இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி கண்டறியப்பட்டார். தென்னிந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவில்தான் அதிகம். அங்கு, 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதே நேரத்தில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் கேரளா முன்னணி மாநிலமாக விளங்குகிறது. தற்போதைய சூழலில் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்குப் பல்வேறு திட்டங்களையும் கேரள அரசு செயல்படுத்திவருகிறது.

கேரளாவில் கட்டுமானத் தொழில் உட்பட பல்வேறு தொழில்களில் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களைத் தங்களின் `விருந்தினர் தொழிலாளர்கள்’ (Guest Workers) என்று குறிப்பிட்டுக் கௌரவப்படுத்தும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு, அந்தப் புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு வேண்டிய தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
இந்நிலையில், கோட்டயம் – பத்தினம்திட்டா மாவட்ட எல்லையில் உள்ள பைப்பாடு என்ற கிராமத்தில் சுமார் 2,000 புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஞாயிறன்று (மார்ச் 29-ம் தேதி) திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஏராளமான தொழிலாளர்கள் திடீர்ப் போராட்டத்தில் இறங்கியது கேரள அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள ஒரு மாநிலத்தில் 2,000 பேர் ஒரே இடத்தில் கூடியது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள். சொந்த ஊருக்குப் போக வேண்டும், அதற்கு தேவையான வாகன ஏற்பாடுகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. காலை 11 மணியளவில் செங்கனசேரி – மல்லப்பில்லி சாலையை அவர்கள் மறித்தனர். காவல்துறையினரும் உள்ளூர் அதிகாரிகளும் பஞ்சாயத்து அமைப்பின் பிரதிநிதிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியர் பி.கே.சுதீர் பாபு, மாவட்ட எஸ்.பி-யான ஜி.ஜெய்தேவ் ஆகியோர் விரைந்துசென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கும் துறை அமைச்சர் பி.திலோத்தமனும் அங்கு விரைந்து சென்றார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கேரள அரசு சந்தேகிக்கிறது. ஏனெனில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு, வடமாநிலத் தொழிலாளர்களிடமிருந்து இத்தகைய கோரிக்கை இதற்கு முன்பு எழவில்லை. அப்படியிருக்கும்போது, திடீரென இப்போது அவர்கள் போராட்டம் செய்வதன் பின்னணியில் சதி இருக்கிறது என்று கேரள அரசு நினைக்கிறது. இது குறித்து கேரள அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் பேசியபோது, “டெல்லியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக உ.பி-க்கும் ராஜஸ்தானுக்கும் கூட்டம் கூட்டமாக நடந்தே செல்கின்றனர். அதைப்போல நாமும் நம் சொந்த ஊருக்குப் போய்விடலாம் என்று வாட்ஸ்அப் மூலம் பரப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்துதான், இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.
பைப்பாடில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வேறு இடங்களிலும் இதே போன்ற போராட்டங்கள் நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக, கேரளா முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என்று கிடைத்த தகவலையடுத்து பத்தனம்திட்டாவில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். “இந்தப் போராட்டம் துரதிர்ஷ்டமானது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன், “தங்குமிடம், உணவு, மருத்துவம் உட்பட விருந்தினர் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் உறுதிசெய்துள்ளோம்” என்றார்.
இது குறித்து கேரள உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் திலோத்தமனிடம் பேசியபோது, “கேரளாவில் 1,70,000-க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் 5,000 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் அரசு சார்பில் தரப்பட்டுள்ளன. அவர்களை `விருந்தினர் தொழிலாளர்கள்’ என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அந்தளவுக்கு அவர்களின் பிரச்னைகளில் நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம். அவர்களுக்குச் சிறு குறை என்றாலும் உடனடியாக அதைச் சரிசெய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில், மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சில சமூகவிரோத சக்திகள் செயல்படுவதாகத் தெரிகிறது. அந்த சக்திகளை விரைவில் அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு பிரதமர் கூறியிருக்கும்போது, அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடு முழுவதும் தொற்றுநோய் பாதிக்கப்பட்டிருக்கும்போது, வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களின் ஊர்களுக்கு அனுப்புவது இயலாத ஒன்று.
Also Read: 10 லட்சத்தில் 32 பேர்; `விதிவிலக்கு’ கேரளா! – இந்தியாவில் கொரோனா டெஸ்ட் தரவுகள் சொல்வது என்ன?
அவர்களுக்கு இன்னும் கூடுதலான வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. அந்தந்த மாநில மக்களின் உணவு வகைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தாங்களாகவே சமைத்துக்கொள்ள யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வளவு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவரும் சூழலில், மாநிலத்தின் அமைதியைக் குலைப்பதற்கான முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது. இத்தகைய முயற்சியில் ஈடுபடும் சமூகவிரோத சக்திகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.