21 நாள் ஊரடங்கைத் தொடர்ந்து, வேலையில்லாமல் போனதால், கணவரோடு பல்லடத்திலிருந்து சிதம்பரம் வரை ஒரு பெண் கட்டுச்சோற்றைக் கட்டி எடுத்துக் கொண்டு நடைப்பயணமாகவே செல்வது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தனது கணவரோடு நடந்து வரும் ராதா

மனித குலத்தை உலகம் முழுக்க ஒரே நேரத்தில் அச்சப்பட வைத்த கொரோனா வைரஸ், உலகம் முழுக்கப் பரவிக்கொண்டிருக்கிறது.

Also Read: `தமிழ்முறைத் திருமணம்; வீடியோ கால் வாழ்த்து!’ – ஊரடங்கிலும் மரபு போற்றிய கரூர் இளைஞர்

இந்தியாவிலும் அது எட்டிப்பார்க்க, மத்திய அரசு அதை தேசியப் பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு, 21 நாள்கள் லாக் டவுன் என்கிற ஊரடங்குக்கு உத்தரவிட, மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். தமிழக அரசு எல்லா மாவட்ட எல்லைகளையும் அடைத்து சீல் வைத்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

தனது கணவரோடு நடந்து வரும் ராதா

இந்த நிலையில் பிழைப்புக்காக கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களுக்கும் சென்றவர்கள், கையில் பணமில்லாமலும் சொந்த ஊருக்குப் போக வழியில்லாமலும் தவித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பசியோடு நடந்தே சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். அதுபோல், பல்லடத்திலிருந்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிதம்பரத்திற்குக் கணவரோடு சேர்ந்து கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்டு நடந்தே சென்றுகொண்டிருக்கிறார் ஒரு பெண். கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் நடந்துவந்துகொண்டிருந்த அந்தத் தம்பதியைச் சந்தித்தோம். சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பெண்ணின் பெயர் ராதா.

நம்மிடம் பேசிய ராதா, “எங்களுக்குத் திருமணமாகி, இரண்டு பசங்க இருக்காங்க. எங்களுக்குச் சொந்த ஊர் சிதம்பரம். எங்க அம்மா, அப்பா, என்னோட கணவரோட உறவினர்கள்னு எல்லோரும் சிதம்பரத்தில்தான் இருக்காங்க. நானும், என் கணவரும் பல்லடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம். கொரோனா பாதிப்பு திடீர்னு ஏற்பட்டதால், கம்பெனியில் வேலையை நிறுத்திட்டாங்க. ‘மூணாம் தேதிதான் சம்பளம் போடுவோம்’னு சொல்லிட்டாங்க. மூன்று நாள்கள் இருக்கிற காசை வச்சு சமாளிச்சோம். இருக்கவும், சாப்பாட்டுக்கும் சிரமமா போயிட்டு. அதோடு, குடும்ப ஞாபகம் வந்துட்டு. பிள்ளைங்களைப் போய்ப் பார்க்கணும்னு ஆசை வந்துட்டு. அதனால் நானும் என் கணவரும் 320 கிலோமீட்டர் தாண்டி உள்ள சிதம்பரத்திற்கு நடந்தே போறதுன்னு முடிவு பண்ணினோம். உணவுக்காக கட்டுச்சோற்றை தயார் பண்ணிக்கிட்டோம்.

ராதா

பல்லடம் காவல்நிலையத்தில் பேசினோம். அவங்க எங்களைப் போக அனுமதித்துக் கடிதம் கொடுத்தாங்க. காலையில் 9 மணிக்குப் பல்லடத்தில் கிளம்பினோம். இப்போதுதான் கரூர் வந்திருக்கிறோம். மின்வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எங்களுக்கு மாஸ்க் கொடுத்தாங்க. அவ்வபோது, சில கிலோமீட்டர்கள் வரை பயணிக்க லாரி உதவி கிடைச்சுச்சு. அங்கங்கே மரநிழலில் உட்கார்ந்து, புளியோதரையைச் சாப்பிட்டுக்குவோம். தண்ணியும் தேவையான அளவு கொண்டு வந்துருக்கோம். வாழ்க்கையில் ஒருகிலோமீட்டர்கூட சேர்ந்தாப்புல இதுவரை நடந்ததில்லை. ஆனா, இப்போ 320 கிலோமீட்டர் தூரத்தை இந்தக் கொரோனா பாதிப்புனால நானும் என்னோட கணவரும் நடந்தே கடக்கப்போறோம். எப்படியாவது குடும்பத்தைப் போய்ப் பார்க்கணும்ங்கிற ஆர்வத்துல, நடக்குறது எங்களுக்குக் கஷ்டமாவே தெரியலை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.