ஊரடங்கு உத்தரவால் சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. அன்றாடம் யாசித்து கிடைக்கும் சிறிதளவு பணத்தைக் கொண்டே வயிற்றை நிரப்பியவர்களின் தற்போதைய நிலை வேதனை தருகிறது. அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் நிதிதிரட்டி உதவியிருக்கிறார் பிரேமா ரேவதி.

நாகப்பட்டினம் அருகே உள்ள கிராமத்தில், `வானவில்’ அறக்கட்டளை மூலம் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கான ஹோம் அமைத்து, அவர்களுக்கு கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி வருகிறார் பிரேமா ரேவதி. கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹோமில் உள்ள குழந்தைகள் பெற்றோர்களுடன் அனுப்பப்பட்டனர்.

உதவி செய்யும் மக்கள்

ஊரடங்கு என்பதால் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்களுக்கு ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தட்டுப்பாடான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பிரேமா ரேவதி, தன் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் நிதி மற்றும் பொருள்களைப் பெற்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பிரேமா ரேவதி பேசுகையில், “நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்களின் பிள்ளைகள் படிக்கும்வகையில் ஹோம் ஒன்றை நடத்திவருகிறோம். தற்போது அரசின் அறிவுறுத்தலின்படி பிள்ளைகள் அனைவரையும் பெற்றோர்களுடன் அனுப்பிவிட்டோம்.

நரிக்குறவர்கள் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர்கள், இதுவரை அவர்கள் சிறுபொருள்களைப் பேருந்து நிலையங்களில் விற்றும் கோயில்கள், பொது இடங்களில் பிச்சை எடுத்தும் தங்களது வயிற்றை நிரப்பி வந்தனர். தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால், இரண்டு நாள்கள் மட்டுமே அவர்களிடம் உள்ளவற்றை வைத்து சமைத்து சாப்பிட முடிந்தது.

அதனால், அவர்களுக்கு உதவும் எண்ணத்தில் நண்பர்களின் உதவியோடு அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்தோம்.

பிரேமா ரேவதி

உதவி தேவைப்படும் மக்கள் அதிகம் என்பதால், சமூக வலைதளத்தில் எழுதினேன். அங்கிருந்தும் உதவிகள் கிடைக்கத் தொடங்கின. ஒருவேளை உணவு அதுவும் வெந்த கஞ்சியை மட்டுமே குடித்த இந்த மக்களுக்கு சமையல் பொருள்களை வழங்கியதால் அவர்களின் மனதில் சிறு நம்பிக்கையும் முகத்தில் சிரிப்பும் மலர்ந்தது. இச் சிரிப்புக்கு உதவிய அனைவருக்கும் சமர்ப்பணம்.

மருத்துவர்கள், காவலர்கள் வரிசையில் துப்புரவுப் பணியாளர்களும் ஓய்வின்றி உழைத்துவரும் இச்சமயத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் அடுத்த நகர்வு தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் 231 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான முகக்கவசத்தைக் கொடுத்தோம்.

அவர்கள் அனைவரும் பொருளாதார அடிப்படையில் அடித்தட்டு மக்கள்தான். எனவே, நட்பு வட்டாரங்கள் மூலம் கிடைக்கும் உதவிகளைக் கொண்டு துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. முகநூலில் இதுதொடர்பாக பதிவிட்டு இருந்ததால் அதன்மூலம் தொடர்ந்து உதவுகிறார்கள்” என்றார் பிரேமா ரேவதி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.