பத்திரிகையாளர் சந்திப்பின் போது தோனி கோபப்பட்டு 4 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அன்று கேட்கப்பட்ட கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.
ஐபிஎல் தள்ளிப்போனது அதை நடத்தும் நிர்வாகத்திற்கு ஏமாற்றம் தான் என்றால், தோனி ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் ஆகும். ஏனென்றால் உலகக் கோப்பைக்கு பின்னர் தோனி இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும், ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட இருந்தார். ஆனால் அதுவும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போய்விட்டது. இதனால், தோனி விளையாடுவதை அவரது ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது ஒரே அடியாக ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் என தகவல்களும் வெளியாகி வருகின்றன. இது தோனி ரசிகர்களுக்கும், அவரது கிரிக்கெட் வாழ்விற்கும் பெரும் கவலை தான்.
ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவதை பொறுத்தே அவரை டி20 உலகக் கோப்பையில் சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் போட்டிகளே ரத்தாகும் என்பதால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இதே கேள்வியை தான் 4 வருடங்கள் முன்பே ஒரு பத்திரிகையாளர் கேட்டு, அதற்கு தோனி கடுப்பாகியிருந்தார்.
இன்று மார்ச் 31, 2020. அன்று மார்ச் 31, 2016. இந்த 4 வருடங்களில் அந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. அன்றைய தினம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று வெளியேறியிருந்தது. அப்போது மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தோனியிடம், ஒரு பத்திரியாகையாளர் ஒருவர் ஓய்வு பெறப் போகிறீர்களா ? எனக் கேள்வி எழுப்பினார். அதைக்கேட்டதும் கடுப்பான தோனி, பின்னர் கூல் ஆகி அந்த பத்திரிகையாளரை அருகாமையில் அழைத்தார். அவரிடம், “உங்களுக்கு நான் ஓய்வு பெற வேண்டுமா ?” என கேட்டார். அதற்கு அந்த நபர் இல்லை. இல்லை எனக்கூற, தொடர்ந்து பேசிய தோனி “நான் ஃபிட்டாக இல்லையா?” எனக் கேட்டார்.
அத்துடன் “நான் எப்படி ஓடுகிறேன்” என தோனி கேட்க, அதற்கு அந்த பத்திரிகையாளர் “மிக வேகமாக ஓடுகிறீர்கள்” என்றார். மேலும், “நான் 2019 உலகக் கோப்பையில் விளையாடுவேன் என நீங்கள் நினைக்கிறீர்களா ?” என தோனி கேட்க, அதற்கு அந்த பத்திரிகையாளர் “கண்டிப்பாக ஆமாம்” எனக் கூறியிருந்தார். ஆனால் தற்போது அந்த பத்திரிகையாளரின் கேள்வியை இந்திய கிரிக்கெட் உலகமே கேட்டுக்கொண்டிருக்கிறது.
கொரோனா தடுப்பு : தருமபுரியில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM