேரும்போதே அவர் காய்ச்சல் பாதிப்பில் இருந்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் தெரியவந்தவுடன், அவருக்கு கோவிட் – 19க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவில், அம்மருத்துவரின் குழந்தை – மருத்துவரின் தாய், அவருடன் பணியாற்றிய பணிப் பெண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் கணவர் மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோரும் கொரோனா அறிகுறியுடன் இருக்கின்றனர் என்பதால், அவர்கள் இப்போது கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனராம்.

இந்த நிலையில், கொரோனா விஷயத்தில் மருத்துவப் பணியாளர்களின் உடல்நலமும் அவர்களின் பாதுகாப்பும் இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர் மருத்துவச் செயற்பாட்டளர்கள். தமிழக மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் நம்மிடையே பேசினார்.
“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களுக்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு ஆடைகள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால், இன்றைய தேதிக்கு நம் பணியாளர்கள் அணியும் ஆடையில், கழுத்துப் பகுதி முழுவதும் தெரிகிறது. ஓர் அடுக்கு ஆடையை மட்டுமே பலரும் அணிகின்றனர். மேலும், பெரும்பாலான பணியாளர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அணிய அறிவுறுத்தப்படும் மாஸ்க்தான் கொரோனா தற்காப்புக்கு அளிக்கப்படுகிறது. தரமற்ற தொப்பி, தரமற்ற முகக்கவசம் என மருத்துவப் பணியாளர்களின் உடல்நலனை அரசும், அதிகாரிகளும் தொடர்ச்சியாகக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இன்றைக்கு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் பட்டியலை அதிகம் கொண்ட நாடான இத்தாலி, செய்யத்தவறிய முதன்மையான விஷயம் தன் மருத்துவப் பணியாளர்களைக் காக்காமல் விட்டதுதான். தனது பல மருத்துவப் பணியாளரை இழந்துள்ளது அந்நாட்டு அரசு. விளைவாக, இன்று நோயாளிகளைக் காக்க ஆளின்றி தவிக்கிறது இத்தாலிய அரசு.
ஒருவேளை இந்தியாவில் மருத்துவப் பணியாளர்கள் இனியும் கவனித்துக் கொள்ளாமல் விடப்பட்டால்,
* மெடிக்கல் க்ரைஸிஸ் வரும். அதாவது, நோயாளிகளை கவனித்துக் கொள்ளப் போதிய மருத்துவர்கள் – செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். ஏற்கெனவே இந்தியாவில் இப்போது கம்யூனிட்டி ஸ்ப்ரெட்டிங் எனப்படும் உள்ளூர் பரவுதல் அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்தச்சூழலில், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவர் பற்றாக்குறை உருவாகிவிட்டால், நம் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு திணறக்கூடும்.

* நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிடவும் அதிகரிக்கும். ஏனெனில் மற்றவர்களைவிடவும், மருத்துவப் பணியாளர்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான – நலிவுற்றோரையும் அவர்களின் குடும்பத்தையும் அதிகம் சந்திப்பார்கள். அதேபோல அவர்களில்தான் அறிகுறிகளற்ற நபர்கள் (Asymptomatic Persons) அதிகமாக இருப்பார்கள். அன்றாடம் நிறைய நோயாளிகளைச் சந்திக்கும் ஒரு நோயாளி என்ற முறையில், சராசரி சாமானிய மக்களைவிடவும் இவர்கள் அதிகம்பேருக்கு நோயைப் பரப்புவார்கள்.

இவையெல்லாம், இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு ஆபத்தான விஷயங்கள். இவற்றையெல்லாம் தடுக்க, அரசு உடனடியாக நம் மருத்துவப் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் `வென்டிலேட்டர் – என் 95 மாஸ்க் தயாரிப்புக்குச் சொல்லியிருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார். இந்தியாவில் முதன் முதலில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது ஜனவரி மாத இறுதியில். இப்போது மார்ச் இறுதிக்கு வந்துவிட்டோம். ஜனவரியிலிருந்தே, அனைத்துப் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அமைச்சர் சொன்ன விஷயம், `தமிழகம் அனைத்துக்கும் தயார் நிலையில் இருக்கிறது’ என்பது. ஆனால், இப்போதுதான் ஆர்டரே கொடுத்திருக்கிறார்களாம். எனில், இத்தனை நாள்களாக இவர்கள் என்ன செய்தார்கள்?
அதிகாரவர்க்கம், இனியும் தாமதிக்காமல், இனியும் சூழலை மறைக்காமல் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
Also Read: கொரோனா: `சூப்பர் ஆக்ஷன் டீம்’ அமைக்க ஆவன செய்யுமா தமிழக அரசு?
கொரோனா மாதிரியான ஒரு பேண்டெமிக் சூழலில், நம் பணியாளர்களைக் காப்பது மட்டுமே, நம்மை நாம் காத்துக் கொள்ளச் சிறந்த வழி, ஒரே வழி!” என்றார் அவர்.
மேலும், பணியாளர் தேர்விலும் அரசு கவனமாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார் ரவீந்திரநாத்.
“சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படும் மருத்துவர்களும் பணியாளர்களும் எந்தவித வாழ்வியல் நோய் பாதிப்பும் இல்லாதவராகவும் – ஆரோக்கியமான நபராகவும் இருக்கவேண்டுமென்ற விதியை அரசு வலியுறுத்த வேண்டும். இல்லையேல், அவர்கள் நோய்க்கு எளிய இலக்காக ஆகிவிடுவர்.

அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்தப் பேரிடர் காலத்தில், சிறப்பு ஊதியத்தை அரசு தர வேண்டும். குறைந்தபட்சமாக, நிரந்தரமாக்கப்பட்ட பணியாளர்களின் சம்பளத்தையாவது அரசு இவர்களுக்குத் தர வேண்டும்.

சிகிச்சையளிக்கச் செல்லும் பணியாளருக்கு மட்டுமன்றி, அவரின் குடும்ப நலனையும் மத்திய மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசு இன்ஷூரன்ஸ் அளிக்கப்பட வேண்டும்.
தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்யப்படும் இந்த அவசரகால மருத்துவச் சேவையில், மருத்துவப் பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பணியாளர்தான் சேவையளிக்க வர வேண்டும் என்ற கருத்தையும் அரசு முன்னிறுத்த வேண்டும்” என்றார் அவர்.
அரசின் செவிகளுக்கு இந்தக் கருத்து எட்டுமென எதிர்பார்க்கிறோம்!