தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள புசாத் என்ற நகரத்தில் தங்கி பணிபுரிந்துவருகிறார்கள். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் அவர்கள் தவித்துள்ளனர். அந்த இளைஞர்களில் ஒருவரான பாஸ்கர் என்ற இளைஞர், தி.மு.க-வைச் சேர்ந்த தர்மபுரி தொகுதி எம்.பி-யான டாக்டர் செந்தில்குமாரை டேக் செய்து, தங்கள் பிரச்னை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

செந்தில்குமார் எம்.பி

செந்தில்குமார் எம்.பி அதை ரீட்வீட் செய்ததுடன், அந்த மாவட்டத்தின் கலெக்டரைச் சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். செந்தில்குமாரின் ரீட்வீட்டைப் பார்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி-யான மாணிக்கம் தாகூர், உடனடியாக மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி-யான ராஜீவ் சதவ்வைத் தொடர்புகொண்டு, தமிழக இளைஞர்களுக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். உடனடியாக அந்த இளைஞர்களுக்கு உதவி கிடைத்துள்ளது.

உதவி கிடைத்ததில் அந்த இளைஞர்கள் நெகிழந்துபோனார்கள். “உண்மையிலே நீங்க தான் சூப்பர் ஹீரோ” என்று எம்.பி-க்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் ட்வீட் போட்டார் இளைஞர் பாஸ்கர். அந்த இளைஞரைத் தொடர்புகொண்டு பேசினோம். “விழுப்புரம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் இங்கு ஒரு கம்பெனியில் பணியாற்றிவருகிறோம். திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் எங்களால் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டோம். தமிழக அரசு அதிகாரிகள் இங்குள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.

மாணிக்கம் தாகூர் எம்.பி

எங்களில் பலருக்கு உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லை. மருந்துகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். எங்கள் பிரச்னை தொடர்பாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) செந்தில்குமார் எம்.பி-யை டேக் செய்து ஒரு ட்வீட் போட்டேன். சற்று நேரத்தில் இங்குள்ள எம்.பி-யின் அலுவலகத்திலிருந்து எங்களைத் தொடர்புகொண்டார்கள்.

ராஜீவ் சதவ் எம்.பி-யும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரும் நேரில் வந்துவிட்டார்கள். எங்களை அவர்களின் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்தார்கள். வேறு எந்த உதவி வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள் என்று ராஜீவ் சதவ் எம்.பி கூறியிருக்கிறார். ஒரு ட்வீட்தான் போட்டேன். அதற்கு இப்படியொரு ரெஸ்பான்ஸ் இருக்கும், இத்தனை பேர் உதவ முன்வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி-யிடம் நாம் பேசினோம். “செந்தில்குமார் எம்.பி-யின் ரீட்வீட்டை யதேச்தையாகப் பார்த்தேன். உடனே, எங்கள் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி-யான ராஜீவ் சதவ்வைத் தொடர்புகொண்டேன். உடனே உதவுவதாகக் கூறினார். அந்த இளைஞர்கள் சமீபத்தில்தான் அங்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதனால், அவர்களுக்கு இந்தி தெரியவில்லை. அதனால் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ராஜீவ் சதவ்வும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவரும் நேரில் சென்று தேவையான உதவிகளைச் செய்துள்ளனர்.

ராஜீவ் சதவ்

இதேபோல அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுமார் 100 பேர் மும்பையிலிருந்து ஊருக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு பேசினேன். இப்போது அவர்கள் ஊருக்குத் திரும்ப போக்குவரத்து வசதிகள் இல்லை என்றும், விமானப் போக்குவரத்து தொடங்கியதும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றும் சொன்னார்கள். இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளையும் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் மூலமாக செய்திருக்கிறோம்” என்றார் மாணிக்கம் தாகூர்.

செந்தில்குமார் எம்.பி-யின் ரீட்வீட்டைப் பார்த்துவிட்டு, சத்தீஸ்கரில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அலெக்ஸ் பால் மேனன், யவத்மால் மாவட்ட கலெக்டரைத் தொடர்புகொண்டு, தமிழக இளைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அலெக்ஸ் பால் மேனன்

மனிதநேயம் மகத்தானது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.