உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பெரும் வல்லரசாக விளங்கும் நாடுகளும் செய்வதறியாது தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,890 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையில் தற்போது சீனாவைத் தாண்டிவிட்டது அமெரிக்கா. இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து கொரோனா நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட விளக்கத்தை அளித்தார்.
Also Read: சுவிட்ச் ஆஃப்.. 515 பேர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிப்பு!-தமிழகத்தில் இன்றுமட்டும் 57 பேருக்கு கொரோனா
ட்ரம்ப், “சில கடுமையான தினங்களை அமெரிக்கர்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். மிக மிகக் கடுமையான இரண்டு வாரங்களை நாம் சந்திக்க இருக்கிறோம். அதிக வலிகள் கொண்ட இரண்டு வாரங்களாக இது இருக்கும்” என்றார்.

பின்னர், வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டெபோரா பிரிக்ஸ், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகாவும் அடுத்து வரும் நாள்களில் அமெரிக்காவில் என்ன நடக்கும் என்பது மாதிரியான சில மாதிரிகளையும் காட்டி விளக்கினார்.
Also Read: `பிப்ரவரியில் மலேசியா; மார்ச்சில் டெல்லி, இந்தியா..!’ -நிஜாமுதீன் கொரோனா டைம்லைன் #Nizamuddin
சமூகப் பரவலைத் தடுக்கும் விதமாக அமெரிக்கா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதனால் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையைக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார். முறையான தடுப்பு நடவடிக்கை இல்லாமல் போனால் அமெரிக்காவில் மட்டும் 15 லட்சம் முதல் 22 லட்சம் மக்கள் வரை பலியாகக்கூடும் எனத் தெரிவித்த பிரிக்ஸ், தற்போது நடைமுறையில் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் குறைந்தது 1 லட்சம் முதல் 2.4 லட்சம் மக்கள் வரை கொரோனாவால் பலியாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
எனினும், 2.4 லட்சம் எனும் எண்ணிக்கை மோசமாகப் பாதிக்கப்பட்டால் மட்டுமே நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் 1 லட்சம் என்ற குறைந்தபட்ச கணிப்பே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. மேலும், வெள்ளை மாளிகையின் இந்தக் கணிப்பு, அமெரிக்காவிடம் போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதைக் காட்டுகிறதோ எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.