உலகம் முழுவதும் கொரோனா ஆடிவரும் கோரத் தாண்டவத்தில் இதுவரை சுமார் 37,000 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்கும்விதமாக ஏப்ரல் 21-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 1,251 என்றும் அதில் 32 உயிரிழப்புகள் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதேபோல தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரேநாளில் 57 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை என அனைவரும் ஒன்றிணைந்து இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்குப் பல்வேறு வழிகளில் போலீஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ ரஷீத், வாகன ஓட்டிகளை கையெடுத்துக் கும்பிட்டு, `தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிருங்கள்’ என்று கூறிய வீடியோ வைரலானது. அதுமட்டுமன்றி அதைக் கேட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அந்த எஸ்.ஐயின் காலில் விழுந்ததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஷ்பாபு கொரோனா வைரஸ் போன்று முகக் கவசத்தை அணிந்துகொண்டு, வாகன ஓட்டிகளிடம் ”நான்தான் கொரோனா. உங்க வண்டியில ஏறட்டுமா” என்று கேட்டு கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேநேரம், புதுச்சேரி போலீஸார் ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளிடம் ஒலிபெருக்கியைக் கொடுத்து கொரோனா தொற்று குறித்துப் பேச வைத்தார்கள். போலீஸார் முன்னெடுத்த இப்படியான நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இது ஒருபுறமிருக்க, தங்களது ஆர்வக் கோளாறினாலும், வித்தியாசமாக எதையாவது செய்து கவனம் பெற வேண்டும் என்பதற்காக சில போலீஸ் அதிகாரிகள் மக்களை முகம் சுழிக்க வைத்துவிடுகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியிருக்கிறது. நேற்று மாலை இருசக்கர வாகனங்களில் வெளியே வந்தவர்களை விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் நிறுத்திய டி.எஸ்.பி சங்கர், கொரோனா தொற்று குறித்து பேசிவிட்டு அவர்களை வரிசையாக நிற்க வைத்தார்.
தொடர்ந்து இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் சங்கு, மேளம், தப்பட்டை அடிப்பவர்களை வரவழைத்து, வாகன ஓட்டிகளைச் சுற்றி அவற்றை அடிக்கச் செய்தார்.
சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோ காட்சிக்கும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து அங்கு உடனே சென்ற விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், “கொரோனா தொற்று குணப்படுத்தக் கூடியதுதானே.. அதற்கு ஏன் சங்கு.. மேளமெல்லாம்… கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினாலே போதும்..” என்று டி.எஸ்.பி சங்கரிடம் கடுகடுத்தார்.
அதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறியதுடன் சங்கு, மேளம் மற்றும் தப்பட்டை அடிப்பவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.