தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சிமென்ட் ஆலையை நாளை திறக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதுவும் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் கிடையாது எனப் பகிரங்கமாக மிரட்டியிருக்கிறார்கள். “பால், தயிர் போல் சிமென்ட் என்ன அத்தியாவசிய பொருளா? ஆலையைத் திறக்க தொழில்துறை செயலாளர் துடிப்பதன் காரணம் என்ன? இவர்கள் கொள்ளையடிக்க மக்கள் சாவதா?” என ஆவேசப்படுகிறார், சிவசங்கர். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

அரியலூர் மாவட்டம், சிமென்ட்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகளும், 150-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்கங்களும் இருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யும் சிமென்ட், வெளிமாநிலங்கள் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுவருகின்றன. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்த போதிலும் சிமென்ட் ஆலைகள் இயங்கிக்கொண்டிருந்தன.

வெளிமாநிலத்திலிருந்து சிமென்ட் ஏற்ற வரும் லாரிகளால் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக மக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர். அதனால் ஆலை மூடப்பட்டது. மீண்டும் திறப்பதால்தான் பிரச்னையே வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆலைக்குள் அப்படி என்னதான் நடக்கிறது.
இதுகுறித்து தி..முக மாவட்டச் செயலாளர் சிவசங்கரிடம் பேசினோம். “அரியலூரில் அரசுக்குச் சொந்தமான சிமென்ட் ஆலை உள்ளது. பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்த பிறகும், இந்த ஆலை இயங்கிவந்தது. அதற்குத் தொழிலாளர்களும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது.

ஆலை நிறுத்தப்பட்ட நாள்களிலும் தொழிலாளர்கள் ஆலைக்கு வர வேண்டும், இல்லை என்றால் சம்பளம் கிடையாது என அறிவித்து, தொழிலாளர்களை வாட்டினார்கள். இந்த நிலையில், மீண்டும் நாளை (03.04.2020) முதல் ஆலையை இயக்க வேண்டும் எனத் தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் ஆணையிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். ஆலை ஓடும் சூழல் வந்தால், 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலைக்கு வரும் நிலை ஏற்படும். இவர்கள் 10 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள தங்கள் இருப்பிடத்திலிருந்து ஆலைக்கு வர வேண்டும். இதை ஒட்டி இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். இது தேவையில்லாத பிரச்னையை அதிகரிக்கும்.

வைரஸ் பரவலை அதிகரிக்கும். உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் போல சிமென்ட் ஒன்றும் அத்தியாவசிய பொருள் அல்ல. எங்கும் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. இந்த நிலையில் சிமென்ட் உற்பத்தியைத் தொடங்கவேண்டிய அவசியம் என்ன? அப்படி அவசியம் என்றால், ஆலையில் ஏற்கெனவே 10,000 டன் சிமென்ட் கையிருப்பில் உள்ளன. அதில்லாமல் 30,000 டன் சிமென்ட் உடனடியாகத் தயாரிக்க மூலப்பொருள்களும் கையிருப்பில் உள்ளன.
சிமென்ட்டை தயாரித்தாலும் வெளியில் அனுப்பவோ, விற்கவோ இயலாது. இப்படிப்பட்ட நிலையில் சிமென்ட் ஆலையை ஓட்ட வேண்டிய அவசியம் என்ன? சிமென்ட் ஆலை இயங்கினால் கீழே உள்ளவர்கள் முதல் மேலே உள்ள அதிகாரிகள் வரை அனைத்து தரப்பிலும் கமிஷன் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு கமிஷன் வேண்டும் என்பதற்காகவே ஆலை இயக்க நினைக்கிறார்களா என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது.
அதேபோல் மத்திய, மாநில அரசுகள் அனைவரையும் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என முயற்சி எடுக்கும் நிலையில், அரியலூர் சிமென்ட் ஆலையை ஓட வைக்க ஏன் இந்த முயற்சி? 400 தொழிலாளர்களின் குடும்பமும் பயத்தோடு ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டுமா? அப்படி ஆலை ஓடுவது அவசியம் என்றால், அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, திருட்டுத்தனமாக நடவடிக்கைக்கு என்ன காரணம்?” என்று ஆவேசமாகப் பேசினார்.

இதுகுறித்து அரியலூர் ஆட்சியர் ரத்னாவிடம் பேசினோம். ”மக்களைத் தனிமையில் இருக்கச் சொல்வது உண்மைதான். அதைத்தான் மக்களும் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். சிமென்ட் ஆலைகள் என்பது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. திடீரென ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால், கட்டடங்கள் கட்டுவதற்கு மூலப்பொருள்கள் இருத்தல் அவசியம். அதற்காகத்தான் சிமென்ட் ஆலையை மூடச் சொல்லி அரசு உத்தரவிடவில்லை. இந்த நிலையில், நாங்கள் முக்கியமாக இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொண்டிருக்கிறோம். ஊழியர்களைக் கூட்டமாகச் சேரவிடாமல் தடுக்கவும், கை, கால்களைக் கழுவி சுத்தமாக இருக்கிறார்களா என்பதை அந்த ஆலை தரப்பினர் பின்பற்றுகிறார்களா என்பதை நாங்கள் தினம்தோறும் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அரசு என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்போம்” என்று கறாராக முடித்தார்.