கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில், வாக்களித்த மக்கள் வீட்டுக்குள் முடங்கிச் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.

இவர் வைத்த கோரிக்கையை அடுத்துதான், கடன் தவணையை 3 மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில்தான், வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகளை அறிவித்துள்ளது, அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சு.வெங்கடேசன்.எம்.பி

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், ”வீட்டுக்குள் 21 நாள்கள் தனித்திருப்பது பெரியவர்களுக்கே பெரிய சவாலாக இருக்கும்போது, நம் குழந்தைகள் எப்படித்தான் இதைக் கடந்து வருவார்கள்? விளையாட்டுகளையும், நண்பர்களையும் பிரிந்து வாடிக்கொண்டிருக்கும் அவர்களின் சோகம் மிகப்பெரியது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளைச் சோர்வடைந்துவிடாமல் உற்சாகமாக வைத்திருக்கப் பெற்றோர்கள் படும்பாடும், அதனால் அவர்கள் அடையும் மன உளைச்சலையும் அறிந்துகொள்ள முடிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், இதற்கு சிறு அளவிலாவது உதவ முடியுமா என ஆலோசித்ததன் விளைவாக, குழந்தைகளுக்கான கலை இலக்கியப் போட்டிகளை நடத்த முடிவு செய்தோம். இதற்கு, அபராஜிதா நிறுவனமும் உதவ உள்ளது. வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். இதன்மூலம் தங்கள் படைப்பாற்றலை வளர்க்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். படைப்பாற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி அறிவிப்பு

போட்டி பற்றி சொல்கிறேன், நாள்தோறும் ஒரு கதையைத் தமிழ், ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியில் எழுத வேண்டும். ஒவ்வொரு மொழிப்படைப்புக்கும் தனித்தனியே பரிசுகள் உண்டு. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவர்கள் 100 வார்த்தைகளுக்குக் குறையாமலும், 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிப்பவர்கள், 300 வார்த்தைகளுக்கு மிகாமலும் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 500 வார்த்தைகளுக்குக் குறையாமலும் எழுத வேண்டும்.

இதுபோல் நாள்தோறும் ஒரு கவிதை, நாள்தோறும் ஓர் ஓவியம், நாள்தோறும் ஒரு குறும்படம், நாள்தோறும் ஒரு நகைச்சுவை ஆகியவற்றை வாட்ஸ்அப், மெயில் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

இப்போட்டிகளில், பெற்றோர்கள் படைப்பினை உருவாக்கி குழந்தைகள் பெயரில் அனுப்பக்கூடாது. அது, குழந்தைகளின் படைப்புத்திறன் வளர்ச்சிக்கு உதவாது. இப்போட்டிகளில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். ஏப்ரல் 2 முதல் 11-ம் தேதி வரை 10 நாள்களுக்குத் தங்கள் படைப்புகளை அனுப்பலாம். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களும் சமமான எண்ணிக்கையில் பரிசுக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

அனைத்துப் போட்டிகளிலும் நாளொன்றுக்கு 120 பேர் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தேர்வுசெய்யப்படும் ஒவ்வொருவரும் தலா ரூ.250 பரிசாகப் பெறுவர். மூன்று நாள் இடைவெளியில் பரிசு அறிவிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு பரிசுத்தொகை அனுப்பிவைக்கப்படும்.

சு.வெங்கடேசன்

ஒட்டுமொத்தமாக 10 நாள்களிலும், ஒவ்வொரு வகையில் சிறந்த படைப்புக்கு தலா ஒருவர் வீதம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படும். இந்த 10 நாள்களிலும் உங்கள் வீட்டுச் சிறார்கள், இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனுபவத்தை எழுதி அனுப்ப வேண்டும். ஏப்ரல் 12 முதல் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதில் சிறந்த 12 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.5000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்கும் இப்போட்டிகளுக்கு பரிசுத்தொகையை அபராஜிதா நிறுவனம் வழங்குகிறது. போட்டி மனோநிலையோ, பரிசுத் தொகையோ முக்கியமல்ல. இன்றைய சூழலில் குழந்தைகளும் சிறுவர்களும் வீட்டுக்குள் இருக்க வேண்டிய நிலையில், அதை ஆக்கபூர்வமானதாக ஆக்குவதற்கான முயற்சிதான் இது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.