தமிழகத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் வைரஸ் பரவியது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கொரோனா தொற்று நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான். வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்து, அமெரிக்கா, இந்தோனேஷியா, நியூசிலாந்து, பிரான்ஸ், பிரிட்டன், துபாய், ஸ்பெயின், தாய்லாந்து, ஓமன், அபுதாபி,தோஹா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாகவும் மற்ற நகரங்கள் வழியாகவும் தமிழகம் வந்தவர்கள் மூலம் கொரோனா பரவியது.
இரண்டாவதாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மூலம் வைரஸ் பரவியது. குறிப்பாக டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர் திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மூன்றாவதாக தொற்று ஏற்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரவியது.
தாய்லாந்தில் இருந்து வந்தவர்களுடன் பயணித்து தொற்றுக்கு ஆளான நபருக்கும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் அவரது வீட்டில் இருந்த மூவருக்கும் கொரோனா பரவியது. மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினருக்கு அவர் மூலம் கொரோனா பரவியது.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது நபருக்கு கொரோனா உறுதியான நிலையில் எதன் மூலம் தொற்று ஏற்பட்டது என கண்டறியப்படவில்லை. ஆனால் அவர் குடியிருப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா பரவியது. அதேபோல கன்னியாகுமரியை சேர்ந்த 35 வயது ஆணுக்கும், சென்னையில் பீனிக்ஸ் மாலில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கும், திருச்சியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கும் கொரோனா எந்த வழியாக பரவியது என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஊரடங்கு நேரத்தில் கார், பைக்கை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்?