கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓ.என்.ஜி.சி நிறுவனம் இதை மதிக்காமல் தற்போதும்கூட காவிரி டெல்டா கிராமங்களில் எரிவாயு கிணறு அமைக்கும் பணிகளைத் தொடர்வதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆதங்கப்படுகிறார்.

பி.ஆர் பாண்டியன்

கொரோனா வைரஸ் பரவலால், ஒட்டுமொத்த உலகமும் பெரும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்துள்ளது. இந்தியாவில் கொரானா ஊரடங்கு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சூழலிலும்கூட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது பணிகளைத் தொடர்வதாகவும் இதனால் கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “காவிரி டெல்டாவில் ONGC நிர்வாகத்தினர், சட்டவிரோத கிணறு அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பல நாடுகள், மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரப்பகுதி விடுதிகளில் தங்கி பணியிடப் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றிவிட்டு தங்களது விடுதிகளுக்கு வருவதற்கு 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கிராமங்களில் அன்றாடம் காலை, மாலை அணிவகுக்கிறது. எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதில்லை. வாகன ஓட்டிகளும் விடுப்பு அளிக்க மறுப்பதால் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் வசிப்பிடப்பகுதிகளில் தங்கி அச்சத்துடன் பணிபுரிகின்றனர்.

Also Read: புதுச்சேரியில் இருவருக்குக் கொரோனா தொற்று! – சீல் வைக்கப்பட்ட 2 பகுதிகள்

கொரோனா நோய்த் தொற்று கிராமப் பகுதிகளில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ONGC-யின் பணிகளையும் தடுத்து நிறுத்தி கிராமப் பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டும். இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.