கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ந்துபோய்க் கிடக்கின்றன. சீனாவில் தொடங்கிய பாதிப்பு, தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி காலை நிலவரப்படி இந்தியாவில் 1,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழகத்திலும் 234 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் இறந்துள்ளார். சமூகப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, மார்ச் 24-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சரக்கு கிடைக்காமல் `குடிமகன்கள்’ தள்ளாடி வந்த வேளையில் ஒரு சில இடங்களில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பது தொடங்கியுள்ளது. சிவகங்கையில் ஒருபடி மேலே சென்று டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

சரக்கு எப்படி பதுங்கியது?
144 தடை உத்தரவு அமலாகப்போகிறது என்று அறிவிப்பு வெளியாகும் முன்பே பல போதை விரும்பிகள் மதுபானங்களை வாங்கி சேமித்துவிட்டனர். சரக்கு கிடைக்காதவர்கள், சரக்கு தீர்ந்து போனவர்கள் இடையே இப்போது மதுபானத்துக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில கும்பல்கள், கொள்ளை லாபத்துக்கு கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொழிக்கிறார்கள். 144 தடை உத்தரவு அமலான மார்ச் 24-ம் தேதிக்கு இரண்டு நாள்கள் முன்னரே, சில டாஸ்மாக் பணியாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு, முன்கூட்டியே பில் போட்டு பெட்டி பெட்டியாக மதுபானங்களை சில கும்பல்கள் பதுக்கிக் கொண்டன. இந்த மதுபானங்களை இப்போது இரட்டிப்பு விலைக்கு விற்கிறார்கள். நாள்கள் செல்லச் செல்ல விலையும் கூடிக்கொண்டே செல்கிறது.
உதாரணத்துக்கு, நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைக்கண்விநாயக நல்லூர் அரசு மதுபானக் கடையின் மேற்பார்வையாளர் இளஞ்செழியன், விற்பனையாளர் காமராஜ் உதவியாளர்கள் வெற்றிவீரன், மகேந்திரன், வீரராஜ் ஆகிய 5 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அரசு மதுபானக் கடையில் இருந்து 55 பெட்டிகள் கொண்ட 2,640 மதுபான பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக, வெளியே எடுத்து காரில் ஏற்ற இவர்கள் முயன்றுள்ளனர். தகவலறிந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் வந்தனா தலைமையிலான போலீஸார் அவர்கள் அனைவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான 2,640 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இது ஒரு பருக்கைதான். இதுபோன்று வெளியே தெரியாமல் பாட்டில்களைப் பதுக்கிய சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

பக்கா டெலிவரி பாய்ஸ்
சிவகங்கை மாவட்டத்தின் ஒக்கூர், மதகுப்பட்டி, மானாமதுரை, தேவகோட்டை, கல்லல் ஆகிய பகுதிகளில் மதுபானங்கள் டோர் டெலிவரியும் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெலிவரி பாய்ஸ்களுக்குப் போன் செய்து எவ்வளவு மதுபானம் வேண்டும், முகவரி ஆகிய விவரங்களைச் சொல்லிவிட்டால் போதும், வீட்டுக்கே சரக்கு டெலிவரி செய்யப்படுகிறது. ஒரு பைக்குக்கு இரண்டு பேர் வீதம் பக்காவாக முகக்கவசம், கையுறை போட்டுக்கொண்டு உலா வரும் டெலிவரி பாய்ஸ்கள், கஸ்டமர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டாலும், அதில் சிறிதளவு மதுபானத்தைத் தெளித்து சுத்தப்படுத்திக்கொண்ட பின்னரே எடுத்துக் கொள்கின்றனர். லோக்கல் காவல்துறையினரின் உதவியோடு இந்த டோர் டெலிவரி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், வாகன தணிக்கையிலும் தப்பிவிடுகிறார்கள். புல் பிராந்தி, பீர் பாட்டில்களுக்கு மட்டும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. குவார்ட்டர், ஹாஃப் மதுபானங்கள் சரளமாகக் கிடைக்கின்றன.
இது குறித்து பல்வேறு பொதுநல வழக்குகள் தொடர்ந்துவரும் வழக்கறிஞர் எட்டிமங்கலம் ஸ்டாலின் நம்மிடம் கூறுகையில், “தமிழகம் முழுதும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொரோனோ தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சமயத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை ஜோராக நடைபெற்றுவருகிறது. அரசு 144 தடை உத்தரவு போட உள்ளது என்று தெரிந்துகொண்ட நபர்கள் மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா பொருள்களை தேக்கி வைத்துக்கொண்டனர்.

144 தடை நீடிப்பதால் நாள்கள் அதிகரிக்க, அதிகரிக்க தங்களிடம் இருக்கும் மதுவின் விலையை அதிகமாக்கி லாபம் பார்க்கின்றனர். போதைக்கு அடிமையாகிய ஆசாமிகளின் நிலையை உணர்ந்து நிறைய பணம் பார்க்கின்றனர். மது பாட்டில்கள் விலை அதிகமாக இருக்கிறது என்பதால் சில இளைஞர்கள் மருந்துக்கடைகளில் வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை பெற்று போதை வஸ்துவாகப் பயன்படுத்துகின்றனர். கொரோனோ வைரஸ் நோயைவிட இது தமிழகத்துக்கு கொடிய நோயாக மாறிவிடும்.
இந்த விஷயங்களைக் காவல்துறையினர் தெரிந்தும் தெரியாததுபோல் விட்டு விடுகின்றனர். இதை உயர் அதிகாரிகள் முறையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் நபர்களின் சொந்த உறவினர்களும் சிலர் தவறான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மதுரை சரக டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.




சிவகங்கையில் மட்டுமல்ல, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இதே நிலைமைதான். திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி மதுபானம் தயாரித்த கும்பலை அம்மாவட்ட எஸ்.பி விஜயகுமார் கலால்துறை உதவியுடன் பிடித்துள்ளார். போலீஸார் கொரோனா 144 தடை உத்தரவை அமல்படுத்தும் பணியில் தீவிரமாகிவிட்டதால், மதுபானங்கள் விற்பனை கள்ளச்சந்தையில் சக்கை போடு போடுகிறது. இதில் கள்ளச்சாராயம் ஏதாவது கலந்து விற்கப்பட்டால், அதனால் ஏற்படப் போகும் உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது. போலீஸார் தங்கள் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும், இந்த வியாபாரத்துக்கு உடந்தையாக இருக்கும் போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.