கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 58 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 5 நபர்களில் 4 நபர்கள் டெல்லி மதக் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் எனவும், ஒருவர் சென்னை விமான நிலையத்தில் பணிசெய்தவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் வீடுகள் இருக்கும் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காய்பட்டணம் தோப்பு மற்றும் மணிகட்டி பொட்டல் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் யாரும் உள்ளே நுழையவோ, வெளியேறவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளும் ஆய்வுச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் 270 களப்பணியாளர்கள், 40 கண்காணிப்பாளர்கள் 5 மருத்துவர்கள் கொண்ட குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 4,446 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உத்தரவை மீறி வெளியே சென்றதால் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி தெருவில் சுற்றியதாக இதுவரை 1,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 887 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட ஆர்வமுடைய, நல்ல உடல்நிலையிலுள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய முழு விவரத்தினை 95667 10110 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் குமரி கலெக்டர் கூறுகையில், “களப்பணிகள் மேற்கொள்ள வரும் அனைத்து அரசு பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு பணியாளர் கேட்கும் விவரங்களை சரியான முறையில் வழங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் முற்றிலுமாகத் தடுப்பதற்காக ஒவ்வொருவரும் வீட்டிற்கு வெளியில் வராமல் அவர்களது வீடுகளிலே இருந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து டெல்லி மத மாநாட்டுக்கு 7 பேர் சென்றுள்ளனர். அதில் 4 பேர் ஊர் திரும்பிய நிலையில் அவர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மூன்றுபேர் இன்னும் ஊர் திரும்பவில்லை. டெல்லியிலிருந்து கடந்த 24-ம் தேதி இவர்கள் சென்னை வந்துள்ளனர். பின்னர் அவர்கள் குமரி மாவட்டம் வந்துள்ளனர். அவர்கள் பயண விவரங்கள், சென்று வந்த இடங்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால், சிலர் தாங்கள் சென்ற இடங்கள் குறித்தும், சந்தித்த நபர்கள் குறித்தும் கூற மறுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.