நாஸ்டால்ஜியாக்களில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருக்கும் 90’ஸ் கிட்ஸ்களுக்காகவே லாக் டவுன் நாள்களில் மீண்டும் சக்திமான் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது டிடி. நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த சக்திமான் தொடரை வரவேற்க `சக்தி சக்தி சக்திமான்’ டைட்டில் சாங்கை ஸ்டேட்டஸில் ஓடவிட்டுக் காத்திருக்கின்றனர் சக்திமானின் முரட்டு பக்தர்களான 90’ஸ் கிட்ஸ். ஆயிரம் கோடி பட்ஜெட்டில் வெளியாகும் மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை 3டி-யில் பார்த்து பிரம்மித்தாலும் சக்திமான்தான் 90’ஸ் கிட்ஸின் எமோஷன். கொஞ்சம் இன்னும் ஆழமாக 90’ஸ் கிட்ஸின் ஆழ்மனதுக்குள் பயணித்துப் பார்த்தால் சக்திமான் போன்றே பல டிவி தொடர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே எடுத்து வைத்த சீரியல் ஃபுட்டேஜ் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இந்த வாரத்திலிருந்து பல டிவி சேனல்களும் பழைய சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் ரீ டெலிகாஸ்ட் செய்யத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் எந்தெந்த நாஸ்டால்ஜிக் நிகழ்ச்சிகளை ரீ டெலிகாஸ்ட் செய்யலாம் என்று சின்ன பரிந்துரை…

சக்திமான்

சன் டிவி, விஜய் டிவி இந்த இரண்டு சேனல்களும்தான் அதிகப்படியான நாஸ்டால்ஜிக் நிகழ்ச்சிகளை பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கின்றன.

முதல் கோட்டாவாக மெட்டி ஒலியை இறக்கவிருக்கிறது சன் டிவி. மெட்டி ஒலி அந்தக் காலத்து டெராபைட் ஹிட். மெட்டி ஒலியின் கடைசி எபிசோட் முடிந்த மறுநாள் சனிக்கிழமை ஈவ்னிங் முழுவதும் மெட்டி ஒலி சீரியல் குழுவினர் நேரலையில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தும் அதை ஏதோ புதுப்படத்தைப் பார்ப்பதுபோல் உட்கார்ந்து பார்த்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. சீரியலின் ஓப்பனிங் சாங்கான `அம்மி அம்மி மிதித்து’ பாடலுக்கும், சாந்தி மாஸ்டரின் நடனத்துக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. புதன்கிழமையிலிருந்து மதியம் 1 மணிக்கு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது மெட்டி ஒலி. ஃபேன்ஸ் டோண்ட் மிஸ் இட்!

ஃபேவரிட் சீரியல் என்று நாஸ்டால்ஜிக் பேசும் இடங்களிலெல்லாம் தவறாமல் இரண்டு சீரியல்கள் இடம்பெற்றுவிடுகிறது. ஒன்று மர்மதேசம்; இன்னொன்று மை டியர் பூதம். இரண்டுமே சன் டிவியில் ஒளிபரப்பானவையே. இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் இயக்குநர் இமயம் கே.பாலசந்தர் தயாரிப்பில் உருவான திகில் தொடர் மர்மதேசம். சன் டிவி, ராஜ் டிவி, வசந்த் டிவி என சேனல் டெலிகாஸ்ட்களில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டாலும் இன்றும் கவிதாலயா யூடியூப் சேனலில் டிரெண்டிங். அதேபோல்தான் மைடியர் பூதமும் இது 90’ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்லாமல் 2-கேயின் முற்பகுதியில் பிறந்தவர்களுக்கும் மோஸ்ட் ஃபேவரைட் சீரியல். இந்த இரண்டையும் சன் டிவி ரீ டெலிகாஸ்ட் செய்தால் செல்லுக்கும் ரிமோட்டுக்கும் ஓய்வு கொடுத்து சிலுத்துபோய் சில்லறையை செதறவிடுவார்கள் 90’ஸ் கிட்ஸ். சன் டிவி, ப்ளீஸ் கன்ஸிடர் இட் !

சீரியல்களைத் தாண்டி சன் டிவியின் கேம் ஷோக்களுக்கும் தனிரசிகர் பட்டாளம் உண்டு.

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய `தங்கவேட்டை’யும் ரிஷி தொகுத்து வழங்கிய `டீலா நோ டீலா’வும் வீக்கெண்ட் வின்டேஜ்கள். கோபிநாத்தை கோட் கோபி என்று டிரெண்டு செய்பவர்கள் ரிஷியின் கோட் சூட் ஸ்டைலை உணராதவர்கள், அவர்களுக்காகவாவது மீண்டும் இந்த ஷோக்களை ரீடெலிகாஸ்ட் செய்யலாமே!

ஷகலக பூம் பூம்

இன்னும் கோலங்கள், சித்தி, செல்வி என சன் டிவியின் நாஸ்டால்ஜிக் சீரியல்களை லிஸ்ட் போட்டால் அடிஷ்னல் ஷீட் தேவைப்படும் என்பதால் அப்படியே விஜய் டிவிக்கு வருவோம்.

அந்த சைடு எப்படி மை டியர் பூதமோ அதேமாதிரி இந்த சைடு ஷக்கலக்க பூம் பூம். அந்தப் பொம்மை பென்சில் மீது அப்படியொரு க்ரேஸ், அப்படியொரு பென்சில் மட்டும் இருந்திருந்தால் இந்தியாவை 90’ஸ் கிட்ஸே வல்லரசாக்கியிருப்பார்கள். இப்போது இதை ரீ டெலிகாஸ்ட் செய்தால் போரடித்து போயிருக்கும் எல்லாரும் நாஸ்டால்ஜிக் ஃபேன்டஸி உலகில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்.

கனா காணும் காலங்கள். அப்போதே இந்த சீரியலில் நடித்த எல்லோரும் ஹீரோ ஹீரோயின்களாக கொண்டாடப்பட்டனர். இப்போது பார்த்தால் ஸ்கூல் டேஸும் ஃபேர்வல் டேஸும் ஞாபகம் வந்து உள்ளுக்குள் இருக்கும் 96 எமோஷன்களை நோண்டி பார்க்கும். விஜய் டிவியின் ஃபேவரிட் லிஸ்ட்டின் டாப்பில் எப்போதும் கனா காணும் காலங்கள் இருக்கும்.

தமிழின் முதல் மூவி ஸ்பூஃப் நிகழ்ச்சியான லொள்ளு சபா கேங்க்குக்கு இன்றும் வெறித்தனமான ஃபேன்ஸ் இருப்பத்தால் அதையும் டெலிகாஸ்ட் செய்யலாம்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் செய்தது எல்லாமே அல்ட்டிமேட் என்டர்டெயின்மென்ட்ஸ். அது இது எது!? பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி ந.1 சீஸன் – 5 என சிகா ரவுண்டு கட்டி செய்த அலப்பறைகள் அனைத்தும் ரிப்பீட் வேல்யூ கொண்ட காமெடி பட்டாசுகள். அந்தப் பட்டாசுகளையும் இப்போது கொஞ்சம் கொளுத்திப் போடுங்கள் விஜய் டிவி.

மூஸா – மை டியர் பூதம்

சூர்யா தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் பெஸ்ட் மொமன்ட்ஸ், காஃபி வித் அனு, காஃபி வித் டிடி யின் க்ளாசிக் பேட்டிகள், கமல் 50, யேசுதாஸ் 50 நிகழ்ச்சிகள் என எக்கச்சக்க ரீ டெலிகாஸ்ட் ரெட்ரோக்களை சேர்த்து வைத்துள்ள விஜய் டிவி கொஞ்சம் `கும்கி’, `துப்பாக்கி’ கேசட்களை ஒதுக்கி வைத்து விட்டு இதையெல்லாம் டெலிகாஸ்ட் செய்தால் ஹேப்பி க்வாரன்டீனாக முடியும் இந்த 21 நாள்கள்.

இதுபோக கிரிக்கெட் ரசிகர்களுக்கென்றே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பழைய மேட்ச்சுகளை ரிப்பீட் டெலிகாஸ்ட் செய்துவருகிறது. வருகிற 2-ம் தேதி இந்தியா உலகக் கோப்பையை வென்ற 9-ம் ஆண்டு. அன்றைக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ரீ டெலிகாஸ்ட் செய்யவிருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். வீரு, யுவி, சச்சின், கம்பீர், ஜாகீர் என எல்லோரின் ஃபேன்ஸும் தயாராகுங்கடே… அப்டியே இந்த ரிப்பீட் மேட்ச்சையெல்லாம் இந்தியில மட்டும் இல்லாம இங்கிலீஷ் கமென்ட்ரிலயும் சேர்த்து டெலிகாஸ்ட் பண்ணுங்களேன்…

ஸ்டே ஹோம்… ஸ்டே சேஃப்

ஹேப்பி க்வாரன்டீன் !

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.