கொரோனா பரவுதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரசு சார்பில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், கொரோனா பரவுதலுக்கும் ஊரடங்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இங்கே அதை விரிவாகப் பார்க்கலாம்.

முதல் விஷயம், கொரோனா வைரஸென்பது, உலகுக்குப் புதியது கிடையாது. இந்த நிமிடம் வரையில், 200-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்கள் காற்றில் இருக்கின்றன. இவற்றில், ஏழு மட்டுமே மனிதர்களைப் பாதிக்கக்கூடியவை. அதில் ஏழாவதாகச் சேர்ந்த வைரஸ் வகைதான், இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் – 19 கொரோனா வைரஸ். இதற்கு முன் ஏற்பட்ட ஆறில், உயிர்க்கொல்லிகளாக இருந்தவை இரண்டு, சார்ஸ் மற்றும் மெர்ஸ் மட்டும்தான். இந்த சார்ஸ் – மெர்ஸ் வைரஸ்கள்கூட, 26 – 27 நாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான் பாதித்தன. ஆனால் கோவிட் – 19 கொரோனா, அந்த எண்ணிக்கையையும் தாண்டி பல நாடுகளைச் சேர்ந்தவர்களை பாதித்துள்ளது.

கோவிட் – 19 – ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, இப்போதைய நிலவரப்படி 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இறப்போ, 40,000-ஐத் தாண்டியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தியா தனது நான்கு இலக்கக் கணக்குகளைக் கடந்த வாரத்தில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் நோயாளிகள் நிலவர எண்ணிக்கை அதிகரிப்புக்கான கிராபை, இங்கு நீங்கள் காணலாம்

இப்போது, கோவிட் – 19 பாதிப்பால் மிகத்தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் (அதிக நோயாளிகள் – அதிக இறப்புகள் என்ற அடிப்படையில்) 5 நாடுகளை எடுத்துக்கொள்ளலாம். அந்தந்த நாடுகளில் எல்லாம், முதல் நான்கு வாரங்களில் நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தது என இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தத் தரவுகளின் வழியாக, உலகளவில் அதிகமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள அனைத்து நாடுகளுமே, தங்களின் இரண்டாவது வாரத்தில் இரட்டை இலக்க எண்களை ஒட்டியே நோயாளிகள் வைத்திருப்பதையும், அடுத்தடுத்த வாரங்களில் சர்வசாதாரணமாக மூன்று இலக்க, நான்கு இலக்க எண்களை அவர்கள் அடைந்திருப்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

சீனாவைத் தவிர பிற நாடுகள் அனைத்திலுமே, முதல் நிலை பாதிப்புக்குக் காரணம், கொரோனா இருக்கும் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணப்பட்டது. அதாவது, Imported cases. இந்த நோயாளிகளை அந்தந்த நாடுகள் அலட்சியமாகக் கையாண்டதன் விளைவாக, Local Transmission எனப்படும் முதல் நிலை நோயாளிகளிடமிருந்து, உள்ளூர் மனிதர்களுக்கு நோய்த் தொற்றியது. உள்ளூர் நோயாளிகள், Community Spreading எனப்படும், தங்களைச் சுற்றியுள்ளவர்கள் – குடும்பத்தினருக்கு நோயைப் பரப்புகின்றனர். இப்படி ஊரின் எல்லா மூலைகளில் இருப்பவர்களும் பாதிக்கப்படும்போது, நிலைமை கையை மீறிப் போகின்றது. இங்கு, நோய் பெருந்தொற்றாகின்றது.
இதில், இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவதுக்குப் போகும் போதுதான், நோயாளிகளின் எண்ணிக்கை அசுரத்தனமாக அதிகரிக்கின்றது. இப்படி ஒரேடியாக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் சிரமமான காரியமாக மாறும்.

இதன் காரணமாக இரண்டாவது நிலையின் இறுதியிலும், மூன்றாவது நிலையின் தொடக்கத்திலும் உள்ள நாடுகள் யாவும், உடனடியாகத் தங்களின் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் அவசியமாகிறது.
தரவுகளின் அடிப்படையில், இந்தியா இப்போது தனது மூன்றாவது கட்டத்தைத் தொட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி, இரண்டாவது நிலையின் இறுதியிலும் – மூன்றாவது நிலையின் தொடக்கத்திலும் உள்ள நாடுகள், உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
அதாவது, வீடுகளுக்குள் முடங்குவது. இப்படி முடங்குவதால், நோயாளிகளின் எண்ணிக்கையை நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்கின்றனர் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள்.
கோவிட் – 19 கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை அடிப்படையாக வைத்துதான், உலக சுகாதார நிறுவனத்தினர் இந்தத் தகவலைக் குறிப்பிடுகின்றனர்.
சரி, கோவிட் – 19 கொரோனா எந்த வேகத்தில் பரவும்? பிற பாதிப்புகளோடு ஒப்பிடுகையில், இது எவ்வளவு வேகமாகப் பரவும்?
எந்தவொரு நோய் பாதிப்புக்குமே, ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும்தன்மை கணக்கிடப்படும். அந்த வகையில், கோவிட் – 19 பாதிப்புக்கு ஆர்.நாட் அளவு 2.3. அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து சராசரியாக 2.3 பேருக்குப் பரவும். ஆர்.நாட் அதிகமாக இருந்தால், அந்த நோய் மிக விரைவில் எண்டெமிக் எனப்படும் பெருந்தொற்று நிலையை அடைந்துவிடும். கோவிட் – 19 கொரோனாவும், அப்படித்தான் பெருந்தொற்றானது. கோவிட் – 19 ன் பிரச்னை என்னவெனில், இது வெகு சில நாள்களில் உலகம் முழுவதும் பரவிவிட்டது. இதனால், எபிடெமிக்கிலிருந்து பேண்டெமிக் (உலகளாவிய பெருந்தொற்று) நிலையை இது அடைந்துவிட்டது.
இருப்பினும்,
அந்தவகையில், கொரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த பொது மருத்துவர் ராதாவிடம், இதுகுறித்து கேட்டோம்.

“முதலில், நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், கொரோனா உயிர்க்கொல்லி அல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், முதல் நிலை சாதாரண பாதிப்பில்தான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும்பட்சத்தில், நோய்த்தொற்று தன்னால் சரியாகிவிடும். ஒருவேளை இவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லையென்றால், அன்றாடம் இவர்கள் சந்திக்கும் நபர்களில் 3 – 4 பேருக்குத் தொற்றைப் பரப்புவார்கள். அந்த 4 பேர், அவர்கள் சந்திப்பவர்களில் 16 பேருக்குப் பரப்புவார்கள். அவர்கள், 64 பேருக்குப் பரப்புவார்கள். இப்படி நான்கு மடங்குகளாக எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காமல் சென்றுவிட்டால், அனைவருக்கும் மருத்துவம் பார்ப்பதென்பது, சாத்தியப்படாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன.
இப்படியான ஒரு நிலைதான் இன்றைக்கு இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. இத்தாலி, கோவிட் – 19 கொரோனாவால் அதிக இழப்புகளை எதிர்கொண்ட ஒரு நாடு.

இங்கு நோயாளிகள் அதிகரிப்பதை, அரசால் கையாள முடியாமல் போனதால் குணப்படுத்தும் விகிதம் குறையத் தொடங்கியது. இத்தாலியில், 1,000 பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருப்பதாக ஒரு தரவு சொல்கிறது. இப்போதைக்கு இத்தாலியின் நோயாளிகள் எண்ணிக்கை 59,138. இவர்கள் அனைவரையும் கையாளும் சக்தியோ உபகரணங்களோ அவர்களிடம் இல்லை. அந்நாட்டு மக்களிடம் நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வும் இல்லை. பிரச்னை தொடங்கிய பின்னரும் வெகு இயல்பாக அவர்கள் பொது வெளிகளில் நடமாடினர், கூட்டம் கூட்டமாகக் கூடி விழாக்களையும் விசேஷங்களையும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். விளைவு, அளவுக்கதிகமான நோயாளிகள் – அரசு தவிப்புகள் – இறப்புகள்.

நோயாளிகள் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்த பின், இத்தாலி அரசு ஒருமுக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அது,
உங்களிடம் வரும் நோயாளிகளில் யாரைக் காப்பாற்ற வேண்டும், யாரை வேண்டாம் என்ற முடிவை மருத்துவர்களாகிய நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்
என்பது. மருத்துவரால் நிராகரிக்கப்படும் நபர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே சுயமாகவோ – அல்லது குறைந்தபட்ச சிகிச்சையோ எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை பிழைத்தால், அரசுக்கு மகிழ்ச்சி. இல்லையென்றாலும், கவலையில்லை.
இத்தாலிய மருத்துவர்கள் கைவிடும் நோயாளிகளில் பெரும்பாலானோர், வயது முதிர்ந்தோராக இருப்பதாகச் சில ஆங்கில ஊடக தளங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, வாழ்ந்து முடித்தவர்களை அந்நாட்டு மருத்துவர்கள் கைவிட்டுவிடுகின்றனர். அதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணம், `முதியோருக்கு இறப்பு விகிதம் அதிகம். ஆகவே இறப்பு விகிதம் குறைவானோருக்கு மட்டுமே முன்னுரிமை தருவோம்’ என்பது. இதைவிட மோசமாக எந்தவொரு நாடாலும் கோவிட் – 19 விஷயத்தில் செயல்படவே முடியாது.
இதையெல்லாம் இப்போது நான் குறிப்பிடக் காரணம், இத்தாலி, நம் கேரள மாநிலம் அளவுக்குக் குறுகிய நிலப்பரப்பரப்பை கொண்ட சிறு நாடு. அங்கேயே இந்த நிலைமை என்றால், உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியா அலட்சியமாக இருந்தால், என்னவாகும் என்று யோசித்துப்பாருங்கள்….!
விளைவுகளைத் தவிர்க்க இங்கே தேவைப்படுவது, விழிப்புணர்வும் அலட்சியமின்மையும்தான். இப்போதைக்கு இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 1000 -ஐ தான் கடந்துகொண்டிருக்கிறது. அடுத்து வரப்போகும் ஒரு மாத காலம் நமக்கு மிகவும் முக்கியமானது. இந்த மாதத்தில் நாம் அலட்சியத்தோடு இருந்துவிட்டால், இத்தாலியைப் போல உயிர்ப்பலிகளைக் கொடுக்க நேரிடலாம். ஆகவே விழிப்போடு இருப்போம்” என்றார் ராதா.
அடுத்த ஒரு மாதம் நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், பாதிப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி மருத்துவர் மயிலன் சின்னப்பனிடம் கேட்டோம்.
“இரண்டு காரணங்கள் உள்ளன.
Asymptomatic People
1) கொரோனா பரவும் வேகம்தான் அதிகமே தவிர, இது ஆபத்தான நோய் கிடையாது. நோய் தாக்கிய ஒரு நபர், முதற்கட்ட இருமல் தும்மலின் போதே அருகிலிருக்கும் மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெற்றுக்கொண்டு, வீட்டில் முடங்கிக்கொண்டு இருந்துவிட்டால், சில வாரங்களில் அவர் முழுமையாகக் குணமாகிவிடுவார். இடைப்பட்ட நாள்களில் அவர்கள் யாரையும் பார்க்காத காரணத்தினால், நோய்ப் பரவுதல் முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிடும்.
இந்த விஷயத்தில் ஓட்டை இருக்கிறது. அதாவது, கோவிட் – 19 கொரோனா இருக்கும் அனைவருக்குமே முதல் நாளே – முதற் கட்டத்திலேயே இருமல் தும்மல் அறிகுறிகள் தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. பிரச்னை தீவிரமானபின் கூடத் தெரியலாம். இப்படியான நபர்களை, அறிகுறிகள் தெரியாதவர்கள் (Asymptomatic People) எனக்குறிப்பிடுவோம். இவர்கள், தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு கூட்டங்களில் பங்குபெற்று அனைவருக்கும் நோயைப் பரப்புவர். ஆகவே பாதிப்பு உள்ளோரைவிடவும், இவர்களை முடக்குவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இதற்கு 144 தடை உத்தரவு உதவும்.

ஹெர்ட் இம்யூனிட்டி
2) மருத்துவத்தில், ஹெர்ட் இம்யூனிட்டி என்றொரு கோட்பாடு இருக்கிறது. போலியோ ஒழிப்புக்கான தடுப்பு மருந்து விஷயத்தில் இதை நாங்கள் சொல்லுவோம். அதாவது, போலியோவுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேரில், 85 பேர்தான். ஆனால், மீதமுள்ள 15 பேரும் நோயிலிருந்து தற்காக்கப்பட்டுவிடுவர். இதன்படி பார்த்தால், ஒரு பெரும்தொகையின் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஒரு நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வலிமையை அவர் உடலில் பெற்றுவிட்டால், மீதமுள்ள சிறு தொகையினர் பாதிக்கப்படமாட்டார்கள். இது கொரோனா விஷயத்திலும் நடக்கலாம். சிக்கல் என்னவெனில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து நம்மிடையே இல்லை. இருப்பினும் மருத்துவர்களின் நம்பிக்கை என்னவெனில், நம்மில் பெரும்பாலானோர் பொது வெளிகளில் நடமாடாமல், நோய்த்தொற்றைப் பெறாமல் இருக்கும்பட்சத்தில், வைரஸ் இயற்கையாகச் சக்தி இழக்கவோ அல்லது நாம் அதற்கு எதிரான சக்தி பெறவோ வாய்ப்பிருக்கிறது” என்றார் அவர்.
மொத்தத்தில், அடுத்த சில நாள்களுக்குத் தனிமையில் இனிமை காண்போம். அவ்வளவுதான்.