கண்ணுக்குத் தெரியாமல் ஒற்றை ஆளாக நின்று உலகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். வருங்காலத்தில் இந்தப் பெயரை எப்போது, எங்கு கேட்டாலும் ஒரு விநாடி அச்சம் தொற்றிக்கொள்ளும் அந்த அளவு மொத்த உலக மக்களையும் ஒரே நேரத்தில் முடக்கி, வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்துள்ளது இந்த வைரஸ் அரக்கன். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள், பணக்காரன், ஏழை என்று யாருமே கொரோனா பிடியிலிருந்து தப்பிக்கவில்லை.

கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியனை நெருங்கிக்கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,000-த்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அதிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைப் பொறுத்தவரை தற்போது அங்கு 29,474 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் எனப் பெரிய தலைகளையும் விட்டுவைக்கவில்லை இந்தக் கொடிய கொரோனா.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின் அவரும் அரசக் குடும்பத்தினரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். அரசாங்கம், மருத்துவ அறிவுறுத்தலின் படி இளவரசரும் அவரின் மனைவியும் ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள இளவரசர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு, இங்கிலாந்து மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இளவரசர்

அதில் பேசியுள்ள இளவரசர், “ஒரு தேசமாக மிகுந்த சவாலான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதனால் நம் மில்லியன் கணக்கான குடிமக்கள் வாழ்வாதாரங்கள் இழந்து தவிக்கின்றனர். மேலும், இது மக்கள் உடல் நலனையும் கடுமையாக அச்சுறுத்துகிறது. இந்த நிலை எப்போது முடிவடையும் என நம்மில் யாரும் சொல்ல முடியாது. ஆனால், நிச்சயம் சீக்கிரமே முடிவடையும். அந்த நாள் வரும் வரை நாம் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்து வரவிருக்கும் சிறந்த நாள்களை எதிர்நோக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா… சோதனை தொடர்பாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

தொடர்ந்து தன் தனிமைப்படுத்தப்பட்ட நாள்கள் மற்றும் கொரோனா சிகிச்சை பற்றிப் பேசியுள்ள அவர், “நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாள்கள் என் வாழ்வில் முன் எப்போதும் அனுபவிக்காத ஒன்று. சற்றே கடினமாக இருந்தது, ஆனாலும், ஒருவழியாக வைரஸை கடந்து வந்துவிட்டேன், லேசான அறிகுறிகளுடன் அதிர்ஷ்டவசமாக இதிலிருந்து தப்பித்து தற்போது நோயின் மறுபக்கத்தில் புதிய உலகைக் காண்கிறேன். நான் குணமடைந்திருந்தாலும் இன்னும் சில நாள்கள் என்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்.

இந்த வைரஸ் தொற்று அனைவருக்கும் ஒரு பாடம். குடும்பம், நண்பர்கள் என மகிழ்ச்சியுடன் இருந்த இயல்பான நம் கட்டமைப்புகள் திடீரென அகற்றப்படும்போது ஒரு விசித்திரமான வெறுப்பூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து முன் வரிசையில் நின்று தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.