இந்தியாவில் ஏன் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? கொரோனா வைரஸ் தொற்று கொள்ளை நோயாக உருவெடுத்ததால் நமது சுகாதாரத்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம். இதை SUFFOCATION OF HEALTH SYSTEM என்று கூறுகிறோம்.

அதாவது, நம்மிடம் இருக்கும் சுகாதார வசதிகளை வைத்துக்கொண்டு நம்மால் எத்தனை நோயாளிகளைத் திறம்பட கவனித்து குணப்படுத்த முடியும் என்பதைப் பொறுத்தே நம்மால் கோவிட் கொள்ளைநோயை எதிர்கொள்ள முடியும்.

கொரோனா – மருத்துவப் பணியாளர்கள் நலன்

இப்போது கோவிட், கொள்ளை நோயாக உருவெடுத்துள்ள சீனா, இத்தாலி, இரான், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் சுகாதாரத்துறை ஸ்தம்பித்திருப்பதே…

இதை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம். ஜான் ஹாப்கின்ஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இந்த நோய் கொள்ளைநோயாக உருவெடுத்து இந்தியாவில் பரவினால் குறைந்தபட்சம் 22 லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் தேவைப்படும் நிலை ஏற்படும். அவர்களில் சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேருக்கு வென்ட்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசக்கருவி தேவைப்படும் நிலை ஏற்படும் என்றும் அந்த ஆய்வு கணித்துள்ளது.

லாக் டவுன்’ வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை அரசு பொது சுகாதாரத்துறை எடுத்து வருவதால் இந்தியாவில் கோவிட் 19, இன்னும் கொள்ளைநோயாக உருவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் ஏன் இந்த லாக் டவுனைக் கடைப்பிடிக்க வேண்டும்… ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்..?

`லாக் டவுன்’ குறித்த அறிவிப்பை இந்திய பிரதமர் மோடி அறிவிக்கும்போது, “வளர்ந்த நாடுகளே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்த 21 நாள்கள் நாம் தனித்திருக்காவிட்டால் 21 வருடங்கள் பின்னோக்கிச் சென்று விடுவோம்” என்றார்.

இந்த வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் உண்மையை உணர்ந்தால் நாம் இந்த ஊரடங்கை முறையாகக் கடைப்பிடிப்போம்.

கொரோனா – மருத்துவப் பணியாளர்கள்

2019-ம் ஆண்டு NATIONAL HEALTH PROFILE கணக்கெடுப்பின் படி

இந்தியாவில் உள்ள மொத்த அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளி படுக்கைகள் 7,13,986. அதாவது, ஒவ்வோர் ஆயிரம் பேருக்கும் 0.55 படுக்கைகள் என்பது இந்திய சராசரி.

இவற்றுள் கோவிட்-19 நோயின் தீவிர பாதிப்புக்குள்ளாகும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான படுக்கை கையிருப்பு சராசரியாக ஒவ்வோர் ஆயிரம் முதியோர்களுக்கும் 5.18 படுக்கைகள்.

இந்திய சராசரியைவிடவும் குறைவான படுக்கை கையிருப்பு வைத்திருக்கும் மாநிலங்கள் பின்வருமாறு.

1. பீகார்

2. ஜார்க்கண்ட்

3. குஜராத்

4. உத்தரப்பிரதேசம்

5. ஆந்திரப்பிரதேசம்

6. சத்தீஸ்கர்

7. மத்திய பிரதேசம்

8. ஹரியானா

9. மகாராஷ்ட்ரா

10. ஒடிசா

11. அஸ்ஸாம்

12. மணிப்பூர்

இந்திய சராசரியைவிட அதிகமாக அரசாங்க மருத்துவமனைகளில் படுக்கைகள் வைத்திருக்கும் மாநிலங்கள்

மேற்கு வங்காளம் ( 2.25/1,000)

சிக்கிம் ( 2.34/1,000)

தமிழ்நாடு ( 1.1/1,000)

புதுடெல்லி (1.05/1,000)

மேலும் முதியோர்களுக்குத் தேவையான படுக்கைகளிலும் மற்ற மாநிலங்கள் பின்தங்கியே இருக்கின்றன

கொரோனா – மருத்துவப் பணியாளர்கள்

முதியோர்களுக்குத் தேவையான படுக்கைகளின் கையிருப்பில் இந்திய சராசரியைவிட அதிகமாகக் கையிருப்பு வைத்திருக்கும் தென்மாநிலங்கள் பின்வருமாறு…

கர்நாடகா ( 8.6/1,000)

தமிழ்நாடு (7.8/1,000)

கேரளா ( 7.4/1,000)

கோவிட்19 நோய் தாக்குபவர்களில் 13.8% பேருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிஷன் தேவைப்படும். 4.7% பேருக்கு அதிதீவிர சிகிச்சை தேவைப்படும். அவர்களுள் 1% பேருக்கு வென்ட்டிலேட்டர் போன்ற மருத்துவக் கருவிகளுடன் செயற்கை சுவாசம் தர வேண்டியிருக்கும்.

இந்தியாவின் மொத்த வென்டிலேட்டர் கையிருப்பு குறித்த தகவல் நம்மிடம் இல்லை. இருப்பினும் மொத்த படுக்கைகளில் 8% -10% சதவிகிதம் ICU எனும் அதி தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளாக இருக்கலாம். எனவே 70,000 ICU படுக்கைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று கொள்ளலாம். அதில் 25,000 முதல் 40,000 வென்ட்டிலேட்டர்கள் கொண்ட படுக்கைகளாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் அரசாங்கம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் இரண்டிலும் சேர்த்து ஏற்கெனவே 3,018 வென்ட்டிலேட்டர்கள் உள்ளன. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு இன்னும் 2,500 வென்ட்டிலேட்டர்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி பார்த்தால் நாட்டிலேயே அதிகமான வென்ட்டிலேட்டர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதற்கடுத்த இடங்களில் மகாராஷ்ட்ரா (1,299) ஆந்திரப் பிரதேசம் (1,094 ) இருக்கின்றன.

இப்போது அதி தீவிர சிகிச்சை தேவைப்படும் ஐசியு படுக்கைகளை வைத்து நமது நாட்டுடன் ஏனைய வளர்ந்த நாடுகளை ஒப்பிடுவோம்

அமெரிக்காவில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 34.2 ஐசியு படுக்கைகள் உள்ளன.

கொரோனா – மருத்துவப் பணியாளர்கள்

ஜெர்மனியில் 29.2 படுக்கைகள்.

இத்தாலியில் 12.5 படுக்கைகள்.

தென் கொரியாவில் 10.6 படுக்கைகள்.

ஜப்பானில் 7.3 படுக்கைகள்.

சீனாவில்3.6 படுக்கைகள்.

இந்தியாவில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் வெறும் 2.3 ஐசியு படுக்கைகள் மட்டுமே உள்ளன.

இப்போது புரிந்திருக்கும் இந்தக் கோவிட் நோயின் தீவிரம்.

எனவே, நம்மால் இயன்ற அளவு அரசாங்கத்துக்குத் துணை நிற்போம். தனித்தனிருப்போம். வீட்டிலிருப்போம். சமூக விலகலால் இந்த நோய் கொள்ளைநோயாக உருவெடுக்காமல் நம்மால் நிச்சயம் தடுக்க முடியும். இந்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் நமது தமிழக அரசும் தங்களின் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே வருகின்றன. இருப்பினும் அவற்றுக்கெல்லாம் தேவையே ஏற்படாமல் நம்மால் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

தனித்திருப்போம்

விழித்திருப்போம்

வீட்டிலிருப்போம்!

Also Read: கொரோனா யுத்தம்! வீழுமா… வெல்லுமா தமிழ்நாடு?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.