BS-4 வாகனங்களை விற்பனை செய்ய மார்ச் 31 கடைசி தேதி என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவிவருவதால் மார்ச் மாதம் ஆரம்பத்திலிருந்தே அனைத்து வாகனங்களின் விற்பனையும் மந்தமாகிவிட்டது. அதுமட்டுமில்லை, மார்ச் 22 முதல் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று லாக்-டவுண் அறிவிக்கப்பட்டதால், பல லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிவிட்டன.

இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டு உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது. தற்போது தேங்கியிருக்கும் ஸ்டாக்குகளில் 10 சதவிகிதத்தை வேண்டுமானால் விற்பனை செய்துகொள்ளுங்கள் என ஏப்ரல் 24-ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருக்கிறது. இந்தச் சமயத்தில் டிஜிட்டலைத் தவிர வாகனங்களை விற்பனை செய்ய சிறந்த வழி இல்லை என்பதால், தற்போது அதிக ஸ்டாக் வைத்திருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் டிஜிட்டலில் விற்பனையில் இறங்கப்போவதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.
Also Read: ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance
இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர் ஒருவரிடம் பேசும்போது, “மக்கள் இன்னும் ஆன்லைனில் வாகனங்களை வாங்குவதற்கு தயக்கப்படுகிறார்கள். நேரடியாக ஷோரூம் வந்து அந்த வாகனத்தைப் பார்த்துப்போகும் அனுபவம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. என்னதான் மக்கள் நேரடியாக வந்து வாகனங்கள் வாங்கினாலும், அதற்கான பேக்கிரவுண்டு புராசஸ் எல்லாமே ஆன்லைனில்தான் நடக்கிறது. வாகனத்தின் புக்கிங் தொடங்கி, அதற்குப் பதிவு என் வருவது வரை எல்லாமே ஆன்லைனுக்கு மாறிவிட்டது. ஆன்லைனில் ஒரு வாகனத்தை முன்பதிவு செய்தாலும் அதை ஷோரூமில் வந்து டெஸ்ட் டிரைவ் செய்துபார்த்து வாங்கும்படியே நாங்களும் எடுத்துக்கூறுகிறோம். இந்தச் சூழலில் டெஸ்ட் டிரைவ் சாத்தியம் இல்லை என்றாலும், ஏற்கெனவே இந்த வாகனத்தைப் பயன்படுத்தியவர்கள் தள்ளுபடியின் காரணமாக ஆன்லைனில் வாங்குவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்தியாவில், இணையம் மூலமாக வாகனம் வாங்குவதை முதலில் கொண்டுவந்த நிறுவனம் ஹூண்டாய். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே click to buy எனும் சேவையை இந்த நிறுவனம் கொண்டுவந்துவிட்டது. இந்தச் சேவைது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஷோரூமைத் தேர்வுசெய்து, மொத்த எக்ஸ்ஷோரூம் விலையையும் இணையத்தில் செலுத்தி, வாகனத்தை அங்கேயே வாங்கிவிடலாம். தேர்வுசெய்த டீலர் மூலம் வாகனம் தரப்படும். டீலர்ஷிப் மூடப்பட்டிருந்தாலும், BS-4 வாகனங்களைப் பொதுவான டிஸ்கவுன்டில் இந்தச் சேவையில் கொடுப்பதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மஹிந்திரா நிறுவனமும் இதேபோன்ற ஒரு சேவையைக் கடந்த ஆண்டு இறுதியில் கொண்டுவந்தார்கள். வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் கார்களை ஆன்லைனில் கஸ்டமைஸ் செய்து, அங்கேயே முன்பதிவும் செய்துகொள்ளலாம். தற்போது, கொரோனா காரணமாக எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில், இந்த இணைய விற்பனையும் ஹெவியான தள்ளுபடிகளும் மக்களை வாகனம் வாங்கவைக்கும் என்று நம்புகின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.

மஹிந்திரா நிறவனம்,, தனது மராத்ஸோ மற்றும் ஆல்ட்டுராஸ் கார்களுக்கு 2 முதல் 3 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கிறது. டிவிஎஸ் நிறுவனம் அனைத்து வாகனத்துக்கும் 7500 முதல் 11,000 வரை தள்ளுபடி, ஹீரோ நிறுவம் 5000 முதல் 12,000 வரை தள்ளுபடி என BS-4 வாகனங்களுக்குப் பெரிய தள்ளுபடிகள் கிடைப்பதால், கொடுத்திருக்கும் 10 நாள்களில் விற்பனை கொஞ்சம் சூடுபிடிக்கலாம்.