தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மார்ச் 20-ம் தேதி வரை தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.

கொரோனா வார்டு

31-ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மட்டும் (1.4.2020) 110 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் “டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் 515 பேர் வரை கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்றார்.

சென்னையைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு வார்டுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் எனச் சிலரிடம் கேட்டோம். “தமிழகத்தில் 18,000-த்துக்கு மேற்பட்ட அரசு டாக்டர்கள் உள்ளனர். அவர்கள்தான் கொரோனா சிறப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர். நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களும் சிறப்பு வார்டுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நேரம் பார்க்காமல் நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது

Also Read: “போர்முனையில் இருந்தாலும்..!” -கொரோனா பணி; தமிழக அரசு டாக்டர்களின் 4 கோரிக்கைகள்

கொரோனா வார்டில் டாக்டர்கள்

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நலம் அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு மட்டுமே வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு ஊட்டச்சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. காய்ச்சல், இருமல், சளி ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் வார்டில், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்வதற்கான கருவிகள், இன்ஹேலர் , நெப்லஸர் ஆகியவை தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதால் அந்த வார்டில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு தனியாக கவச உடை வழங்கப்பட்டுள்ளது. அந்த உடையணிந்தவர்கள் மட்டுமே வார்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் யாருக்கும் அனுமதியில்லை. வார்டுக்குள் செல்பவர்களும் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் செயல்படுகின்றனர். சிகிச்சை அளிக்கும்போதும் கவனமாகச் செயல்படுகின்றனர்.

கொரோனா சிறப்பு வார்டு

வார்டுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. அதனால் அந்தச் சிறப்பு வார்டுகளில் பணியாற்றுபவர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதில்லை. காலில் இருந்து தலை வரை மூடும் வகையில் கவச உடைகளை மருத்துவர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் அணிந்துள்ளனர். அதனால் அவர்களால் தண்ணீர் குடிக்க முடியாது. அதோடு, அவசர (சிறுநீர்) தேவைகளுக்குக்கூட செல்ல முடிவதில்லை. காலையில் பணியைத் தொடங்கினால் தொடர்ந்து அவர்கள் பணியாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

அடுத்து கவச உடைகளை ஒரு நாளைக்குத்தான் பயன்படுத்துகின்றனர். பணி முடிந்ததும் அந்த உடைகள் பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றன. அடுத்து கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றுபவர்கள் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. மூக்கு, வாய், கண்கள் வழியாகத்தான் இந்தக் கோவிட் 19 வைரஸ் மனித உடலுக்குச் செல்கிறது. அதனால் இந்த வார்டுகளில் பணியாற்றுபவர்கள், தங்களின் மூக்கு, வாய், கண்கள் பகுதியை தொடுவதைத் தவிர்த்துவருகின்றனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அதில் இருமல், தும்மல், காய்ச்சல் இருந்தாலும் அவர்களின் உடல் நலம் நார்மலாக இருந்தால் அவர்களை வார்டுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்து உடல் நலம் தொடர்ந்து மோசமாக இருந்தால் அவர்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது தமிழகத்தில் 1, 2 ஆகிய பிரிவுகளில்தான் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு மருந்துகள் இல்லை என்பதால் அதற்கு சப்போர்ட்டிங் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் காசநோய் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன. அதன்காரணமாக கொரோனா பரவுவது குறைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. சுகாதாரத்துறை வலியுறுத்தும் மருந்து, மாத்திரைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுவருகிறது” என்றனர்.

கொரோனா வார்டு

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 2 அல்லது 3 நாள்கள் என்ற அடிப்படையில் வேலை வழங்கலாம் என்ற ஆலோசனை உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணியமர்த்தப்படுவோர்களுக்கு விடுதி வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணியாற்றுவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.

தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா தனிமைவார்டுகளில் தன்னலமற்று பணியாற்றுவோர்களை வாழ்த்துவோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.