கொரோனாவின் தீவிரம் நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில், லைசென்ஸ் புதுப்பித்தல், வாகன மறுபதிவு செய்தல் போன்ற பணிகள் முடங்கியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த வேலைகளுக்கான கடைசித் தேதியை நீட்டித்துள்ளது.

இந்த லாக்டவுன் வேலையில், சரக்குப் போக்குவரத்து மிகவும் முக்கியமானது என்பதால் பிப்ரவரி 1-ம் தேதியோடு முடிவுக்கு வந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுகளின் கடைசி நாளை ஜூன் 30 என எடுத்துக்கொள்ளும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இதில், ஓட்டுநர் உரிமம், வாகனங்களின் பதிவு, அனைத்து விதமான பர்மிட் மற்றும் ஃபிட்னஸ் சான்றிதழ் போன்றவை அடங்கும்.
Also Read: கொரோனா… பயணிகள் கவனத்துக்கு!
மொத்த நாடும் தற்போது வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இந்த வேலையில் லைசென்ஸ், FC புதுப்பிப்பது போன்ற அரசு அலுவல்கள் எல்லாம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் ஆரம்பத்திலிருந்தே தமிழகத்தில் இருக்கும் பல RTO அலுவலகங்களில் லைசென்ஸ் புதுப்பிக்கும் வேலைகள் எல்லாம் நிறுத்திவைக்கப்பட்டு புது வாகனத்தின் பதிவுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. மார்ச் 23 முதல் மொத்தமாக அந்த வேலையும் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், பல ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனங்கள் புதுப்பிக்கப்படாமல் வெளியே எடுக்கப்படாமலேயே இருந்தன. தற்போது இந்த ஆவணங்களின் கடைசித் தேதியை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளதால் முடங்கியிருக்கும் சரக்கு வாகனங்கள் சில பயன்பாட்டுக்கு வரும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசு இன்னும் எந்த அரசாணையும் பிறப்பிக்கவில்லை. தமிழ்நாடு அரசின் ஆணை வந்தபிறகே இது தமிழ்நாட்டில் செயல்பாட்டுக்கு வரும்.