பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஒரு நாட்டில் பல ஆண்டுகளாக மழையே இல்லை. மக்கள் உணவு மற்றும் நீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டனர். அந்த நாட்டின் அரசன் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளைக் கூட்டி இதற்கு என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தினார்.
மக்களால் மரங்கள் பெருமளவு வெட்டப்பட்ட காரணத்தால்தான் மழை பெய்வது குறைந்துள்ளது என அதிகாரிகள் குழு அரசனுக்கு சுட்டிக்காட்டியது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு திட்டத்தைச் செயல்படுத்தலாம் என அரசர் தீர்மானித்தார்.
அந்தத் திட்டத்தை அரசர் விவரிக்க ஆரம்பித்தார். “நமது படைவீரர்கள் முழுவதுமாக இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவர். மொத்த வீரர்களும் இரு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். முதல் குழுவின் பணி ஒவ்வொரு கிராமமாகச் சென்று 1000 குழிகளைத் தோண்டுவது.
இரண்டாவது குழுவின் பணி அந்த 1000 குழிகளை மூடி தண்ணீர் ஊற்றுவது” என்றார்.

அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒன்றுமே புரியவில்லை. தலைமை அமைச்சர் அரசனிடம் “அரசே! ஒவ்வொரு கிராமத்திலும் 1000 குழிகளைத் தோண்டி பிறகு மூடுவதால் என்ன பயன்? அது மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊர்களிலும் இவ்வாறு குழிகளைத் தோண்டி மூடுவது நம் படைகளுக்கு மிகமிகக் கடினமான ஒன்றல்லவா? கருவிகள், போக்குவரத்து, உணவு என ஏராளமான நிதியும் இதற்கு செலவாகுமே! இவ்வளவு வீரர்களையும் நிதியையும் நாம் எதற்காக செலவிட வேண்டும்? என்று கேட்டார்.
அரசன் சிரித்துக்கொண்டே “நிதியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. மக்கள் நலனே முக்கியம். கருவூலம் முழுக்க தீர்ந்து போனாலும் நான் கவலைப்படப் போவதில்லை. குழிகளை நாம் வெறுமனே மூடப்போவதில்லை.
குழிகள் தோண்டப்பட்ட பின்பு, அதில் தேவையான உரிய விதைகளை அந்தந்த ஊர் மக்கள் போட வேண்டும். பிறகு நமது வீரர்களால் குழிகள் மூடப்பட்டு நீர் ஊற்றப்படும். இதுதான் திட்டம்” என்றார் அரசர்.
“அருமையான திட்டம் அரசே! விதைகளையும் நமது வீரர்களே போட்டுவிடலாமே! ஏன் மக்களை இதில் ஈடுபடுத்த வேண்டும்?” என்றார் தளபதி.
“விதைகள் போதுமான அளவு நம்மிடம் கையிருப்பு இல்லை. அவற்றை சேகரிக்க நீண்ட காலம் ஆகும். ஆனால், அந்தந்த கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான விதைகளை சேகரிப்பது எளிது.

எனவேதான் மக்களை விதைகளைப் போட வைக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்” என்றவாறு புன்னகைத்தார் அரசர்.
திட்டம் குறித்து அனைத்துக் கிராம மக்களுக்கும் விரிவாக அறிவிக்கப்பட்டது.
திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. நாட்டு மக்கள் தம்முடைய நல்வாழ்வுக்காக, எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி அரசு கூறியபடி விதைகளை குழிகளில் போட்டு தங்கள் கடமையாற்றினர். காலையில் வரும் வீரர்கள் குழு குழிகளைத் தோண்டிவிட்டுச் சென்றது. மாலையில் வந்த குழு குழிகளை மூடி தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றது.
ஆனால், பல கிராமங்களில் மக்கள் தம் எதிர்காலம் குறித்த பயமின்றி, அரசு கொடுத்த உணவுப்பொருள்களை அதீதமாகப் பயன்படுத்தி வீணடித்தனர்.
மேலும் வீணான கேளிக்கைகளிலும் வேடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்ட காரணத்தால் அரசு அறிவித்தபடி விதைகளை குழிகளில் போடுவதற்கு மறந்துபோய் விட்டனர். வழக்கம்போல காலையில் வந்த வீரர்கள் குழு குழிகளைத் தோண்டிவிட்டுச் சென்றது. மாலையில் வந்த குழு குழிகளை மூடி தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றது. விதைகள் போடப்படவே இல்லை.
எனவே, இந்த சிறப்பான திட்டம் படுதோல்வி அடைந்தது. மீண்டும் நாட்டில் மழையின்றிப் போனது. அத்தனை பேரின் உழைப்பும், பணமும் வீணானது மட்டுமன்றி மக்கள் உணவின்றி பஞ்சத்தின் பிடிக்குள் ஆளாகும் நிலை ஏற்பட்டது!
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். அரசாங்கமும், அதிகாரிகளும், மருத்துவத்துறையும் தொடர்ந்து கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால், மக்களாகிய நாம் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவற்றால் பயன் ஏற்படும். இல்லாவிடில் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுமே `விழலுக்கு இறைத்த நீராக’ வீணாகத்தான் போகும்.
எனவே, அரசு கூறக்கூடிய அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுவது இன்றைய சூழலில் அவசியம். இதுதான் புத்திசாலித்தனமும் கூட. மேலும், இது தற்போதைய நமது சமூகத்துக்கு மட்டுமல்லாது, நமது எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய கைமாறாகும்!
நாம் இன்று பூமியின் வளங்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய எதிர்கால சந்ததியினர் வசிப்பதற்கு பூமியையாவது பாதுகாப்பான நிலையில் விட்டு விட்டுச் செல்வது நம்முடைய அடிப்படை அறம் ஆகும்!
“ஒரு முட்டாள் தன் நண்பர்களைப் பயன்படுத்துவதைவிட, அறிவாளி தன் எதிரிகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வான்” என்பார்கள். நாம் அறிவாளிகள் என்பதை உலகுக்கு உணர்த்த ஒரு சந்தர்ப்பம் இன்று வாய்த்துள்ளது.
“தகுதி உள்ளதே தப்பிப்பிழைக்கும்” எனவே, நாம் தகுதியுள்ளோராய் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசின் அறிவுரைகளைத் திறந்த மனதுடன் ஏற்போமாயின், இந்தக் கொடிய நோயிலிருந்து நாம் தப்பிப் பிழைப்பது உறுதி!
– அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.