கொரோனா இருப்பதாக வதந்தி பரப்பியதால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தமிழகத்திலேயே முதலாவதாக மதுரையில் ஒருவர் கொரோனாவினால் மரணமடைந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் மதுரையில் குறிப்பிட்ட பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் கொரோனா சம்பந்தமாக வதந்திகளும் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன.

அதுபோன்ற ஒரு வதந்தியால் மதுரையைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளார். வில்லாபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மதுரைக்கு வந்து தன் தாயாருடன் வசித்து வந்தார். வந்தவருக்குக் காய்ச்சல் இருந்துள்ளது. இத்தகவல் அப்பகுதி மக்களுக்குத் தெரிந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Representational Image

அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அவரையும் அவர் தாயாரையும் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்குக் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் அவர் நேற்று முன் தினம் வீட்டிலிருந்து கிளம்பியவர் கப்பலூர் ரயில்வே தண்டவாளம் அருகே நின்றுகொண்டிருந்தார். அனைத்துப் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கொரோனா

இச்சம்பவம் பற்றி விசாரித்ததில், அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் அனுப்பிய பின்பும், அவர் வசித்த பகுதி மக்களில் சிலர் இவருக்குக் கொரோனா இருப்பதாக வதந்திகளைப் பரப்பி வந்திருக்கிறார்கள். இதைக்கேட்டு மனம் பொறுக்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்கிறர்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.