“கரூர் மாவட்டத்தில், குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து 29 நபர்கள் தப்லிக் ஜமாத் மாநாட்டுக்காக டெல்லி சென்று வந்துள்ளார்கள்.

ஆய்வுக்கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அவர்கள் அனைவரும் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டு, அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர்” என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Also Read: டெல்லி சென்று வந்த பேராசிரியருக்கு கொரோனா தொற்று! – கரூரில் முதல் பாதிப்பு

கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பின்னர் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாவட்டத்தில், குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து 29 நபர்கள் தப்லிக் ஜமாத் மாநாட்டுக்காக டெல்லி சென்று வந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இந்த 29 நபர்களுக்குமான ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 29 நபர்களின் இருப்பிடங்கள், அவர்களுடைய குடும்பத்தார், அவர்கள் எங்கெங்கு சென்று வந்தார்கள் என்பது குறித்த அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு, அவர்களைக் கண்காணிக்க அரசு அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போர்க்கால அடிப்படையில் கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்தல் உள்ளிட்ட பல்வேறுகட்ட நடவடிக்கைகள் அரசின் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகின்றது. அவருடன் வந்தவர்களில் சென்னையிலிருந்து வந்த ஒருவர் பெருந்துறை அரசு மருத்துவமனையிலும், 2 நபர்கள் திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வட்டங்கள் வாரியாகத் துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் தலைமையிலும், நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் தலைமையிலும் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கூட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்தக் குழுக்களில் வட்டாட்சியர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கொரோனா தடுப்புக் குழு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 50 வீடுகளைக் கண்காணிக்க ஒரு அலுவலர் என்ற வகையில் நியமிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மருந்தகங்களுக்குச் செல்வோர், காய்கறிகள் கொண்டு செல்வோர், பொதுமக்களுக்கு வீடுகளுக்கே மளிகைப் பொருள்களை வழங்கும் நபர்கள் என அத்தியாவசிய பணிகளுக்காகச் செல்லும் நபர்கள் 260 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அனைத்து விதமான அத்தியாவசிய பொருள்களும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் அதிகம் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.