நாடுமுழுவதும் ஊரடங்கால் அத்தியாவசியம் தவிர அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கிற நிலையில் கேரளத்தில் மது கிடைக்காமல் பலரும் தற்கொலை செய்துகொள்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கொரோனாவால் அம்மாநிலம் மிகுதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிற சூழலில், தற்போது மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. கேரள அரசு, மருத்துவர் பரிந்துரைக் கடிதத்துடன் வருபவர்களுக்கு மது விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. தமிழக அரசும் மதியம் 2 மணிநேரம் மதுவிற்பனை செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் மது விற்பனை சரியா என்பது பற்றி நிபுணர்களிடம் பேசினோம்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம், “மதுப் பிரியர்களின் வகைகளைப் புரிந்துகொள்வது அவசியம். மதுப்பிரியர்களை சோஷியல் டிரிங்கர்ஸ், டிபெண்டன்ட் டிரிங்கர்ஸ், டிரிங்க் அடிக்ட்ஸ் என மூன்று வகையினராகப் பிரிக்கலாம். முதல் நிலையில் இருக்கிற சோஷியல் டிரிங்கர்கள், எப்போதாவது விரும்பினால் மது அருந்தலாம் என்ற வகையினர். இவர்களுக்கு மது கிடைக்காமல்போவது பிரச்னை இல்லை. சூழலைப் புரிந்து கொள்வார்கள். தீவிரமாக இன்றி, மிதமாகக் குடிப்பவர்கள் இரண்டாவது வகை. டிபெண்டன்ட் டிரிங்கர். இவர்களையும் மாற்று மருந்து தந்து சரிசெய்திட முடியும். அவர்களும் சில நாள்களிலேயே சரியாகத் தொடங்கிவிடுவார்கள். இந்த மூன்றாவது வகையினருக்கு மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை. ஆனால், அதற்காக மது கொடுத்துக் கொண்டேயிருந்தால்தான் சரியாகும் என்று இல்லை.

Also Read: `பாதிப்பை சரி செய்யவும், தற்கொலைகளை தடுக்கவும் மட்டுமே.!’ -குறைந்த அளவில் மது விற்பனை செய்யும் கேரளா

தன்னிலை மறந்து, குடியை மட்டுமே நினைக்கிறவர்கள்தான் மூன்றாவது வகையினர். இவர்களின் உடலும் மனமும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் குடியை நிறுத்தினால், ஒருவித குழப்ப மனநிலைக்கு வந்துவிடுவார்கள். அதை, Delirium Tremens என்று சொல்வோம். இந்த நிலை முற்றிப்போய் வலிப்பு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. மரணமேகூட நேரலாம். இவர்களைக் குடியிலிருந்து வெளியே கொண்டுவருவதுதான் சவாலானது. ஆனால், அரசாங்கம் நினைத்தால் நிச்சயமாக முடியும். அதற்கான மருந்துகள் இருக்கின்றன.

போதை

அரசாங்கம் இந்த ஊரடங்குச் சூழலை, ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காயா’கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மதுக்கடைகள் மூடியாகிவிட்டது, மது கிடைக்காது. அப்போது, மது அருந்த வேண்டும் என நினைப்பவர்களை, அந்த அறிகுறிகள் தென்படுகிறவர்களை, மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறச் சொல்லலாம். அந்த மாதிரி அணுகுமுறையைத்தான் அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். மாறாக, மதுக்கடைகளைத் திறந்து மதுவிற்பனை செய்ய வேண்டும் என்பது சரியல்ல. காரணம், இதில் வேறு சில சிக்கல்களும் இருக்கின்றன.

Also Read: 10 லட்சத்தில் 32 பேர்; `விதிவிலக்கு’ கேரளா! – இந்தியாவில் கொரோனா டெஸ்ட் தரவுகள் சொல்வது என்ன?

ஊரடங்கு இருப்பதால், வேறு எங்கேயும் போக முடியாமல் மதுவே கதி என்று ஆகிவிடலாம். சோஷியல் டிரிங்கராக முதல் நிலையில் இருக்கிறவர்கள் இரண்டாவது நிலைக்கும், டிபெண்டன்ட் டிரிங்கர் என்கிற இரண்டாவது நிலையில இருக்கிறவர்கள் மூன்றாம் நிலைக்கும் முன்னேறிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதாவது, அவ்வப்போது குடிப்பவர்கள் அடிக்கடி குடிக்கவும், குடிக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அது ரொம்ப மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என்றார்.

மது

கஸ்டம்ஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் வெங்கடேஷ் பாபு, “குடிப்பவர்கள் எந்த ஸ்டேஜில் இருப்பார்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். மதுவுக்கு அடிமையாதல் என்பது ஃபைனல் ஸ்டேஜ்தான். தொடர்ந்து குடிக்காமல் இருந்தால் கை நடுக்கம், மனக்குழப்பம் எல்லாம் வரும். மற்றபடி, சோஷியல் டிரிங்கர், டிபெண்டன்ட் டிரிங்கர் ஆகிய இரண்டு நிலையில் இருப்பவர்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி, பழக்கத்திலிருந்து வெளியேற முடியும்.

Also Read: கொரோனா ஊரடங்கு: குடிநோயாளிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு?

சாதாரணமாகவே, மது அருந்துபவர்களுக்கு அந்தப் பழக்கம் மனத்தில் பதிந்திருக்கும். மது கிடைக்காவிட்டால், அவர்களின் மனம் சிரமமாக உணரும். உடல் உறுப்புகள் எல்லாமே அந்த மதுவுக்குப் பழகியிருக்கும். திடீரென்று பழக்கத்தை நிறுத்தினால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். போதையிலிருந்து மீண்டு வருவதற்கு மருத்துவர்கள் போதை உணர்வைக் கொடுக்கிற மருந்துகளைத் தருவார்கள். அந்த மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைச் சரிசெய்யத் தொடங்கும்.

வெங்கடேஷ் பாபு

சோஷியல் டிரிங்கருக்கும், டிபெண்டன்ட் டிரிங்கருக்கும் இந்த நாள்கள் வரப்பிரசாதம். மது கிடைக்காமல், வெளியிலும் செல்ல முடியாததால் குடிக்காமல் இருப்பார்கள். இவ்வளவு நாளாகக் குடிக்கவில்லை, இனியும் குடிக்க வேண்டுமா என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதற்கு இந்த லாக்-டவுண் நாள்கள் கட்டாயம் பயன்படும். ஆனால், குடிக்கு அடிமையான நிலையிலிருப்பவர்களுக்குத்தான் கஷ்டம். அவர்கள் சுயநிலை மறந்திருப்பவர்கள்.

Also Read: சுய ஊரடங்கு… களையிழந்த கல்யாண நிகழ்ச்சிகள். ராமேஸ்வரத்தில் சூடுபிடித்த கள்ள மது விற்பனை!

மதுக்கடைகளைத் திறப்பது என்ற அரசின் முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் தவறானது. மூடுவதற்கு முன்பு கொஞ்சம் கொஞ்சமாக அறிவுறுத்தியிருக்க வேண்டும். அல்லது திறக்காமலேயே இருந்து மதுவிலிருந்து விடுபட மறுவாழ்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும். மதுவினால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களைச் சரிசெய்கிற முயற்சியிலாவது இறங்க வேண்டும். அதை விட்டுட்டு, இந்தச் சூழலில் மது விற்பனை செய்யத் தொடங்குவது நல்ல அறிகுறியல்ல. தவிர, வீட்டிலிருக்கும் தனிமை புதிய மதுப்பிரியர்களை உருவாக்கவும் வழிசெய்யும். பழக்கத்திலிருந்து விடுபட்டு ஒதுங்கியிருந்தவர்களையும் மீண்டும் மதுவின் பக்கம் வரவழைக்கும் ஏற்பாடாகவும் இது அமைந்துவிடும்.

டாஸ்மாக் கடை

மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு மதுவைத் தேட எண்ணம் வரும்; எப்படியாவது மது கைக்குக் கிடைக்கிற வழியை யோசிக்க வைக்கும். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் அவர்களைப் புரிந்துகொண்டு, நோயாளிகளைப் போல நடத்தாமல் அன்பையும் அரவணைப்பையும் அவர்களுக்குத் தந்தால், கண்டிப்பாக சோஷியல், டிபெண்டன்ட் டிரிங்கர்களை மீட்டுவிடலாம். எல்லா மருத்துவமனைகளிலுமே மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவை இயங்குவதும் இல்லை, யாரும் வருவதும் இல்லை. அதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த ஊரடங்கு நாள்களை மதுவுக்கு எதிரான பணிகளுக்காகவும் பயன்படுத்திக்கொண்டால் ரொம்பவும் நல்லது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.